Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே தொகுதி... 13 தேர்தல்களில் தொடர் வெற்றி... தோல்வியையே சந்திக்காத இவரைத் தெரியுமா?

K.M.Mani

‘அரசியல் பாதைகள் புதைகுழிகள் நிறைந்தவை’ என சொல்லப்படுவதுண்டு. இந்த புதைகுழிகள் நிறைந்த அரசியல் பாதையில் நீண்ட காலம் தங்கள் பயணத்தை மேற்கொள்வது என்பது நிச்சயம் சவால் மிக்கது. அப்படி அரசியல் பாதையில் நீண்ட பயணங்களை மேற்கொண்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 90 வயதைக் கடந்தும் இன்னும் அரசியலில் இருந்து முழுமையாய் விட்டு விலகிடாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் வரிசையில் இணைந்துள்ளார் கேரளா காங்கிரஸ் தலைவரான கே.எம்.மானி.

84 வயதான இவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் தோல்வியே சந்திக்காத தலைவர்களில் கருணாநிதிக்கு அடுத்த இடம் கே.எம்.மானிக்கு தான். 12 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளார் அதுவும் ஒரே தொகுதியில்.

கரிங்கோழக்கல் மானி மானி என்பது தான் இவருடைய முழு பெயர். வழக்கறிஞரான இவர் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் இவரது நெருங்கிய உறவினருமான பி.டி.சாக்கோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கேரள காங்கிரஸ் என்ற தனி அமைப்பில் இணைந்து முக்கியப் பங்காற்றினார். 1965ம் ஆண்டு முதன் முதலாக கோட்டயம் மாவட்டம் பாலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் 1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் துவங்கி 2016ம் ஆண்டு வரை,  அதே பாலா தொகுதியில் 12 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார் கே.எம்.மானி.

கேரள மாநில காங்கிரஸ் கட்சி, இடதுசாரி அமைப்பான மார்க்சிஸ்ட் என இரு பெரிய கட்சிகளுடனும் இவரது கேரள காங்கிரஸ் (மானி) கூட்டணி அமைத்து தேர்தல்களைச் சந்தித்து உள்ளது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 6 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றனர். ஆனாலும், இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனியாக செயல்பட்டு வருகின்றனர். ஆனாலும், ஒரே தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்ட போதிலும், ஒரு முறை கூட தோல்வியைச் சந்திக்காத சரித்திரம் கே.எம்.மானியை மக்கள் தொண்டனாக நிலை நிறுத்துகிறது. அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படக் கூடியவராக கே.எம்.மானி உள்ளார்.

K.M.Mani

கேரள சட்ட மன்றத்தில் 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்து இருக்கிறார். கேரள லாட்டரி உதவித் திட்டம் மூலமாக 1,400 கோடியைத் திரட்டி அதன் மூலமாக ஒன்றரை லட்சம் ஏழை நோயாளிகளுக்கு உதவிகள் கிடைக்கச் செய்தார். அத்துடன், உலகிலேயே முதல் முறையாக விவசாயிகள் மற்றும் விதவைகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் தான் கேரள மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கேரள சட்ட மன்றத்துக்குள் கே.எம்.மானி நுழைந்து தற்போது 50வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, கேரள சட்ட மன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய சபாநாயகரான ஸ்ரீராமகிருஷ்ணன், "கே.எம்.மானி, எப்போதுமே மானி சார் என்றே எல்லோராலும் அழைக்கப்படக் கூடியவர். அவர் தனது செயல்பாடுகள் மூலமாக சட்டமன்ற வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறார். கடந்த 50 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருப்பதன் மூலமாக சாதனை படைத்த அவர், தன் மீது எழும் விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக் கொள்ளக்கூடியவர்" என்று புகழாரம் சூட்டினார்.

முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "புள்ளி விவரப்படி பார்த்தால், கே.எம்.மானி தனது 50 வருட சட்டமன்ற சாதனையை கடந்த இரு வருடங்களுக்கு முன்பே எட்டி விட்டார். பாலா தொகுதியில் அவர் 1965ம் ஆண்டில் வெற்றி பெற்றார். ஆனால், அந்தத் தேர்தலில் கேரள சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதனால் அந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டதால், அந்தக் கணக்கு இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

K.M.Mani

அவரது இந்த சாதனை பாராட்டுக்குரியது. இந்தச் சாதனையை இனி யாராலுமே இந்தியாவில் முறியடிக்க முடியாது என்பது நிச்சயம். அவர் பாலா தொகுதியில் போட்டியிடும்போது பல பாரம்பரியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு வெற்றியை கைப்பற்றி இருப்பது வரலாற்றில் எப்போதும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த சாதனைகளுக்கு மத்தியில் அவர் சட்டமன்ற மாண்பையும் மரபுகளையும் கடைப்பிடிப்பதையும் அனைவருமே பின்பற்ற வேண்டும். குறித்த நேரத்துக்கு சட்ட மன்றத்துக்கு வருவது மட்டும் அல்லாமல், அவரது வருகைப் பதிவையும் இன்றைய சட்ட மன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும்’’ எனக் குறிப்பிட்டார்.

கேரள சட்ட மன்றத்தில் 1970ம் வருடம் இவருடன் இருந்த ஒரே சமகால அரசியல்வாதி, முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மட்டுமே. ஆனால், இந்த நிகழ்வின்போது அவர் சட்ட மன்றத்துக்கு வராததால், அவரது கருத்து சட்ட மன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது பெரும் குறையே. இந்த நிலையில் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா தனது கருத்தைப் பதிவு செய்கையில், ‘‘இந்திய ஜனநாயக வரலாற்றில் அதிசயக்கத்தக்க ஒரு வரலாறு கே.எம்.மானி. அவர் எப்போதுமே தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையுடன் செயல்படுவது இல்லை. சட்டமன்ற உரையாக இருந்தாலும் செய்தியாளர் சந்திப்பாக இருந்தாலும், அது குறித்து முதலிலேயே நிறைய தகவல்களைச் சேகரித்த பின்னரே பேசுவார்’’ என்றார்.

கேரள அரசியலில் எதிரும் புதிருமாகச் செயல்படும் இரட்டையர்கள் என வர்ணிக்கப்படும் அளவுக்கு கே.எம்.மானியுடன் கருத்து வேறுபாடுகள் நிறைந்து இருப்பவர், பி.சி.ஜார்ஜ். அவர் பேசுகையில், ‘எனக்கு மானி சாருடன் எப்போதும் நல்ல உறவு இருந்தது இல்லை. ஆனாலும், அவரது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மறுக்க முடியாதது’ என்றார்.

இவற்றுக்குப் பதில அளித்துப் பேசிய கே.எம்.மானி, ‘‘என்னை இந்த மன்றத்தில் பேசிய பலரும் பாராட்டியது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. நான் கடந்த காலங்களில் எதிரி என நினைத்த சிலர் எனக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்கள் எனது நண்பர்கள் என்பதை நீங்கள் பேசியதில் இருந்து புரிந்து கொண்டு விட்டேன். என்னை இந்த அளவுக்கு உயரத்துக்கு கொண்டு வந்தது எனது பாலா தொகுதி மக்களே. அவர்களுக்கு கூப்பிய கரங்களுடன் மண்டியிட்டு நன்றி தெரிவிக்கிறேன்’’ என்று பேசி நெகிழ்ந்தார்.

வயது 84ஐ கடந்து விட்டது. அவரது உழைப்பு இன்னும் அவரை இளமையாக வைத்திருக்கிறது. வாழ்த்துகள் கே.எம்.மானி சார்...
 
- ஆண்டனிராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close