வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (23/03/2017)

கடைசி தொடர்பு:16:44 (23/03/2017)

”குழந்தைகள் பள்ளி செல்வதை விட குடிநீரைத் தேடி செல்வது அதிகரிக்கும்” - யுனிசெஃப்வின் அதிர்ச்சி அறிக்கை!

புவிப் பரப்பில் 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது; எஞ்சிய 30 சதவிகிதம் மட்டுமே நிலப்பரப்பாக உள்ளது. இவ்வளவு அதிகமாக நீர் இருந்தபோதிலும், தண்ணீர் தேவை என்பது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 2040-ம் வருடத்தில் 60 கோடி குழந்தைகள், அதாவது நான்கில் ஒரு குழந்தை தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படும் என்கிற தகவலை வெளியிட்டு அதிர வைத்து இருக்கிறது, யுனிசெஃப் அமைப்பு. 

வறட்சி, குழந்தை

நாம் வாழும் புவிப் பரப்பில் 70 சதவிகிதம் நீர் நிறைந்து இருந்த போதிலும், அவற்றில் பெரும்பான்மை நாம் பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கிறது. மூன்றில் ஒரு பங்காக நீர்ப்பரப்பு இருந்த போதிலும், அதில் வெறும் 3 சதவிகித தண்ணீர் மட்டுமே நாம் பயன்படுத்த உகந்ததாக உள்ளது. அதிலும், உறை நிலையில் இருக்கும் நீரைக் கழித்து விட்டுப் பார்த்தால், நாம் பயன்படுத்தக் கிடைக்கும் தண்ணீர் என்பது சொற்பமானது மட்டுமே. உலகம் முழுவதும் உயர்ந்து வரும் மக்கள் தொகை, கடுமையான வறட்சி, தொழிற்சாலை மற்றும் விவசாயம் உள்ளிட்டவைக்கு அதிகரிக்கும் தண்ணீரின் தேவை ஆகியவை காரணமாக நீர் பற்றாக்குறை கூடிக்கொண்டே செல்கிறது. 

அதிர வைக்கும் ஆய்வு அறிக்கை!

இந்தச் சூழலில், ஐ.நாவின் அமைப்பான யுனிசெஃப் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அதிகம் பாதிக்கப்பட இருப்பது குழந்தைகளே. அவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிக் கொண்டு இருக்கிறது. 2040-ம் வருடத்தில், உலகம் முழுவதும் நான்கில் ஒரு குழந்தைக்கு தரமான குடிநீர் கிடைக்காத நிலைமை உருவாகும். இது போன்ற தரமற்ற குடிநீர் மற்றும் சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக குழந்தைகளின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படும் நிலைமை உருவாகும். 

தற்போது உலகில் உள்ள 36 நாடுகளில் தண்ணீர் தேவை என்பது மிகவும் மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. இந்த நாடுகளில் குடிப்பதற்கு உகந்த தண்ணீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. தண்ணீர் இல்லாமல் மக்கள் இப்போதே அவதிப்பட்டு வருகின்றனர். சுகாதாரமான தண்ணீர் கிடைக்காததால் மற்றும் மாசடைந்த தண்ணீரைப் பருகுவதால் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்கள் பாதிக்கிறது. இது போன்ற காரணங்களால் நாள்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 800 பேர் உயிரிழந்து வருகின்றனர். 
கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளில் பலர், குடிநீர் தேவைக்காக பள்ளி செல்வதை விடவும் தண்ணீரைத் தேடி அலையும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. அதிகரிக்கும் வெப்பம், கடல் மட்டம் உயரும் சூழல், அதிகப்படியான வெள்ளப் பெருக்கு மற்றும் கடுமையான வறட்சி, உறை பனி உருகும் ஆபத்து போன்றவை காரணமாக தரமான குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்றவை கிடைப்பதில் அதிகமான சிக்கல் ஏற்படும். தேவைக்குப் போதுமான அளவு தரமான தண்ணீர் இல்லாததால் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது’’ என்று தண்ணீர் தேவை குறித்து நடத்திய ஆய்வுக்குப் பின்னர் யுனிசெஃப் எச்சரித்து உள்ளது. 

