ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா..! விழா நாயகர்களின் அணிவரிசை - 1 #AnandaVikatanNambikkaiAwards #VikatanAwards | Ananda vikatan Nambikkai Awards 2016

வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (27/03/2017)

கடைசி தொடர்பு:13:11 (30/03/2017)

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா..! விழா நாயகர்களின் அணிவரிசை - 1 #AnandaVikatanNambikkaiAwards #VikatanAwards

வணக்கம், ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் ’ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்’ கடந்த ஜனவரி மாதம் ஆனந்த விகடனில் அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்களில் சிறந்த மனிதர்களுக்கும், நம்பிக்கைகள் அளிக்கும் மனிதர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அவர்களின் செயல்பாடுகளை வைத்து ‘டாப் 10 மனிதர்கள்’ நாளைய தமிழகத்தின் பல்வேறு துறை நம்பிக்கை மனிதர்களை ‘டாப் 10 நம்பிக்கைகள்’ ஆகிய பிரிவில் விருதுகள் விகடனின் சார்பில் வழங்கப்படுகிறது.  அது போல ஒவ்வொரு ஆண்டும் வெளியான புத்தகங்களில் துறைவாரியான மிகச்சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா மார்ச் 30ம் தேதி சென்னையில்  நடை பெறுகிறது.     

உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் , தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் ரவிச்சந்திரன் அஸ்வின்,  ’சளைக்காத சமூகப்போராளி’ முகிலன், அடர்த்தியான ஆயிரம் கவிதைகளை ஒரே ஆண்டில் பல்வேறு பிரச்சினை சார்ந்து எழுதிய கவிஞர் மனுஷ்ய புத்திரன், கலைக்களஞ்சியமும், தமிழ் மக்களின் அறிவுத்திரட்டுமான ’தமிழ் விக்கிபீடியா’வின்  முன்னோடி மயூரநாதன், அதிகார முகமூடிகளை தன் கேலிச்சித்திரத்தால் கிழித்துக்காட்டிய ‘கலகக்கார கேலிச்சித்திரன்’ ஹாசிப் கான், தொடர்ந்து 17 ஆண்டுகளாக இந்திய பெண்கள் அணியில் கிரிக்கெட் விளையாடி வந்தாலும் இன்றும் நல்ல ஃபார்மில் இருக்கும் ’தமிழ்ப் பெண்’ மித்தாலி ராஜ், ஒற்றைகாலில் எட்டாத உயரத்தை தாண்டிய ‘தங்க’ மாரியப்பன், இந்திய மனித உரிமைகளின் மீது தன் படைப்பினால் விசாரணை நடத்திய ‘வெற்றிமாறன்’ திருநெல்வேலிக்கு தெற்கே குக்கிராமத்தில் பிறந்து இன்று ’விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநராக உயரம் தொட்டுள்ள ‘சாதனைத் தமிழன்’  இஸ்ரோ.சிவன், தமிழகத்தை தாய்மடியாக மாற்றிக்கொண்டு இயற்கை விவசாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மலையாள தம்பதி ரெஜி - லலிதா ஜார்ஜ்,  ஆகியோருக்கு டாப் 10 மனிதர்கள் விருதுகளும், டாப் 10 நம்பிக்கைகள் ,மற்றும் இலக்கிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. 

தமிழகத்தின் சுழல் புயல்

ரவிச்சந்திரன் அஸ்வின், (கிரிக்கெட் வீரர்)

