நான்குமுனைப் போட்டி உறுதி! அனுபவமும், புதுமுகமும் மோதும் ஆர்.கே.நகர்!

ஆர் கே நகர் வேட்பாளர்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்றுநோக்கி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை எத்தனையோ  இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ள போதிலும், ஜெயலலிதா இருமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற நட்சத்திர தொகுதியாகத் திகழும் ஆர்.கே. நகரில், ஜெ. மறைவுக்குப் பின்னர் மிகுந்த எதிர்பார்ப்பபுக்கு மத்தியில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால், இதில் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும், முடிவு யாருக்கு சாதகமாக அமையும் என்பதை ஒட்டுமொத்த தமிழர்களும் இப்போதே ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, அந்த வழக்கில் இருந்து 2015-ம் ஆண்டு கர்நாடக உயர்மன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், மீண்டும் முதல்வராவதற்கு ஏதுவாக, தனக்கு வெற்றியை உறுதி செய்யும் தொகுதியாகத் தேர்ந்தெடுத்தது ஆர்.கே. நகரையே. 1972-ல் அ.தி.மு.க-வைத் தொடங்கிய எம்.ஜி.ஆர், 1977- ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையில் அ.தி.மு.க வெற்றிபெற்ற ஒரே தொகுதி ஆர்.கே. நகர் என்பது கூடுதல் தகவல்.

இந்த அளவுக்கு சிறப்புப் பெற்ற ஆர்.கே. நகர் தொகுதியில், 2016-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலிலும் ஜெயலலிதாவே போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து, தி.மு.க முன்னாள் அமைச்சர் சற்குணத்தின் உறவினர் சிம்லா முத்துச்சோழனும், மக்கள்நலக் கூட்டணி சார்பில் கல்வியாளர் வசந்தி தேவியும் போட்டியிட்டனர். என்றாலும், ஜெயலலிதாவே வெற்றிபெற்றார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே. நகர் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

அ.தி.மு.க-வின் கோட்டையாக ஆர்.கே. நகர் கருதப்பட்டாலும், இந்தக் கோட்டையில் இரட்டை இலை சின்னத்திற்கே மதிப்பு அதிகம்.  அன்றாடம் சம்பாதித்து வாழ்க்கை நடத்தக்கூடிய தொழிலாளர்களை பரவலாகக் கொண்டுள்ள இத்தொகுதியில், எம்.ஜி.ஆர் காலம் தொட்டே அ.தி.மு.க-வுக்கு வாக்களித்து வருவோர் அதிகம்.ஆனால், இந்தமுறை அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவு அ.தி.மு.க சார்பில் மற்றொரு அணியாகவும் செயல்படுகிறார்கள். மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, தன் பங்குக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைத் தொடங்கி ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மதுசூதனன்ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மண்ணின் மைந்தரும், எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அ.தி.மு.க-வில் இருப்பவருமான இ.மதுசூதனன் போட்டியிடுகிறார். ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான மதுசூதனன், 1991-ம் ஆண்டில் ஜெ. முதல்முறையாக முதல்வரானதும் அமைச்சராகப் பதவி வகித்தவர். தொகுதிவாசியான மதுசூதனனுக்கு ஆர்.கே. நகர்  தொகுதியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இன்னமும் இருப்பது இவரது பலம்.

மறுபுறம் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், சசிகலாவின் அக்காள் மகனுமான டி.டி.வி. தினகரன், ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவருக்கு எந்தமாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதிலும் அ.தி.மு.க-வினர் மத்தியிலும், பொதுமக்களிடத்திலும்  தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், தினகரனுக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எந்தமாதிரி வரவேற்பு அளிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான். ஜெ. தீபாவைப் பொறுத்தவரை, தோற்றத்தில் தனது அத்தை ஜெயலலிதாவின் சாயலில் இருப்பதன் காரணமாக தனக்கு அ.தி.மு.க தொண்டர்கள் ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் களமிறங்கி உள்ளார்.

தி.மு.க-வோ அ.தி.மு.க வாக்குகள் சிதறும் என்பதால், தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி உறுதி என்று கருதி, உள்ளுரில் நன்கு அறியப்பட்ட பகுதி செயலாளராக உள்ள மருது கணேஷ் என்பவரை களமிறக்கி விட்டுள்ளது. வழக்கமாக ஜெயலலிதா முதலில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கி விடுவது போன்று, தே.மு.தி.க இந்த முறை முந்திக்கொண்டு மதிவாணன் என்பவரை ஆர்.கே. நகர் வேட்பாளராக அறிவித்துள்ளது. மக்கள் நலக்கூட்டணி சார்பில், ஆர்.கே.நகரில் போட்டியிடுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

இந்த நிலையில், இப்போதைய நிலவரப்படி, பழுத்த அனுபவம் வாய்ந்த மதுசூதனனுக்கும், தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷூக்கும் இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் என்று தொகுதியுடன் தொடர்புடையவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் டி.டி.வி. தினகரனைப் பொறுத்தவரை இத்தேர்தல் கௌரவப் பிரச்னை என்பதால், ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் களமிறக்கி தனது வெற்றிக்கு கடும் பிரயத்தனத்தை வெளிப்படுத்துவார் என்பதும் உண்மைதான். ஆனால், மக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பார்களா அல்லது சசிகலா மீதான கோபத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தீபா தன் பங்குக்கு ஓரளவு வாக்குகளைப் பிரிப்பார் என்று எடுத்துக் கொண்டாலும், மதுசூதனன் தனது உள்ளுர் செல்வாக்கைப் பயன்படுத்தி, தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்பதால், கணிசமான வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்க்கலாம். தி.மு.க-வுக்கு உரிய வாக்குகள் வேறு கட்சிகளுக்கு செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு. ஆர்.கே. நகர் தொகுதியைப் பொறுத்தவரை தே.மு.தி..க பெரிய அளவில் வாக்குகளைப் பிரித்துவிடப் போவதில்லை என்றே கூறலாம்.

எனவே, ஆர்.கே. நகர் தொகுதி தேர்தலில் அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கும், தி.மு.க-வுக்கும் இடையேயதான் கடும் போட்டி ஏற்படும். தீபாவுக்கும் ஓரளவு செல்வாக்கு இருக்கும் என்பதால், இத்தொகுதியில் நான்குமுனைப் போட்டியே நிலவும் என அறுதியிட்டுக் கூறலாம். அதிலும், மதுசூதனன் அனுபவம் வாய்ந்தவர், மருதுகணேஷ் செல்வாக்கு பெற்ற இளைஞர். தினகரன் கட்சியின் பலத்தை நம்பியுள்ளார். தீபா தனது ஆதரவாளர்களை நம்பி களமிறங்கி உள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில், கடந்த ஆண்டு நிலவரப்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்து 721. இவர்களில் ஆண்கள் 1,28,305. பெண் வாக்காளர்கள் 1,34,307. மூன்றாம் பாலினத்தவர் 109 பேர் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். இந்த முறை நடைபெறும் இடைத்தேர்தல் சற்றே வித்தியாசமானதாகவும், அதே நேரத்தில் எதிர்பார்ப்பு நிறைந்ததாகவும் உருவெடுத்துள்ளது. ஆர்.கே. நகர் மகுடம் யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

-சி.வெங்கட சேது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!