தண்ணீர் பஞ்சம்

இது குறித்து யுனிசெஃப் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அந்தோணி லேக் தெரிவிக்கையில், ‘‘உலகின் அடிப்படைத் தேவை என்பது தண்ணீர் மட்டுமே. நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எதுவும் வளராது, எதுவுமே நடக்காது. ஆனால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இது அவர்களது உடல் நலத்துக்கும் உயிருக்கும் பெரும் சவாலாக இருக்கிறது. இந்த விவகாரம் குழந்தைகளின் எதிர்கால வாழ்வையும் பாதிக்கும் அம்சமாக மாறி இருக்கிறது. இது தொடர்பாக நாம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த பிரசனை மேலும் தீவிரம் அடையும்’’ என்று எச்சரித்தார்.

தவிக்கும் தமிழகம்! தாழ்ந்து விட்ட நீர் ஆதாரம்!

இந்தியாவிலும் இந்த விவகாரம் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. தமிழகத்திலும் குடிநீர் தேவை என்பது மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. இங்கு தண்ணீர் இருக்கும் நதிகள் அனைத்தும் மாசடைந்து விட்டன. பல நதிகள் காய்ந்து வறண்டு விட்டன. மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வந்த ஏரிகள், குளங்கள் வறண்டு காய்ந்து கிடக்கின்றன. வருங்காலங்களில் தமிழகமும் பெரும் சவாலை சமாளிக்க வேண்டிய ஆபத்தில் இருக்கிறது என்பதற்கு சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரமே சாட்சி..
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் நீர் ஆதாரம் படு பாதாளத்துக்குப் போய் விட்டது. கடந்த ஆண்டு அணைகளில் சேகரிக்கபப்ட்ட நீரின் அளவுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மிகவும் சொற்பமாகவே இருக்கிறது. மழையின் அளவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு நோக்கும் போது சொற்பமாகவே இருக்கிறது. தற்போது நிலவும் கடுமையான வறட்சி விவசாயிகளை மட்டும் அல்லாமல் பொதுமக்களையும் வெகுவாக பாதித்து இருக்கிறது. மக்களின் குடிநீர் தேவை அதிகரித்து வரும் சூழலில், தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே செல்வது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது.

காலிக்குடங்களுடன் மக்கள்

படு பாதாளத்தில் நிலத்தடி நீர்மட்டம்! 

தமிழகம் முழுவதும் அரசு சார்பாக நடத்தப்பட்ட நிலத்தடி நீர் குறித்த ஆய்வின் முடிவுகள் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட அளவுடன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வு அறிக்கை ஒப்பிடப்பட்டது. அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தில் கூட நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 2 முதல் 6 மீட்டர் ஆளத்துக்கு நீர்மட்டம் சென்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. 

குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் சராசரியாக நிலத்தடி நீர்மட்டம் 8 அடியாக இருந்தது. ஆனால், 2017 பிப்ரவரி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழத்துக்குச் சென்று விட்டது. கடந்த ஆண்டு 8 அடியாக இருந்த நீர்மட்டம் இந்த வருடம் 28 அடியாக பாதாளத்துக்குச் சென்று விட்டது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 22 அடியாக இருந்த நீர்மட்டம் இரு மடங்கு குறைந்து 46 அடி ஆழத்துக்குச் சென்று விட்டது. இது போலவே தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்று இருப்பதால், அடுத்தகட்டமாக கடுமையான் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்கும் ஆபத்து வேகமாக உருவாகி வருகிறது. 

அதனைப் புரிந்து கொண்டு அவசியம் இல்லாமல் தண்ணீரை வீணாக்குவது, அணைகளில் தண்னீரைச் சேமிக்காமல் கடலில் கலக்க விடுவது, ஆலைகளுக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் கொடுத்து வீணடிப்பது போன்றவற்றை தவிர்க்க இப்ப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லாவிட்டால், வருங்காலம் தண்ணீர் கிடைக்காமல் நாமும் தவிப்பதுடன், நமது சந்ததியையும் துன்பத்துக்கு உள்ளாக்கும் ஆபத்து காத்திருக்கிறது.

- ஆண்டனிராஜ்     
 


டிரெண்டிங் @ விகடன்