லகின் நம்பர் ஒன் பௌலர் நம்ம தமிழன் என்பது தமிழ்நாட்டின் பெருமை. அத்தனை டாப் பேட்ஸ்மேன்களையும் அலறவைத்த அஸ்வின், சுழலில் ஆண்டு முழுவதும் பின்னியெடுத்தது விக்கெட் அறுவடை. அநாயாசமாக சீனியர்களின் பல சாதனைகளை அடித்து உடைத்தார். எட்டு டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகள், பேட்ஸ்மேனாக 336 ரன்கள், 19 டி-20 போட்டிகளில் 27 விக்கெட்டுகள்… என 2016-ம் ஆண்டில் அஸ்வின் ரெக்கார்டுகள் வேற லெவல். கடைசி 20 டெஸ்ட்களில் 133 விக்கெட்டுகள் என்பதும் இன்னோர் இந்திய சாதனை. போன வருடம் ஐ.சி.சி-யின் தரவரிசையில் டெஸ்ட் போட்டிப் பந்து வீச்சாளர்களில் நம்பர் ஒன்னாக வந்தவர், இந்த ஆண்டும் அதைத் தக்கவைத்தார். எல்லா கிரிக்கெட் ஜீனியஸ்களாலும் புகழப்படும் அஸ்வின் முன்னால் உடைபடக் காத்திருக்கின்றன இன்னும் பல சாதனைகள்!


இயற்கைப் போராளிகள்

ரெஜி ஜார்ஜ் - லலிதா ரெஜி  (சமூகச் செயற்பாட்டாளர்கள்)

ந்தத் தம்பதிக்குப் பூர்விகம் கேரளா என்றாலும், 23 ஆண்டுகளாகத் தமிழகம்தான் தாய்மடி. பழங்குடி மக்கள் வாழும் தமிழகக் கிராமங்களில் தங்கி, மருத்துவ சேவை செய்வதில் தொடங்கியது இந்தத் தம்பதியின் பயணம். மனிதர்களுக்கு மட்டும் அல்ல, இந்த மண்ணுக்கும் மருத்துவம் தேவை என உணர்ந்த கணத்தில் மலர்ந்தது புதிய அத்தியாயம். சேலம் சிட்லிங்கி பள்ளத்தாக்குப் பகுதியில் படிப்படியாக விவசாயம் அழிந்துகொண்டிருந்த 21 கிராமங்களில், விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புஉணர்வை உண்டாக்கினார்கள். அவர்களை ஒன்றிணைத்து  ‘சிட்லிங்கி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். அறுவடை முதல் விற்பனை வரை அனைத்தையும் அந்த விவசாயிகள் மூலமாகவே வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்ட, அது மகத்தான முன்னுதாரணமாக ஆனது. 20 ஆண்டுகளாக தரிசாகக் கிடந்த நிலங்கள் இந்த மருத்துவர்களால் பசுமை பூமியாக உயிர்த்திருக்கிறது. இந்தப் பகுதியில் வேளாண் தொழிலைக் கைவிட்டு வெளியூர் வேலைகளுக்குப் போனவர்கள், இப்போது விவசாயத்தை நோக்கித் திரும்பி வருவது நம் தேசத்துக்கான பாடம். நான்கு பேருடன் தொடங்கிய இந்த இயற்கை விவசாயப் புரட்சி, இன்று 300 விவசாயக் குடும்பங்களுக்கும் மேல் வளர்ந்திருப்பது, இவர்களின் அன்பில் தழைத்த ஈர விருட்சம்!


விண்வெளித் தமிழன்

கே.சிவன் (இயக்குநர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்)

நாகர்கோவிலுக்குப் பக்கத்தில், வல்லங்குமாரவிளை என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். மிக எளிய குடும்பத்தில் முதல் தலைமுறையாக முளைத்து, சென்னை எம்.ஐ.டி-யில் படித்து, அயராமல் உழைத்து, இந்திய விண்வெளித் துறையின் தவிர்க்க முடியாத மனிதராக உயர்ந்து நிற்பவர் சிவன். படிப்படியாக வளர்ந்து, இன்று விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநராக உயரம் தொட்டிருக்கிறார். சந்திராயன், மங்கள்யான் வெற்றிகளில் இவரது பங்கு மிக முக்கியமானது. அடுத்த மைல்கல்லாக ‘மார்க் 3’ என்கிற புதுமையான ராக்கெட் ஆய்வில் இருக்கிறார் இஸ்ரோ சிவன். இன்னும் அண்ணாந்து பார்க்கக் காத்திருக்கிறது தேசம்!


