வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (23/03/2017)

கடைசி தொடர்பு:11:20 (25/03/2017)

இதை 'வெறும் இடைத்தேர்தல்' எனக் கடந்து விட முடியாது..! ஆர்.கே.நகர் எழுப்பும் கேள்விகள்

இரட்டை இலை

ட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடவேண்டிய அ.தி.மு.க., இரண்டு, மூன்றாகப் பிளவுபட்டு, எம்.ஜி.ஆர். காட்டிய இரட்டை இலைச் சின்னத்தைத் தொலைத்துவிட்டு பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க. தேர்தல் சின்னத்தை இழப்பது, இது இரண்டாவது முறை. முதல்முறை எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், கட்சியையும், ஆட்சியையும் யார் வழி நடத்துவது என்பதில் ஏற்பட்ட மோதல், கட்சியில் பிளவை ஏற்படுத்த ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. அப்போது, இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கோரியதால், 1989 பொதுத்தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, ஜானகிக்கு இரட்டை புறா, ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னம் கிடைத்தது.

1989-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், இரட்டை இலைச் சின்னத்தை இழந்து இரு தரப்பும் நின்றபோது, தேர்தல் முடிவுகள் பிரச்னையைத் தீர்த்துவைத்தன. மக்கள் யார் பின்னால் நிற்கிறார்கள் என்பதை உணர்த்தியது அந்தத் தேர்தல். ஜெயலலிதா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற, அதைப் பயன்படுத்தி கட்சியைத் தனதாக்கிக்கொண்டார்.

இரட்டை இலை

28 ஆண்டுகளுக்கு பின்னர்...

28 ஆண்டுகளுக்குப் பின்னர்  தற்போது மீண்டும் அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அன்று பொதுத் தேர்தலின்போது முடக்கப்பட்டது. இன்று இடைத்தேர்தலின்போது முடக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதே, அ.தி.மு.க-வுக்கு பலவீனம்தான். இந்தச் சூழலில், இரட்டை இலைச் சின்னம் இல்லை. அ.தி.மு.க. பெயரைப் பயன்படுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் மேல், கட்சி மூன்றாக உடைந்து சின்னாபின்னமாகி இருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு இது பேரதிர்ச்சி தரக்கூடியது.

'1989-ம் ஆண்டு நடந்தது பொதுத்தேர்தல். இது, இடைத்தேர்தல்தானே. இந்த வெற்றி, தோல்வி, கட்சி யார் பக்கம் என்பதை எப்படி முடிவு செய்வதாக அமையும்?' என்ற கேள்வி எழக்கூடும். நியாயமான கேள்வியும்கூட. ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெறும் இடைத்தேர்தல் என நாம் கடந்துவிட முடியாது. ஏராளமான திருப்பங்களும்  சுவாரஸ்யங்களும் சவால்களும் நிறைந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்.

அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் தினகரன்

சசிகலா தரப்பு போட்ட கணக்கு !

இரட்டை இலை முடக்கப்பட்டதில் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது, சசிகலா தரப்பு. 'நிச்சயம் கட்சி சின்னம் முடக்கப்படாது' என்றே சசிகலா தரப்பு நம்பியது. அதற்கு, அவர்கள் சொன்ன கணக்கு கவனிக்கத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியில் இதே போன்று முலாயம் சிங், அகிலேஷ் ஆகியோர் உரிமைகொண்டாடியபோது... பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், எம்எல்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அதில் பெரும்பான்மையானவர்கள் அதாவது 80 சதவிகிதம் பேரின் ஆதரவு இருந்த அகிலேஷ் யாதவ் வசம் சைக்கிள் சின்னத்தையும், கட்சியையும் ஒப்படைத்தது தேர்தல் ஆணையம்.

