எம்.ஜி.ஆரை சங்கடப்படுத்திய மனைவியின் கேள்வி ! நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்- 23

எம் ஜி ஆர்

திருமணம் முடிந்து சிலமாதங்கள்  தாய்வீட்டிலேயே தங்கியிருந்த சதானந்தவதி சில மாதங்களுக்குப்பின் வால்டாக்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர் வீட்டுக்கு குடிபுகுந்தார். கணவர் குடும்பத்தினரின் அன்பான அணுகுமுறை சதானந்தவதிக்கு பிடித்திருந்தது. பல விஷயங்களில் எம்.ஜி.ஆரின் முதல்மனைவி தங்கமணியின் குணங்களை ஒத்திருந்ததால் சத்தியபாமா குடும்பத்தினருக்கு அளவில்லா மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர் தன் பழைய கவலைகளில் இருந்து முழுமையாக விடுபட்டு தொழிலில் கவனம் செலுத்தத் துவங்கினார். எம்.ஜி.ஆரின் இல்லறம் இனிதாக சென்றுகொண்டிருந்த வேளையில் சதானந்தவதி ஒருநாள் எம்.ஜி.ஆரைப்பார்த்து, "உங்களுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதா ?” - துாக்கிவாரிப்போட்டது எம்.ஜி.ஆருக்கு. 

அவர் குழப்பத்துடன் தன் அம்மாவைப்பார்த்தார். அப்போதுதான் தனக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி இறந்துவிட்டதை மறைத்து தனக்கு பெண் பார்த்த விஷயம் தெரியவந்தது. ஏற்கெனவே திருமணமானவன் என்பது தெரிந்தால் எங்கே பெண்தரமாட்டார்களோ என்ற அச்சத்தில் அது நேர்ந்துவிட்டதாக சத்தியபாமா சொல்ல, எம்.ஜி.ஆர் மனைவியை சங்கடத்துடன் பார்த்தார். வெகுசாதாரணமாக அவர் தன் வேலையில் ஈடுபட ஆரம்பித்தார். 

சதானந்தவதியின் இந்த மவுனமான மன்னிப்புக்கு காரணம், அதுவரை கணவரின் குடும்பத்தார் தன்னிடம் காட்டிய அன்பும் அணுகுமுறையும்தான். அவரது அந்த எண்ணம் சரியானது என்பதை இறக்கும்வரையில் அவர் நேரடியாக உணர்ந்தார். 
சதானந்தவதி எம்.ஜி.ஆர் வாழ்வில் வந்தபின் எம்.ஜி.ஆர் வாழ்க்கை எப்படி இருந்தது என எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் ராஜேந்திரனிடம் கேட்டோம். 

எம்.ஜி.சி ராஜேந்திரன்“முதல்மனைவி பார்கவி மீது அதிக அன்பு வைத்திருந்ததால் அவர் இறந்தபின்  இரண்டாம் திருமணம் செய்யமாட்டேன் என அடம்பிடித்த சித்தப்பாவை என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் சில திரையுலக நணபர்கள் வற்புறுத்தித்தான் சம்மதிக்கவைத்தனர். எரகாட் குடும்பத்தைச் சேர்ந்த சதானந்தவதியை என் பாட்டியே தேடிப்பிடித்து கல்யாணம் செய்துவைத்தார். விரக்தியான மனநிலையில் இருந்த சித்தப்பா இதற்குப்பின்தான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்தவராக தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சதானந்தவதி  சித்தி மிக எளிமையானவர். யாருடனும் அதிர்ந்துகூட பேசமாட்டார். குழந்தைகள் இல்லாததால் எங்கள் அனைவரின்மீதும் அவருக்கு அதீத பாசம். குறிப்பாக என்னையும் என் தம்பி பாலுவையும் ரொம்பப் பிடிக்கும். எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கவேண்டும் என்பது எங்களுக்கு சித்தப்பாவின் கட்டளை. ஆனால் அப்பாவும் சித்தப்பாவும் சூட்டிங் சென்றுவிட்டால் நாங்கள் சித்தியின் அறைக்குச் சென்று விளையாடிக்கொண்டிருப்போம். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது அவருக்கு பிடித்த விஷயம். என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் அவர், நாங்கள் கட்டிலில் ஏறி விளையாடுவதை மட்டும் அனுமதிக்கமாட்டார்.

