வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (18/03/2017)

கடைசி தொடர்பு:16:50 (18/03/2017)

தீபா கணவர் கட்சி ஆரம்பிப்பதன் பின்னணி இதுதான்!

தீபா கணவர்

"தடி எடுத்தவன்லாம் தண்டல்காரன்" என்று ஒரு பழமொழி சொல்வதுண்டு. அந்தப் பழமொழிகேற்றாற்போல் சமீபகாலமாக தமிழகத்தின் அரசியல் நிலைமை உருவாகி விட்டது. தமிழகத்தில் இப்போது இருக்கிற அரசியல் கட்சிகள் போதாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் தனது ஆதரவாளர்களைத் திரட்டி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். "தீபா தொடங்கியிருப்பது பேரவைதான், ஆனால் நான் தொடங்கப் போவது அரசியல் கட்சி. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். எனக்கும் தீபாவுக்கும் கருத்துவேறுபாடு ஏதும் இல்லை. நாங்கள் ஒரே வீட்டில்தான் இருப்போம்" என்று தெரிவித்து பரபரப்பை (?!) மேலும் அதிகப்படுத்தி உள்ளார் அவர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழக அரசியல் களம்  நாளொரு பரபரப்பும், பொழுதொரு அறிவிப்புமாகச் சென்று கொண்டிருக்கிறது. செய்தித் தொலைக்காட்சி சேனல்களில் தினந்தோறும் 'பிரேக்கிங் நியூஸ்' இல்லாத நாளே இல்லை என்னும் அளவுக்கு அன்றாடம் நிறைய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூரிலும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் அறப்போராட்டத்தில் இறங்கியது, இதைத் தொடர்ந்து தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது, ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்றிய பிறகும் போராட்டம் நீடித்ததால், அவர்களைக் கலைக்க போலீஸார் சென்னை மெரினாவில் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை தாக்கியது, மீனவ குப்பத்துக்குள் புகுந்து போலீஸார் தாக்குதல், அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது, ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா, மெரினாவில் உள்ள ஜெ. சமாதியில் ஓ.பி.எஸ். தியானம் அமர்ந்து சசிகலா தரப்பினருக்கு எதிராக குற்றம்சாட்டியது, சசிகலா ஆதரவாளர்களால் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டது, சசிகலா உள்பட 3 பேருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டது, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றது, சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் தி.மு.க உறுப்பினர்கள் ரகளை, எதிர்க்கட்சியினரை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றது, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம், டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் படுகொலை என்று அடுத்தடுத்து சென்சேஷனுடன் கூடிய செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல் களம்.

இந்தச் சூழ்நிலையில்தான், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, காலியான சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை அறிவித்து செய்தியின் பரபரப்பை மேலும் சூடுபிடிக்கச் செய்தது தேர்தல் ஆணையம். ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் தேர்தலைக் குறிவைத்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அ.தி.மு.க-வின் இருவேறு அணியினரும் பரபரப்பாக இப்போதே இயங்கத் தொடங்கியுள்ளனர்.

சசிகலாவின் அக்காள் மகனும், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசியல் பரபரப்பு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. தி.மு.க சார்பில் வடசென்னை பகுதியைச் சேர்ந்த மருதுகணேஷூம், ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் அ.தி.மு.க அவைத்தலைவர் இ.மதுசூதனனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதால், கோடை வெயிலைக் காட்டிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்தசெய்திகள் அனல்பறக்கத் தொடங்கி உள்ளன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இந்தத் தொகுதியில் போட்டியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா மேலிடமோ ஒருபடி மேலேபோய், தமிழக தலைமைக்குத்  தெரிவிக்காமல் ரகசியமாக தகவலை வைத்திருந்து இசையமைப்பாளர் கங்கை அமரனை ஆர்.கே.நகர் தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்து பரபரப்பை உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் தீபாவின் கணவர் மாதவன் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் என்ன கருத்து வேறுபாடோ தெரியவில்லை. மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் நேற்று அஞ்சலி செலுத்திய மாதவன், தனது ஆதரவாளர்களைத் திரட்டி புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். "தீபா பேரவையில் தீய சக்தியின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. தீய சக்தி யார் என்று பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை. நேரம் வரும்போது, நான் அதைத் தெரிவிப்பேன். எனக்கும் தீபாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒரே வீட்டில்தான் வசிப்போம்" என்று பேட்டி அளித்துள்ளார் அவர்.