அதேபோன்று இப்போது கணக்கிட்டால், மொத்தம் அ.தி.மு.க-வில் உள்ள 2,141 பொதுக்குழு உறுப்பினர்கள், 50 எம்பி-க்கள், 135 எம்எல்ஏ-க்கள் என மொத்தம் 2,326 பேரில் கிட்டத்தட்ட 2250-க்கும் மேற்பட்டோர் தங்கள் பக்கமே இருக்கிறார்கள். எனவே அ.தி.மு.க-வும், சின்னமும் எங்களுக்கே இதில் எந்தச் சிக்கலும் இல்லை என நம்பினர். பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்பதை இப்போதைக்கு தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்ளாது என நம்பினர்.

தினகரன் வேட்பு மனுத்தாக்கல்

சசிகலா தரப்புக்கு வெற்றி ஏன் முக்கியம்?

அதேபோன்று, பொதுச் செயலாளர் நியமனத்தை இப்போதைக்கு தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளவில்லை. அதே சூழலில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில்கொண்டு கட்சியும், சின்னமும் யாருக்கு என்பதை முடிவு செய்யவும் இல்லை. சசிகலா தரப்பு சொல்லும், 'இது உட்கட்சிக் குழப்பம்' என்பதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. அதே சூழலில், "சுமார் 20 ஆயிரம் பக்கங்கள்கொண்ட இந்த ஆவணங்களை ஆய்வுசெய்ய கால அவகாசம் வேண்டும். அவசரப்பட்டு ஏதேனும் ஒன்று சொல்லி, பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இடைக்காலமாக இந்தச் சின்னம் முடக்கப்படுகிறது" என்றே தெரிவித்துள்ளது.

இரட்டை இலைச் சின்னம் என்பது அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய பலம். அதை இழந்து நிற்பது என்பது மிகப்பெரிய பலவீனம். அதுவும் இப்படி நெருக்கடியான சூழலில் பெரும் இடரை ஏற்படுத்தக்கூடும். சசிகலா தரப்புக்கு இது மிக முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலில் வென்றால், கட்சியும் ஆட்சியும் எங்களுக்குத்தான் என்பதை அவர்கள் நிலைநிறுத்த முடியும். இந்தத் தேர்தலில் வென்றால், தினகரன் முதல்வராக முடியும். இந்தத் தேர்தலில் வென்றால்தான் விமர்சனங்களை எதிர்கொள்ளமுடியும். எனவே, தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என சசிகலா தரப்பு பாடுபடும்.  

ஒருவேளை, இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தால், சசிகலா தரப்பில் உள்ளவர்கள் அங்கேயே இருப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தற்போது, 122 எம்எல்ஏ-க்கள் சசிகலா தரப்பில் இருக்கிறார்கள். இதன் எண்ணிக்கை குறைந்தால், ஆட்சியை இழக்கக்கூடும். மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டார்கள் எனச்சொல்லி, கட்சி மேலும் பலவீனமடையக்கூடும். இதைத் தவிர்க்க, வெற்றி பெற்றே ஆகவேண்டிய அவசியம் தினகரனுக்கு உள்ளது.

மதுசூதனன் வேட்புமனுத்தாக்கல்

உற்சாகத்தில் பன்னீர் தரப்பு...

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். உண்மையில் சின்னம் முடக்கப் பட்டதை பன்னீர்செல்வம் தரப்பு கொண்டாடவேசெய்கிறது. சின்னம் முடக்கப்பட்டது பன்னீர் அணிக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது. பன்னீர்செல்வம் அணி வலுப்பெறும் வாய்ப்பு கூடியிருப்பதாகவே கருதப்படுகிறது.

இந்தத் தேர்தலில் பன்னீர்செல்வம் தரப்பு வென்றால், மக்கள் ஆதரவு எங்களுக்குத்தான் எனச்சொல்லி, கட்சியின் நிர்வாகிகளை வளைத்து, கட்சிக்கு உரிமைகொண்டாட முடியும். பன்னீர்செல்வம் தரப்புக்கு 'மின் விளக்கு' சின்னம் கிடைத்துள்ளது. இரட்டை இலையோடு தொடர்பு படுத்தி பிரச்சாரத்தைத் துவக்கி இருக்கிறார்கள். மக்கள் சக்தி எங்கள் பக்கம்தான் எனச்சொல்லும் பன்னீர்செல்வம் தரப்பு, அதைத் தெரிவிக்க தேர்தலில் வென்றாக வேண்டும். தேர்தலில் தோல்வியைத் தழுவினால், இப்போது இருக்கும் உற்சாகத்தை  பன்னீர் தரப்பு இழக்கக்கூடும். எனவே, பன்னீர் தரப்புக்கு இந்த வெற்றி மிக முக்கியம்.