வீட்டின் சமையல் பொறுப்பு அவரும் என் அம்மாவும்தான். படப்பிடிப்பிலிருந்து சித்தப்பா என்ன சமையல், எத்தனை பேருக்கு வேண்டும் என்பதை உதவியாளர் சபாபதி மூலம் சொல்லி அனுப்புவார். அதனை பார்சல் செய்து கொடுத்து அனுப்புவது சித்தியின் வேலை. சமயங்களில் சித்தி, தான் செய்த சமையல்தான் இன்று நன்றாக இருந்தது என என் அம்மாவிடம் விளையாட்டாக வம்பு செய்வார்.  அப்போது என்னைத்தான் மத்தியஸ்தத்துக்கு கூப்பிடுவார்கள். நான் என் தாயாரை விட்டுக்கொடுக்காமல் பேசுவேன். கோபப்படமாட்டார் சித்தி. 

சித்தப்பா புகழ்பெற்ற நடிகரானபின்னாலும் ஆரம்பத்தில் இருந்த அதே எளிமையை கடைபிடித்தார் சித்தி. வீட்டுக்கு வருவோரிடம் பந்தா இன்றி பழகுவார். லாயிட்ஸ் சாலை வீட்டிலேயே அப்போது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் அலுவலகமும் எம்.ஜி.ஆர் நாடக மன்ற அலுவலகமும் இயங்கிவந்தது. பெரும்பாலும் நாடக ரிகர்சல் அங்குதான் நடக்கும். வீட்டுப்பெண்கள் அங்கு வரக்கூடாது என்பதற்காக வீட்டின் நடுவே கோடு போட்டு வைத்திருந்தார் சித்தப்பா. ஆனால் இரண்டுக்கும் ஒரே பாத்ரூம். அதனால் என் அம்மா, சித்தியுடன் பேச விரும்பும் நடிகைகள் சகுந்தலா, இந்திரா, புஷ்பலதா போன்றோர் பாத்ரூம் போவதாகச் சொல்லிவிட்டு வந்து பேசிவிட்டுச் செல்வார்கள். 


திருமணமான கொஞ்ச வருடங்களில் சித்திக்கு உடல்சுகம் இல்லாமல் போய்விட்டது. இதனால்  கவலையடைந்த சித்தப்பா படப்பிடிப்பு, கட்சிப்பணி இல்லாத நேரங்களில் வீட்டில் சித்தியுடன்தான் நேரம் செலவழிப்பார். சித்திக்கு அவர் செய்த பணிவிடைகள் போல் இன்னொருவர் தன் மனைவிக்கு செய்திருப்பாரா என்பது சந்தேகமே. ஆண்டுக்கு ஒரு முறை சித்தப்பா குடும்பமும் நாங்களும் மகாபலிபுரம் செல்வோம். அங்குள்ள ஒரு விடுதியில் சில நாட்கள் தங்கி பொழுதுபோக்குவோம். நேரம் கிடைத்தால் சித்தப்பா வருவார். ரொம்ப மகிழ்ச்சியாக கழியும் அந்நாட்கள். சித்தி சித்தப்பாவுடன் எங்கள் குடும்பம் கூட்டுக்குடித்தனமாக இருந்த அந்த நாட்களை என்றும் மறக்கமுடியாது” என நெகிழ்ந்தார் ராஜேந்திரன்.

எம்.ஜி.ஆர்

சதானந்தவதிக்கு முதன்முறை கர்ப்பம் தரித்தபோது அது தவறுதலாக கர்ப்பப்பையின் வாசலிலேயே உருவானது. இது அவர் உயிருக்கே ஆபத்தை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் ஒரு முடிவோடு அதைக் கலைத்தனர். தொடர்ந்து சதானந்தவதிக்கு காசநோய் உருவானது. இதனால் அவர் உடல் பலவீனமடைந்தது. இதனால் அவர் இயல்பான இல்லற வாழ்க்கை வாழ்வது  அவர் வாழ்நாளை குறைத்துவிடும் என குடும்ப மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் எம்.ஜி.ஆர், திருமணம் ஆனபின்னாலும் பிரம்மச்சாரியாகவே காலம் கழிக்க நேர்ந்தது. ஆனாலும் திரையுலகில் ஒரு அந்தஸ்தை அடையவேண்டும் என்ற லட்சியத்தை அவர் கைவிடாமல் தொடர்ந்து தன் சினிமா முயற்சிகளை தொடர்ந்தார். எம்.ஜி.ஆரின் கதாநாயகன் கனவை நிறைவேறும் நாள் கூடிவந்தது ஒருநாள்...
என்ன நடந்தது...?

- எஸ்.கிருபாகரன்

                     இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!