எல்லைகள் உடைத்த இயக்குநர்

வெற்றி மாறன் (திரைப்பட இயக்குநர்)

வெற்றி மாறனின் ‘விசாரணை’, பல தளங்களில் தமிழ் சினிமாவின் எல்லைகளை உடைத்து விஸ்தரித்தது. சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நாவலின் மையமே ‘விசாரணை’ ஆனது. அதை அதிரவைக்கும் சினிமா அனுபவமாக மாற்றியதே வெற்றியின் வெற்றி. எளிய மனிதர்களின் மேல் நடக்கும் அதிகாரத் தாக்குதலையும், காவல் துறைக்கும் அரசியல் அதிகாரத் தொடர்புகளுக்கும் பின்னால் ஒளிந்துகிடக்கும் குரூர  அழுக்குகளையும் பதறப் பதறக் காட்டியது படம். இந்தப் படம் பார்த்த ஒவ்வொருவருக்குள்ளும் ‘நமக்கும் இப்படி நடக்கலாம்’ என்ற விசாரணையை உருவாக்கின காட்சிகள். பாடல்கள் இல்லாமல், சமரசம் இல்லாமல் படமாக்கலிலும் இது புதுப் பாய்ச்சல். வெனீஸ் திரைப்பட விழாவில் மனித உரிமைக்கான படைப்புகள் பிரிவில் கௌரவம், மூன்று தேசிய விருதுகள், இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் வரை போனது என வெற்றி மாறன் தந்தது தமிழனுக்கான பெருமை!    


தன்னம்பிக்கைத் தமிழன்

மாரியப்பன்  (தடகள வீரர்)

சேலம் பெரிய வடகம்பட்டி மாரியப்பன், ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது, ஓர் அபார சரிதம்! செங்கல் சூளையில் வேலைபார்க்கும் ஏழைத்தாய், குடிகார அப்பா என வறுமைக்கு வாக்கப்பட்ட வாழ்க்கை. துள்ளித் திரியும் பள்ளி வயதில் நடந்த திடீர் விபத்தில் ஒரு கால் சிதைந்தது. ‘நடக்கவே முடியாது’ என்ற உடல் தடையை உடைத்து எழுந்தது மாரியப்பனின் நன்னம்பிக்கை. சீராக நடக்க முடியாத காலுடன் சீறிப் பாய்ந்த  இவரது கனவு, உயரம் தாண்டுதலை இலக்காக்கியது. ஏழைத்தாயின் அணைப்பும், பள்ளி ஆசிரியர்கள் தந்த பயிற்சிகளும், இரவு-பகலாகப் பயிற்சியில் கிடந்த உழைப்பும் அடுத்தடுத்து உயரம் தாண்டவைத்தன. இந்திய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தும் நிதி உதவியும் அரசுசார் ஆதரவும் இல்லை. அடுத்தகட்டத்துக்குப் போக முடியாமல் தவித்தபோது, வெளிச்சம் பாய்ச்சினார் பெங்களூரு பயிற்சியாளர் சத்யநாராயணா. அவர் வழிகாட்ட, ரியோ பாரா ஒலிம்பிக் போய் மாரியப்பன் தங்கம் வென்றது, தமிழகத் தடகள வரலாற்றின் வைர அத்தியாயம். 1.89 மீட்டர் உயரம் தாண்டி இந்த இளைஞன் படைத்தது உலக சாதனை. இந்தியாவே வியந்து பார்க்கும் மாரியப்பனின் வாழ்க்கை, நமக்கான நம்பிக்கைப் பாடம்!


கலைக் களஞ்சியன்

இ.மயூரநாதன் (தமிழ் விக்கிப்பீடியா முன்னோடி)

ன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு. 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.  அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்துள்ளனர். இலங்கைத் தமிழரான இவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார். உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை, ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியது இவரது அரிய சாதனை. இவரே தன்னுடைய முனைப்பால் 4,458 கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். உலகப் பன்மொழித் திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ்மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசினால், தமிழ் மொழிக்கான ரேங்க் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். இதற்கு ஒரே காரணம் மயூரநாதன்.