ஸ்டாலின்

இப்போது கூட வெற்றி கைவசமாகவில்லை என்றால்...?

அ.தி.மு.க. மூன்றாகப் பிரிந்து தேர்தலைச் சந்திக்கிறது. இந்தச் சூழலில் தி.மு.க. வெற்றிபெறவேண்டியது அக்கட்சிக்கு மிக முக்கியம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருக்கும். வெற்றியை நெருங்கி வந்த தி.மு.க., மக்கள் சக்தி எங்களைத்தான் ஏற்கும் என்பதை நிரூபிக்கவேண்டிய நேரம் இது. அ.தி.மு.க-வுக்கு இணையான பலம் கொண்ட கட்சி எனச் சொல்லிக்கொள்ளும் தி.மு.க., இந்தத் தேர்தலில் பெரும் வெற்றியைப்  பெறவேண்டியது மிக அவசியம்.

ஒரு வேளை இந்தத் தேர்தலில் தி.மு.க. தோல்வியைத் தழுவினால், பலவீனமான கட்சியாகப் பார்க்கப்படும். மக்கள் சக்தி தி.மு.க-வை ஏற்கவில்லை என்பதாக அமையும். தனக்கு எதிரே நிற்கும் கட்சி மிகப் பலவீனப்பட்டு, மூன்றாக உடைந்து தேர்தலைச் சந்திக்கும்போது கூட தி.மு.க-வால் வெற்றிபெற முடியவில்லை என்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தும். விரைவில் பொதுத் தேர்தலே வரும் என தி.மு.க. தலைவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அப்படி ஒரு சூழல் வந்தால், இடைத்தேர்தல் முடிவு கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும். இதை தி.மு.க-வினர் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தீபா

பலத்தை நிரூபிக்க முயலும் பிற கட்சிகள்...

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும்' என்பதை முதன்முதலில் உறுதியிட்டுச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியது, பி.ஜே.பி. மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும், வடக்கில் சில மாநிலங்களிலும் வென்று ஆட்சி அமைத்துள்ள பி.ஜே.பி., தமிழகத்தில் நடக்கும் இந்தத் தேர்தலை மிக முக்கியமானதாகவே கருதுகிறது. மக்களுக்கு அறிமுகமான திரைத்துறை பிரபலமான கங்கை அமரனை களம் இறக்கியுள்ள பி.ஜே.பி., இந்தத் தேர்தலில் பெரும் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதை இலக்காக்கியுள்ளது. தமிழகத்தில் தாங்கள் பலம் மிக்கவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்த்த, இந்தத் தேர்தலை பி.ஜே.பி. பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.

இவர்களோடு அ.தி.மு.க-வில் தீபா அணி, தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பலத்தைக் காட்ட மோதுகின்றன. ஜெயலலிதாவின் வாரிசு என்ற அடைமொழியோடு தேர்தலைச் சந்திக்கும் தீபாவும், மக்கள் நலக்கூட்டணியை உடைத்து, தேர்தலைச் சந்திக்கும் மார்க்சிஸ்ட்டும் தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்கவேண்டியது அவசியமாகிறது.

அதிகாரப்பூர்வ அ.தி.மு.க. யார்? மக்கள் சக்தி யார் பின்னால் இருக்கிறது? தி.மு.க-வின் பலம் என்ன? பி.ஜே.பி. தமிழகத்தில் கால் பதிக்க முடியுமா? எனப் பல கேள்விகளுக்கும் பதிலாக, இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அமையும். ஆகையால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை வெறும் இடைத்தேர்தலாகக் கடந்துசெல்ல முடியாது.

- ச.ஜெ.ரவி

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்