வெளியிடப்பட்ட நேரம்: 08:09 (17/03/2017)

கடைசி தொடர்பு:08:11 (17/03/2017)

"சசிகலா செய்யத் தவறியது என்ன?" அலசும் தலைவர்கள்!

சசிகலா

'அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லுமா, செல்லாதா?' என்ற ஒற்றைக் கேள்விக்கான விடையை தேர்தல் ஆணையம் அறிவிப்பதில் இருந்துதான் ஒட்டுமொத்த தமிழக அரசியல் நகர்வுகளுமே ஆரம்பமாக இருக்கின்றன. 

தற்காலிகப் பொதுச்செயலாளர் சசிகலா!

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருந்துவந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அதன் பிறகு, கடந்த 31-12-2016 அன்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க-வின் மூத்த உறுப்பினர்களது விருப்பத்தின் பெயரில், அக்கட்சியின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு அவரே பிப்ரவரி 5-ம் தேதி சட்டமன்ற அ.தி.மு.க குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி பலப்பரீட்சை நடத்திய பிறகு, கட்சி இரண்டு அணியாகப் பிரிந்துவிட்டது.
இப்போது, 'அ.தி.மு.க சட்ட விதிகளின்படி, சசிகலா பொதுச்செயலாளராகப் பதவி ஏற்றது செல்லாது' என்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்று விளக்கம் கொடுத்துவந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். வருகிற 20-3-2017- அன்று தேர்தல் ஆணையமும் இவ்விஷயத்தில், தனது முடிவை அறிவிக்க இருக்கிறது. அப்போது, தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப்போகிறது? என்பதுதான் தமிழக அரசியலின் இதயத்துடிப்பை எகிறவைக்கும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தேர்தல் ஆணையம் என்ன சொல்லும்?

பொதுத்தேர்தல்கள் மட்டுமல்லாது, அரசியல் கட்சிகளுக்குள் நடைபெறும் உட்கட்சித் தேர்தலிலும், கட்சியின் சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. அந்தவகையில், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டிய இடத்தில் இருக்கிறது தேர்தல் ஆணையம். தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தே.மு.தி.க வேட்பாளராக மதிவாணன், தி.மு.க வேட்பாளராக மருது கணேஷ், அ.தி.மு.க-வில் சசிகலா அணி சார்பாக டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாக்கு சேகரிப்பிலும் இறங்கிவிட்டனர். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இருவருமே தங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் சொந்தம் என்று உரிமை கோரி வருகின்றனர். சசிகலா பதவி தப்புமா? இரட்டை இலை யாருக்கு? என்ற கேள்விகளுக்கான பதில், தேர்தல் ஆணைய அறிவிப்பில் இருக்கிறது.

செல்லுமா? செல்லாதா?

ஓ.பன்னீர்செல்வம்

'அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது' என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால், அவரால் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட டி.டி.வி தினகரனின் பதவியும் பறிபோகும். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் அ.தி.மு.க-வை கைப்பற்றுவர். அப்போது, ஆட்சி அதிகாரத்தை கைகளில் வைத்திருக்கும் சசிகலா தரப்பினருக்கும் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் எழும். 
மாறாக, 'சசிகலா பொதுச்செயலாளராகப் பதவி ஏற்றது செல்லும்' என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு அளிக்குமேயானால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரை சசிகலா தரப்பினர் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கியது செல்லுபடியாகிவிடும். இதையடுத்து புதிய கட்சியை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆரம்பிக்கும் சூழல் உருவாகும்.

கட்சியின் சட்ட விதிகள் சொல்வது என்ன?

பிரச்னையின் மூலஆதாரமாக இருக்கும் ''அ.தி.மு.க-வின் சட்ட விதிகள் இதுகுறித்து என்ன சொல்கின்றன?'' என்ற கேள்வியை கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரிடம் கேட்டோம்.

''தி.மு.க-வில் இருந்து பிரிந்துவந்த எம்.ஜி.ஆர் 1972-ம் வருடம், அக்டோபர் மாதம் 17-ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சியின் பொதுச்செயலாளராகவும் எம்.ஜி.ஆரே பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், அ.தி.மு.க சட்ட வடிவமைப்பிலும் பொதுச்செயலாளருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விதிகள் வரையறுக்கப்பட்டன. அப்போது,  43 வகையான பொருளடக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட அ.தி.மு.க சட்ட விதிகளை 2007-ல்  ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க செயற்குழு திருத்தியமைத்தது. அதாவது 43-வகையான பொருளடக்கத்துடன் மேலும் 3 பொருளடக்கங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 46-ஆக உயர்த்தப்பட்டது.

கட்சி சட்ட விதிகள்

இதில், உறுப்பினர்  என்ற தலைப்பில் பக்கம் 2-ல் 5-வது விதியின் கீழ், 'கட்சி நடவடிக்கையை எதிர்த்து யாரும் நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது. மாறாக நீதிமன்றத்துக்குச் செல்வார்களேயானால், சம்பந்தப்பட்ட நபர் கட்சியின் உறுப்பினர் தகுதியை இழந்துவிடுவார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  கட்சியில், பொதுச்செயலாளருக்கு அடுத்தப்படியாக அனைத்து அதிகாரமும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உண்டு. ஆனாலும், பொதுச்செயலாளர் நியமனத்தில் மட்டும் பொதுக்குழு உறுப்பினர்களால் எதுவும் செய்யமுடியாது. ஏனெனில், இந்தியா முழுக்க உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைத் தொண்டர்களால் மட்டுமே பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும். 

