வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (26/03/2017)

கடைசி தொடர்பு:13:21 (26/03/2017)

விஷம் வைத்துக் கொல்லப்படும் மயில்கள்..! திருப்பூர் அருகே விபரீதம்

மயில்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் ஒரே நாளில் 30 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. விவசாயிகளின் நண்பன் மண்புழு என்றால், விவசாயிகளின் எதிரி மயிலும் யானையும்தான் என்றாகிவிட்டது. விதைப்பில் இருந்து அறுவடை வரை மயில் கூட்டங்களிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவது பெரும்பாடாக இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள் பலரும். தக்காளி, பூசணி, வெள்ளரி போன்ற காய்கறி வயலில் புகுந்து பழங்களைக் கொத்தித் தின்று கபளீகரம் செய்யும் மயில் கூட்டங்கள்  பட்டாசு வெடித்து, கவண் சுற்றி கல் எரிந்து, வாய் ஓசை எழுப்பி, தகரம் தட்டி சத்தம் போட்டாலும் வயலை விட்டுப் போவதில்லை.

தேசியப்பறவை என்று பாசத்தோடு துன்புறுத்தாமல் விட்டுவிடும் விவசாயிகள் பலர் இருந்தாலும், அறியாமையின் காரணமாக விஷம் வைத்தும் சிலர் கொன்றுவிடுகிறார்கள். விவசாயிகள் மயில்கள் மோதலைத் தடுக்க என்னதான் வழி? அதன் இனப்பெருக்கத்தை எப்படித்தடுப்பது என்பது குறித்து கூறுகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும் பறவையின ஆய்வாளருமான கோவை சதாசிவம் .

கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், பெரம்பலுர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் மயில்கள் உள்ளன. இந்திய இயற்கை சூழலில்  ஒரு பெரிய பறவையால் இன்று வாழமுடியாத சிக்கலும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. குறுங்காடுகளும், புதர்களும் நிறைந்த முல்லை நிலப்பகுதியில் வாழ்ந்த பறவை இன்று அந்த நிலம் அழிந்து போனதால் மருதநிலம் நோக்கி புலம்பெயர்ந்து வந்துள்ளது.  மயில்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு காலத்தில் இயற்கையின் உணவுச்சங்கிலியில் மயில்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது.

நரி, கீரி, காட்டுப்பூனை போன்ற சிறு விலங்குகளின் உணவாக மயில் முட்டைகள், மயில் குஞ்சுகள் இருந்தன. அதனால் அதன் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. புதர்களை அழித்தும், வேட்டையாடியும் அந்த சிறு விலங்குகளை மனிதன் அழித்து விட்டான். இப்போது மயில் பெருகிடிச்சு என்று புலம்புகிறான். இது யார்செய்த தவறு?

குன்றுகளை உடைத்து குவாரிகள் அமைத்தது யார்? குறுங்காடுகளை அழித்து தோட்டம் அமைத்தது யார்? புதர்களை அழித்து புதிய காலனிகள் உருவாக்கியது யார்? அத்தனையும் செய்தது மனிதன்தான். 

புழு, பூச்சிகள், விதைகள், கொட்டைகள் தின்று யாருக்கும் தீங்கு இழைக்காமல் வாழ்ந்துவந்த மயில்களின் வாழ்விடத்தை அழித்தோம். விளைவு இன்று வேறு நிலம் வந்து வெள்ளாமை தின்கிறது. சராணாலயம் அமைக்கலாம் என்கிறார்கள். பறக்கும் பறவைக்கு சரணாலயம் எப்படி சாத்தியப்படும். மயில்கள் குறித்து மயில் என்கிற ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளேன். அதில் பெரிய பறவையான மயிலுக்கான வாழ்வியல் சிக்கலைப் பதிவு செய்துள்ளேன்.” என்றார்

மயில்

குறிப்பாக, ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த புதர்கள் நிறைந்த குளங்களை வெட்டி அடித்த மண்கொள்ளையில் மயில்களுக்கான வாழ்விடம் பறிபோனதற்கு ஒரு முக்கிய காரணம்.

பெரிய பறவையான மயிலுக்கு ஏற்பட்டுவரும் இதே நிலைமை, பெரிய விலங்கான யானைக்கும் ஏற்பட்டுள்ளது. யானைகள் வாழ்விடமும் வழித்தடங்களும் அழிக்கப்பட்டதில் அது யானைகள் விவசாயிகள் மோதலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மேலும் இதுகுறித்து  ஓய்வு பெற்ற வன அலுவலர் ராஜசேகரனிடம் கேட்டோம்;

’’பல்லுயிர் பெருக்கத்துக்கு அனைத்து உயிரினங்களின் பங்களிப்பும் தேவை. அதில் மயிலும் ஒன்று. மயிலை எந்த விதத்தில் கொன்றாலும் சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத்தர முடியும். யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காத மயிலை கொல்வது கண்டிக்கத்தக்கது. ஓசை எழுப்பினாலே ஓடி விடும் பயந்த சுபாவம் உடையது மயில்.
அதைக் கட்டுப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது” என்றார். 

- ஜி.பழனிச்சாமி


டிரெண்டிங் @ விகடன்