அவரது இந்த திடீர் அறிவிப்பால், தீபாவை பின்னணியில் இருந்து சிலர் இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனாலேயே அவரது கணவர், புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. தீபாவின் செயல்பாடுகளால், அவரை ஆதரித்த தொண்டர்கள், ஏற்கெனவே குழம்பியிருந்த நிலையில், அவரது கணவரின் திடீர் அறிவிப்பால், தொண்டர்களுடன் சேர்ந்து பொதுமக்களும்  பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். 'என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில்?' என்று மக்களும், அ.தி.மு.க தொண்டர்களும் புருவம் உயர்த்தி உள்ளனர்.

தீபா கணவர்

சசிகலா மீது குற்றச்சாட்டு தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதும், திடீரென்று ஒருநாள் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று ஓ.பி.எஸ்ஸைச் சந்தித்த தீபா, அ.தி.மு.க-வின் இரு கரங்களாக தாங்கள் செயல்படப்போவதாகத் தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவார் என அ.தி.மு.க தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளன்று, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கி, அதன் பொதுச் செயலாளராகவும், பொருளாளராகவும் தன்னை அறிவித்துக் கொண்டார். 'அப்படியானால், அது அரசியல் கட்சியா?' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "இல்லை; இது பேரவைதான். அரசியல் கட்சி அல்ல" என்று கூறி மேலும் குழப்பினார் தீபா. இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது அவருக்கும், கணவருக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை. தீபாவின் கணவர் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கி விட்டாரோ என்று நினைக்கும்வகையில், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைந்த உடனேயே தீபாவை ஆஃப் செய்வதற்கு நடராஜன் தரப்பில் இருந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். பல கோடி ரூபாய் பேரமும் பேசப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நடராஜனின் முயற்சியால் தீபாவின் கார் ஓட்டுநர் மூலம் பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும், ஆனால் தீபா அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து தீபாவை செயல்பட விடாமல் பார்த்துக் கொண்டதும் நடராஜனின் சூழ்ச்சிதான் என்று தீபாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'தீபா எங்கள் வீட்டுப் பெண்' என்று நடராஜன் தெரிவித்ததற்கு பெரிய எதிர்ப்பு எதையும் தீபா தெரிவிக்கவில்லை. மேலும் சசிகலா பற்றியோ அல்லது அவரது உறவினர்கள் குறித்தோ தீபா இதுவரை பெரிய குற்றச்சாட்டுகள் எதையும் முன்வைக்கவில்லை. தீபா தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்த போதிலும், நடராஜன் தரப்பு தீபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக உறுதியான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடையில் ஓ.பி.எஸ்ஸை தீபா சந்தித்ததன் பின்னணியிலும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. நடராஜன் தரப்பில் இருந்து தீபாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாதவன், தீபாவுடன் ஆலோசனை நடத்தியதாகவும், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. தனது கருத்தை தீபா ஏற்கவில்லை என்பதாலேயே புதிய அரசியல் கட்சி என்று கிளம்பியிருக்கிறாராம் மாதவன்.

தீபா கணவர்ஜெயலலிதா மறையும் வரை தீபாவை யார் என்றே அ.தி.மு.க தொண்டர்களுக்கோ, மக்களுக்கோ தெரியாது. அப்படி இருக்கும்போது, அவரது கணவரை எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை. தீபாவே அரசியலில் சோபிப்பாரா என்பது, வரவிருக்கும் காலங்களில்தான் தெரியவரும். மக்கள் ஆதரவு, தேர்தலில் போட்டியிட்டால் அவருக்குக் கிடைக்கும் ஓட்டு, தொண்டர்கள் செல்வாக்கு என்று எதையுமே தீபா நிருபிக்காதநிலையில், அவரது கணவர் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் கேலிக்கூத்தாகவே பார்க்கப்படுகிறது. தீபாவின் கணவர் என்ற ஒரே அஸ்திரத்தை வைத்துக் கொண்டு அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டிருப்பது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களால், தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சாமான்ய அ.தி.மு.க தொண்டர்களும், அரசியலை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். குழப்பத்துக்கு மேல் குழப்பம் ஏற்பட்டு வருவது தமிழக அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல என்பதே அரசியல்நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இதனால் நிலைகுலைந்து, செய்வதறியாது திக்கற்று நிற்போர் என்றால், எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசிகளும், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டவர்களும்தான் என்பதை தீபா, அவரது கணவர், ஓ.பி.எஸ், தினகரன் போன்றோர் உணர்வார்களா?

"ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்றொரு பழமொழி உண்டு. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, தற்போது இரண்டு அணிகளாகச் செயல்படுகிறது என்று எண்ணியிருந்த நேரத்தில், இன்னும் என்னவெல்லாம் அரங்கேறப்போகிறதோ என்ற பதைபதைப்பில் அ.தி.மு.க-வினர் ஆர்.கே.நகர் தொகுதி முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.

- சி.வெங்கட சேது

படம்: ஸ்ரீனிவாசலு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்