வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (25/03/2017)

கடைசி தொடர்பு:17:08 (25/03/2017)

'இரட்டை இலை' முடக்கத்தை விட முக்கிய பிரச்னைகள் நிறைய இருக்கிறது தலைவர்களே..!

“இன்னும் ஆறு மாதத்துக்குள் மீண்டும் இந்த தொகுதிக்கு தேர்தல் வரலாம். உங்கள் பாடு பரவாயில்லை. ஒரே ஜாலி தான். ஆர்.கே.நகர் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வின் முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான துரைமுருகன் சிரித்துக்கொண்டே மேடையில் பேசிய வார்த்தைகள் இவை. 'என் இரண்டாண்டு பணி அனுபவத்தில், ஆர்.கே.நகரின் மூன்று தேர்தல்களை பார்த்து விட்டேன். இந்தாண்டில் இனியும் ஒருமுறை ஆர்.கே.நகர் தேர்தலை பார்த்து விடுவேன் போல..' இளம் பெண் செய்தியாளர் ஒருவர் நகைச்சுவையாய் பகிர்ந்து கொண்ட தகவல் இது.

துரைமுருகன் பேசியதைப்போலத்தான் தமிழகத்தில் பரவலாக உள்ள மக்கள் ஆர்.கே.நகர் குறித்து கருதுகிறார்கள். ஆர்.கே.நகருக்கு என்ன, அது வி.ஐ.பி. தொகுதி என கருதுகிறார்கள். அடுத்தடுத்த தேர்தலால் தொகுதி செழிப்பாக உள்ளதாக நினைக்கிறார்கள். துரைமுருகனை போல, அந்த இளம்பெண் செய்தியாளரைப் போலத்தான் நம்மில் பலர் இந்த இடைத்தேர்தலை நகைச்சுவையாய் கடந்து செல்கிறோம்.

ஆனால் நாம் எண்ணுவதை போல... நாம் பேசுவதை போல... ஆர்.கே.நகர் தொகுதி செழிப்பாகவோ, அல்லது நகைச்சுவையாய் கடந்து செல்ல, அவர்கள் மகிழ்ச்சியாகவோ இல்லை என்பது தான் நிதர்சனம். அடுத்தடுத்து நடந்த தேர்தல்கள் என்பது மக்களுக்கு நன்மை பயப்பதாக அமைந்திருக்கவில்லை என்பது தான் நிதர்சனம். இப்போது இன்னுமொரு தேர்தல்.

ஆர்.கே.நகர் தொகுதி

ஒரு முதல்வரின் தொகுதி இப்படியா இருக்கும்?

2001ம் ஆண்டில் இருந்து ஆர்.கே.நகர் அ.தி.மு.க.வின் கோட்டை எனும் அளவுக்கு தான் இருந்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளில் நடந்த 5 சட்டமன்ற தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வென்றுள்ளது. இதில் 2015ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் மற்றும் 2016ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல்களில் நின்று வென்றவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

ஒரு முதல்வரின் தொகுதி என்றால் எப்படி இருக்கும்? என நாம் கற்பனை செய்வது இங்கே பலனளிப்பதில்லை. முதல்வரின் தொகுதி என்பதற்கான எந்த முகாந்திரமும் ஆர்.கே.நகர் தொகுதி கொண்டிருக்கவில்லை. அத்தியாவசிய தேவையான குடிநீரில் துவங்கி அனைத்து பிரச்னைகளும் நிரம்பி கிடக்கிறன ஆர்.கே.நகரில்.

பிரச்னைகள் நிரம்பி கிடக்கும் தொகுதியில் தேர்தல் வருகிறது என்றால் அந்த பிரச்னைகளை தீர்க்க பலனளிக்கும் தானே என நாம் நினைக்கக் கூடும். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் 'பேசு பொருள்' மக்களின் பிரச்னைகள் அல்ல என்பது தான் கவலை அளிக்கும் விஷயம்.

ஆர்.கே.நகர் தொகுதி

'வி.ஐ.பி. தொகுதி அல்ல... பின் தங்கிய தொகுதி இது'

'எழில் நகர்' என ஆர்.கே.நகரில் ஒரு பகுதி இருக்கிறது அங்கே செல்ல வேண்டும் என்றால், அப்பகுதி மக்களிடம் குப்பை மேடுக்கு எந்த வழியில் செல்ல வேண்டும் என கேட்க வேண்டியதாய் இருக்கிறது. தண்டையார்பேட்டை பகுதியில், 'பெட்ரோலிய குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக குடிநீரில் எண்ணெய் கலந்து வருகிறது. தண்ணீர் பிடிக்கும் பக்கெட்டுகள் தீப்பிடித்து எரிகிறன. எண்ணெய் கலந்து வரும் தண்ணீரை என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்கள். அப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக முறையிடுவது, இன்றும் புலம்பலாகவே தோன்றுகிறது.