அ.தி.மு.க. ஆபீஸ்

பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கும்பட்சத்தில், கட்சியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகளுக்குத்தான் உண்டு என்கிறது சட்ட விதி. மேலும், அவர்களே பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலையும் நடத்த வேண்டும் என்று சொல்கிறது. மேலும் கட்சிப் பொறுப்பு மற்றும் பொதுத் தேர்தல்களில் பங்கேற்க விரும்புபவர்கள் தொடர்ச்சியாக 5 வருடங்கள் கட்சியின் உறுப்பினராக நீடித்திருக்க வேண்டும் என்ற விதியும் முக்கியமானதாக இருக்கிறது'' என்று கோடிட்டு காட்டினர்.

சசிகலா பதவி தப்புமா?

மேற்கண்ட கட்சி சட்ட விதிகளின் அடிப்படையை வைத்துப் பார்த்தால், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலாவால் நீடிக்க முடியுமா?  2012-ல் அ.தி.மு.க உறுப்பினராக கட்சியில் இணைந்த சசிகலா, முழுமையாக 5 வருடங்களைக் கடக்கும் முன்னரே தற்காலிகப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுவிட்டார். இது முதல் தவறு.

இரண்டாவதாக, பொதுச்செயலாளர் பதவி என்பது அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்று சட்டவிதிகள் தெளிவாக சொல்லும்போது, நியமனம் என்பது செல்லாததாகிவிடுகிறது. இதையடுத்து, அவரால் கட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லாததாகிவிடும். டி.டி.வி தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டதும், தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதும்கூட செல்லாததாகிவிடுகிறது.

எனவே, ஏற்கெனவே பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள் உடனடியாக தேர்தல் நடத்தி புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். தற்போதுள்ள சூழ்நிலையில், தலைமைக் கழக நிர்வாகிகள் எதிரெதிர் துருவங்களாக இரு அணியிலுமே பிரிந்து நின்று மோதி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியைக் காப்பாற்றப் போகிறார்களா? அல்லது தொடர்ச்சியாகப் பிரிந்து நின்று மோதிக்கொண்டு கட்சியையும், சின்னத்தையும் முடக்கப் போகிறார்களா என்பது அவர்களது ஒற்றுமையைப் பொருத்தே அமையவிருக்கின்றது.

சசிகலா செய்யத் தவறியது என்ன?

தொடர்ந்து சசிகலாவின் நிலைப்பாடுகள் குறித்துப் பேசுபவர்கள், ''ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் உருவான இக்கட்டான சூழலில், எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சசிகலாவுக்கு ஆதரவான மனநிலையிலேயே இருந்தனர். ஆனாலும், கட்சியில் இணைந்து 5 வருடங்களை முழுமையாக எட்டிவிடாத சூழல், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகக்கூடிய சூழ்நிலை போன்றவற்றை மனதில் கொண்டு, தனக்கு நம்பகமான ஒருவரையே தற்காலிகப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கலாம் சசிகலா. அப்படியொரு நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருந்தால், மக்களுக்கு அவர் மீதான நம்பிக்கையும் அதிகரித்திருக்கும்.

பின்னர் சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பினைப் பொறுத்து, முதல்வர் பதவியில், தான் அமர முடியாவிட்டாலும் சசிகலாதன்னைச் சார்ந்தவர்களை அரியணையில் அமரவைத்து அரசியல் செய்திருக்கமுடியும். இப்போது எழுந்துள்ள சிக்கல்கள் எதுவுமே ஏற்பட்டிருந்திருக்காது. ஆனால், அவசரக் கோலத்தில் தற்காலிகப் பொதுச்செயலாளராக நியமனம் செய்துகொண்டது, அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது என அடுத்தடுத்து தவறான முடிவுகளை தேர்ந்தெடுத்துக் கொண்ட அவரது அவசரமே இப்போது சோதனையாக மாறியிருக்கிறது.'' என்கிறார்கள். 

இனி என்னாகும் சசிகலா குடும்பம்? 

அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் 17 பேரையும் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியை விட்டு நீக்கிவிட்டார். அடுத்த சில மாதங்களில் சசிகலாவை மட்டும் மீண்டும் மன்னித்து கட்சியில் இணைத்துக் கொண்டார் ஜெயலலிதா. தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில், சிறைத்தண்டனைக்கு உள்ளாகிவிட்ட சசிகலா, இனி வரும் 10 வருடங்களுக்கு, பொதுத்தேர்தலிலும் போட்டியிட முடியாது. அவரது குடும்ப உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது, பதவி வழங்குவது, தேர்தலில் நிறுத்துவது உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையையும் புதிய பொதுச்செயலாளராக வருகிறவர்தான் முடிவு செய்யமுடியும்.!

ஒற்றுமையே ஜெயம்!

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணியில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகளும் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் தங்களுக்குள் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டால் இப்போதுள்ள பிரச்னைகளை எளிதாக சமாளிக்க முடியும். அதாவது, புதிய பொதுச்செயலாளராக வெற்றி பெறும் அணியைச் சேர்ந்தவர் கட்சிப் பொறுப்பையும், மற்றொரு அணியினர் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்று செய்யலாம். 

இரண்டு அணிகளும் ஒன்றிணைந்து கட்சியையும் சின்னத்தையும் தக்கவைக்கவேண்டும் என்பதே அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது.!

- த.கதிரவன்


டிரெண்டிங் @ விகடன்