‘நான் தமிழகத்தின் பூலான் தேவியா?!’ - மணல் மாஃபியாவால் மிரட்டப்பட்ட பெண் பத்திரிகையாளர்

சந்தியா

நீர்வளமும் நிலவளமும் செழிப்பாக இருந்த தமிழகம், வறண்ட பகுதியாக மாறத்தொடங்கியது 90-களின் மத்தியில்தான். கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான் மணல்கொள்ளை மாஃபியாக்களும் தங்கள் விஸ்வரூபத்தைத் தொடங்கியிருந்தன. பாலாறு, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆற்றங்கரைகள்தாம் இந்தக் கொள்ளையால் முக்கியமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் அளவீட்டின்படி, நாளொன்றுக்கு 5,500 முதல் 6,000 லாரிகள் 200 கனசதுர அடி வரை முறையற்ற மணல்கொள்ளையில் ஈடுபடுவதாகக் குறிப்பிடுகிறது. இதுபற்றிப் பத்திரிகையாளர்கள் யார் எழுதினாலும் அவர்களுக்கு மாஃபியாக் கும்பல்களிடமிருந்து மிரட்டல்கள் வந்தபடி இருக்கின்றன. அப்படி மாஃபியா கும்பலின் தாக்குதலால் அண்மையில் பாதிக்கப்பட்டவர் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“உங்களைப் பற்றிய சுய அறிமுகம்?”

“சென்னையைச் சேர்ந்தவள். பன்னிரண்டு வருடங்களாக ஊடகத் துறையில் இருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் இளங்கலை இதழியல் முடித்து, ஏசியன் கல்லூரியில் முதுகலை பயின்றேன். அதற்கடுத்து, இங்கு பல ஊடகங்களில் பணியாற்றினேன். அண்மையில்தான் தற்சார்பு பத்திரிகையாளராகப் பல துப்பறியும் இதழியல் வேலைகளை முன்னெடுத்தேன்.”

“மணல்கொள்ளை மாஃபியா தொடர்பாக, எத்தனை ஆண்டுகள் களத்தில் துப்பறிந்துவருகிறீர்கள்?” 

“நான்கு வருடங்களாகச் செயல்பட்டு வருகிறேன். குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரும் மணல்கொள்ளை வியாபாரத்தை நடத்திவரும் வைகுண்டராஜன் தொடர்பாக எழுதினேன். சுமார் 75 சதவிகிதம்வரை முறையற்ற வகையில் அவர், மணலைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்கிறார். அரசும் இதுதொடர்பாக அமைதியாகவே இருக்கிறது.”

“புலனாய்வு தொடர்பாக வைகுண்டராஜனைச் சந்தித்தீர்களா?”

“முதலில் சட்டரீதியான நோட்டீஸ்தான் வந்தது. பிப்ரவரி 2007-ல், இதுதொடர்பாக வைகுண்டராஜனைச் சந்தித்துப் பேட்டியெடுத்தேன். சுமார் இரண்டு மணி நேரம்வரை என்னுடன் பேசினார். 'நான் 51 சதவிகிதம் சரியா இருந்தா... எதிராளியை அடிப்பேன்; அதுவே, எதிராளி 51 சதவிகிதம் உண்மையா இருந்தா... அவரை ஒண்ணும் செய்யமாட்டேன்' என்றார். தன்னுடைய எதிராளி... தனது மணல்கொள்ளைக்கு இடையூறாக எப்படியிருந்தார் என்றும், தாம் மணல் திருட்டில் ஈடுபட்ட இடத்தைச் சுற்றியிருக்கும் 400 ஹெக்டேர் நிலத்தையும் வாங்கித்தான் பிரச்னையை சரி செய்தேன் என்றும் ஒரு சம்பவம் பற்றி அவர் நினைவுகூர்ந்தார்.”

“அதற்குப் பிறகு, உங்களுக்கு எந்த மாதிரியான அச்சுறுத்தல் வந்தது?”

கார்னெட்“ஜனவரி 2017 சமயத்தில், பிரபல நாளிதழ் ஒன்றில், நான் மணற்கொள்ளை தொடர்பாக நான்கு தொடர்களை எழுதினேன். அதையடுத்துத்தான் எனக்கு பிரச்னை வரத் தொடங்கியது. அப்போது ஜல்லிக்கட்டுப் போராட்ட சமயம். வைகுண்டராஜனைச் சேர்ந்த யாரோ ஒருவர், ட்விட்டரில்... 'இவர் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகக் கொடிபிடிக்கும் பெண். தயவுசெய்து இவருக்கு யாரும் கால் செய்யவேண்டாம்’ என்று கூறி எனது நம்பரைப் பதிவுசெய்திருந்தார். அது, அடுத்த சில நிமிடங்களிலேயே அழிக்கப்பட்டுவிட்டாலும், தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்தபடியே இருந்தன. இதையடுத்து கமிஷனர் வழியாக சைபர் க்ரைம் பிரிவில் புகார் கொடுத்தேன்.

‘ட்விட்டருக்கு அவர்கள் மனு அனுப்புவார்கள் என்றும் விரைவில் பிரச்னை தீர்க்கப்படும்’ என்றும் அவர்கள் கூறினார்கள். அதன்பிறகு, கொச்சி துறைமுகத்தில் முறையற்ற வகையில் மணல் அள்ளப்படுவது தொடர்பாக தகவல்கள் வந்தன. திருநெல்வேலி கலெக்டரும் கொச்சி துறைமுகத்துக்கு அதுதொடர்பாகக் கடிதம் ஒன்றை எழுதினார். இந்த விசாரணையில், நான் ஈடுபட்டிருந்தபோது... முன்பின் அறியாத எண்ணிலிருந்து ஒருவர் என்னை அழைத்து தகாத வார்த்தைகளில் பேசினார். 'எனது உடம்பின் அந்தரங்கப் பகுதிகளில் மிளகாய்ப் பொடி தூவிவிடுவேன்' எனவும் அச்சுறுத்தினார்; அத்துடன், 'என்னைப் பத்திரிகை உலகின் பூலான் தேவி' எனவும் குறிப்பிட்டார்.

வைகுண்டராஜனிடம் நான் 200 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் அதற்கு அவர் அடிபணியவில்லை என்பதால், இப்படித் தவறாகச் சித்திரிப்பதாகவும் சில வலைதளங்கள் என்னைப் பற்றி தவறாகப் பேச ஆரம்பித்தன. வைகுண்டராஜன் டிடெக்டிவ்கள் உதவியுடன் என்னைப் பின் தொடர்வதாகவும் விரைவில் என்னைப் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தப்போவதாகவும் கூறி மிரட்டினார்கள். இதையடுத்து மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளேன். 'ஒருவாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளது காவல் துறை தரப்பு. ’விகடன்’ மணற்கொள்ளை தொடர்பாக எழுதியிருந்ததால், அந்தப் பத்திரிகையுடன்.. என்னையும் இணைத்துத் திட்டியிருந்தார்கள்.”

“இப்படியான தாக்குதல் உங்களைத் தனிப்பட்ட முறையில் எந்த அளவுக்குப் பாதித்தது?”

“பத்திரிகையாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவது ஒன்றும் புதிதில்லை. இருபது வருடங்களாக இந்தக் கொள்ளை நடந்துவருகிறது. நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கும் உள்ளது. இது, தமிழ்நாட்டைப் பாதிக்கும் மிகப் பெரிய விஷயம். இதைப் பத்திரிகையாளர் தைரியமாக வெளிக்கொண்டுவராமல் வேறு யாரால் இதனைச் செய்யமுடியும்.”

- ஐஷ்வர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!