சென்னையின் மொத்த குப்பையையும் கொடுங்கையூரில் கொட்டி சூழலை மாசுபடுத்தி, சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டதைப்பற்றி மக்களின் குற்றச்சாட்டுகள் யார் செவிகளுக்கும் கேட்பதாய் இல்லை. 'வ.உ.சி. நகரில் உள்ள மீன் மார்க்கெட்டின் மிக மோசமான நிலை குறித்து தெரிவித்து, அதை சரிசெய்து கொடுக்க வேண்டும்' என்ற வார்த்தைகள் அதிகாரத்தில் உள்ளவர்களை சென்றடைந்ததா என்பதையும் அறிந்தபாடில்லை.  2015ம் ஆண்டு துவங்கி இந்த இரண்டு ஆண்டுகளில் இது மூன்றாவது தேர்தல். இரு முறை வென்றவர் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா. அதற்கான எந்த அடையாளங்களும் தொகுதியில் இல்லை. மிகவும் பின் தங்கிய தொகுதிகளில் ஒன்றாகத்தான் இந்த தொகுதி இருந்து வருகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி தினகரன் பிரச்சாரம்

'பேசு பொருள்' ஆகாத மக்கள் பிரச்னைகள் !

பொதுவாக தேர்தல் என்றால் தொகுதியின் மக்கள் பிரச்னைகள் முக்கிய பேசு பொருளாகும். அரசியல் தலைவர்கள் அதைப்பற்றி பேசுவார்கள். அதை செய்து தருவதாக உறுதி அளிப்பார்கள். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இதிலும் வித்தியாசப்பட்டே இருக்கிறது. அ.தி.மு.க. மூன்றாக பிரிந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இந்த மூன்று பிரிவுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டே தேர்தலை சந்திக்கிறார்கள்.

சசிகலா தரப்பில் போட்டியிடும் தினகரனின் தேர்தல் பிரச்சாரம் என்பது, 'கட்சிக்கு துரோகம் செய்து, எம்.ஜி.ஆர். காட்டிய இரட்டை இலை சின்னதை முடக்க காரணமாக இருந்தவர்களை தோற்கடித்து வெற்றி பெற வைக்க வேண்டும்' என்பதே முதன்மையாக இருக்கிறது. 'ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்து விட்டார். அந்த அணிக்கு  பாடம் புகட்டுங்கள்' என்றே சசிகலா தரப்பு தொடர்ச்சியாக பேசி வருகிறது.

மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், 'அம்மாவின் (ஜெயலலிதா) மரணத்தில் மர்மம் இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்களை தோற்கடிக்க வேண்டும்" என்பதாக இருக்கிறது. இருவரும் தொகுதி பிரச்னைகளை பேசுவதாக இல்லை. எதுவும் நடக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாகவும் இல்லை. ஏனென்றால் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெயலலிதா.

மறுபுறம் தி.மு.க. தரப்பிலும் அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்னைகளே பெரிதும் பேசப்ப்படுகிறது. 'இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வரும். இன்னுமொரு தேர்தலை நீங்கள் சந்திக்க இருக்கிறீர்கள்' என்று தி.மு.க. தலைவர்கள் பேசி வருகிறார்கள். துரைமுருகன் பேச்சு தான் இதன் உச்சம்.

ஆர்.கே.நகர் தொகுதி மதுசூதனன் பிரச்சாரம்

தேர்தலை சந்திக்கும் பிரதான கட்சிகள் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வெற்றியையும், அதன் பின்னால் நடக்கும் அரசியல் மாற்றத்தை பற்றியுமே கவலைப்படுகிறார்கள். பெட்ரோல் கலந்து வரும் தண்ணீர், பற்றி எரியும் தண்ணீர் கலன்கள், குப்பை கூளங்களுக்கிடையே வாழ்க்கை, சுகாதாரமில்லாத மார்க்கெட் என ஆர்.கே.நகரின் நிஜமுகம் நம்மை அச்சுறுத்துகிறது. ஆனால் 'இதைப்பற்றி துளியும் கவலை இல்லை என்பது போல் இயங்கும் அரசியல் கட்சிகளின் செயல்பாடு அதை விட அச்சுறுத்துகிறது.

இரட்டை இலை சின்னம் முடக்கம், ஜெயலலிதா மரணம், அடுத்த தேர்தல் இவை எல்லாவற்றையும் விட... தண்ணீரில்லை, சுகாதார பாதிப்பு என்பது தான் முக்கிய பிரச்னை என்பதை இவர்களுக்கு எப்படிச் சொல்ல...

- ச.ஜெ.ரவி

படங்கள் வி.ஸ்ரீனிவாசலு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்