வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (24/03/2017)

கடைசி தொடர்பு:18:00 (24/03/2017)

ஆர்கே நகர் வேட்பாளர்களின் சொத்துவிவரங்கள் இதுதான்..!

ஆர்கே நகர்

வாக்காளர் என்பதற்கு பெருமை கொள்ளும் ஒரே விஷயம் இருக்கிறது என்றால், அது தாங்கள் ஓட்டுப்போடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை தெரிந்து கொள்ளும் வசதிதான். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரம் உள்ளிட்ட தகவல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

கார் இல்லாத தினகரன்

ஆர்கே நகரில் அ.தி.மு.க (அம்மா) அணி வேட்பாளராகப் போட்டியிடும் டி.டி.வி தினகரன் தாக்கல் செய்த அபிடவிட்டில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அவர், அடையாறில் உள்ள கற்பகம் கார்டன், வெங்கடேஸ்வரா நகரில் வசிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மன்னார்குடியில் உள்ள பின்ட்லே உயர்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் சிம்மக்களூரில் பி.இ சிவில் என்ஜினீயரிங் படிப்பைத் தொடராமல் இடையில் நின்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு எதிரான பெரா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 6-ம் தேதி வெளியான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார்.

டி.டி.வி.தினகரன்

பணம் உள்ளிட்ட அசையும் சொத்துக்களின் மதிப்பு 11,45,781 ரூபாய் 94 பைசா  என்று கூறி இருக்கிறார். மனைவி அனுராதா பெயரில் இருக்கும் ரொக்கம், வங்கி கணக்கு இருப்பு உள்ளிட்டவற்றின் மதிப்பு 7,18,66,055 ரூபாய் 23 பைசா என்று தெரிவித்துள்ளார். தன் மகள் பெயரில் 4,95,4,942 ரூபாய் 52 பைசா இருப்பதாக கூறி உள்ளார்.  
தன்பெயரில் இப்போதைய மதிப்பின்படி 57,44,008 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் இருப்பதாக கூறி உள்ளார். தன் மனைவி பெயரில் 2,40, 71,687 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளதாக கூறி உள்ளார். மகள் பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்று கூறி உள்ளார். தன் மனைவி பெயரில் 5,40,04,946 ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறி உள்ளார். தன்னுடைய பெயரில் கார் உள்ளிட்ட எந்த வாகனமும் இல்லை என்று கூறி உள்ளார். மனைவி பெயரில் டாட்டா சஃபாரி கார் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.  

விவசாயி மதுசூதனன்

பன்னீர் செல்வம் அணியின் சார்பில், ஆர்கே நகர் தேர்தல் அதிகாரியிடம் மதுசூதனன் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் பழைய வண்ணாரப்பேட்டையில் கோதண்டராமன் தெருவில் வசித்து வருவதாகக் கூறி உள்ளார்.  கொருக்குப்பேட்டையில் உள்ள தியாகராயா பள்ளியில் 1956-ல் எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தாமும், தம் மனைவியும் விவசாயி என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுசூதனன்

தன்னுடைய பெயரில் 1.37 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் இருப்பதாகக் கூறி உள்ளார். மனைவி ஜீவா பெயரில் 3.30 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் இருப்பதாகக் கூறி உள்ளார். பணம், தங்கம், கார் உள்ளிட்ட அசையும் சொத்துக்களாக தமக்கு 18,89,676 ரூபாய் இருப்பதாகக் கூறி உள்ளார். மனைவி பெயரில் 51,72,658 ரூபாய் இருப்பதாகக் கூறி உள்ளார். மதுசூதனன் பெயரில் ஸ்கார்பியோ கார் ஒன்றும் இருக்கிறது.  

கோடீஸ்வர வேட்பாளர் தீபா

ஆர்கே நகரில் சுயேட்சை வேட்பாளராக மனு செய்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் பணம், வங்கி கணக்கு, பிறருக்குக் கடனாகக் கொடுத்த தொகை எல்லாம் சேர்த்து 1,05,96,604 ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். (ராஜா என்பவருக்கு 40 லட்சம் ரூபாய், ஆர்.சுரேஷ்  என்பவருக்கு 20 லட்சம் ரூபாய், தினேஷ் பாபு என்பவருக்கு 10.65 லட்சம் என கடனாக கொடுத்து இருக்கிறார்.) 2016-ம் ஆண்டு வாங்கிய ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தை தீபா வைத்திருப்பதாக கூறி உள்ளார். இப்போதைய மதிப்பின்படி தம்முடைய வீடு 2 கோடி ரூபாய் மதிப்புள்ளது என்றும் தீபா குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெ.தீபா

டூ வீலர் வைத்துள்ள தி.மு.க வேட்பாளர்

தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், சர் தியாகராயா கலைக்கல்லூரியில் 1996-ல் பிகாம் முடித்துள்ளதாகவும்,  திருப்பதியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் குளோபல் சட்டக் கல்லூரியில் 2009-ல் எல்.எல்.பி முடித்துள்ளதாகவும் கூறி உள்ளார். வழக்கறிஞர் என்றும் அபிடவிட்டில் கூறி உள்ளார். மருதுகணேஷின் மனைவி கவிதா ஆசிரியை ஆகப் பணிபுரிவதாகவும் கூறி உள்ளார். தம் பெயரில் பணம், நகைகள் என ஆகியவற்றின் மதிப்பு ரூ.2,79,531 ஆகும். அவரது மனைவி பெயரில் இருக்கும் பணம், நகைகளின் மதிப்பு ரூ.7,08,609 ஆகும். தம்முடைய பெயரில் உள்ள அசையா சொத்தின் மதிப்பு 10  லட்சம் ரூபாய் என்று கூறி உள்ளார். மனைவி பெயரில் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல தமது மகள், மகன் பெயரில் சொத்துக்கள் ஏதும் இல்லை என்றும் கூறி உள்ளார். தமக்கு சொந்தமாக PASSION PRO-HERO என்ற இரு சக்கரவாகனம் மட்டும் உள்ளதாக மருதுகணேஷ் கூறி உள்ளார்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதன் தண்டையார் பேட்டை செல்லியம்மன் கோவில் தெருவில் வசிப்பதாகக் கூறி உள்ளார். 1993-ல் 10-ம் வகுப்பு முடித்துள்ளார். இவர் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் தம்முடைய பெயரில் ரொக்கம், எல்.ஐ.சி., பாலிசி உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ 1,47,235 என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய மனைவி பெயரில் நகைகள், ரொக்கம், எல்.ஐ.சி பாலிசி உள்ளிட்டவற்றின் மதிப்பு 4,58,272 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். தம்முடைய பெயரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் இப்போதைய மதிப்பு  5 லட்சம் ரூபாய் என்று கூறி உள்ளார்.

- கே.பாலசுப்பிரமணி
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்