தனிப்பெரும் தமிழ்க் கவிஞன்

மனுஷ்ய புத்திரன் (எழுத்தாளர்)

தொடர்ச்சியான தொலைக்காட்சி விவாதங்கள், தி.மு.க மேடைகள் என வருடம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருந்தது மனுஷ்ய புத்திரன் குரல். இதற்கு நடுவிலும் இவர் எழுதிக் குவித்த கவிதைகள்தான் ஆச்சர்யம். சமூக வலைதளங்கள், பத்திரிக்கைகள் என இந்த ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான கவிதைகளை எழுதியிருக்கிறார். எண்ணிக்கையில் மட்டும் அல்ல, அடர்த்தியிலும் ஆழத்திலும் அவை அபாரமான கவிதைகள். ஆண்-பெண் உறவின் அகமனக் காட்சிகளில் இருந்து அரசியல் அறச்சீற்றம் வரை அத்தனை தளங்களிலும் பயணித்தது இவர் எழுத்து. விகடனில் இவர் எழுதிய ‘கிளிக்காவியம்’ என்ற நீள்கவிதை, இந்த ஆண்டு எழுதப்பட்ட மகத்தான படைப்புகளில் ஒன்று. சென்னை வெள்ளத்தின் மீள்துயரத்தையும் கொடும் சித்திரங்களையும் கவிதைகளாக ஆவணப்படுத்தினார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் இருந்து ஜெயலலிதா மரணத்துக்குப் பின்பான அரசியல் வரை எல்லாமே கவிதைகளாயின. ஒரு போராளியைப் போல, தோழனைப் போல, காதலனைப் போல எல்லா திசைகளிலும் எழுந்து நடக்கின்றன மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். 


இந்திய கிரிக்கெட்டின் லேடி டெண்டுல்கர்

மித்தாலிராஜ் (கிரிக்கெட் வீராங்கனை)

ந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் 17 ஆண்டுகால நம்பிக்கை நட்சத்திரம். விளையாட விரும்பும் இந்தியப் பெண்களுக்கு இவர்தான்  ரோல்மாடல். இந்த ஆண்டு ஆசியக்கோப்பையை வென்று காட்டியது இவரது பிரமாத கேப்டன்ஷிப்பும் அதிரடி ஆட்டமும்.  இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீராங்கனை... உலக அளவில் 5,000 ரன்களைக் கடந்திருக்கும் இரண்டாவது பேட்ஸ்வுமன்... என ஏராளமான சாதனைகளை எட்டிப் பிடித்திருக்கும் மித்தாலியின் பூர்விகம் தமிழ்நாடு. 1999-ம் ஆண்டில் தொடங்கிய இவரின் சாதனைப் பயணம் சளைக்காமல் தொடர்வது இன்னுமோர் இலக்கை நோக்கி. அது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு உலகக்கோப்பையை வென்று தருவது.  நிகழ்த்திக் காட்டுவார் மித்தாலி!  


கலகக்காரக் கேலிச்சித்திரன்

ஹாசிப் கான் (கார்ட்டூனிஸ்ட்)

ஹாசிஃப்கானின் ஒவ்வொரு சித்திரத்திலும் கிழிந்துத் தொங்கின அதிகார முகமூடிகள். அபாரமான புதிய பாணியில் இவர் வரைந்த ஒவ்வோர் ஓவியத்தையும் கொண்டாடியது தமிழ்ச் சமூகம். ஒவ்வொரு சாமானியனுக்குள்ளும் கிடந்த கேள்விகளை  இவர் கேலிச் சித்திரங்களாக்க, அது அநீதிகளுக்கு எதிரான சாட்டையானது. களப் போராட்டங்களின் குரலை ஒரே கார்ட்டூனில் ஒலிக்கவிட்டார் ஹாசிஃப். மோடி, ஜெயலலிதா என ஆளும்வர்க்கத்தின் அத்தனை தவறுகளையும் கூண்டில் ஏற்றியது இவரின் தூரிகை. விவசாயிகள் தற்கொலையில் இருந்து கறுப்புப் பணம் வரை அத்தனை பிரச்னைகளிலும் தன் ஓவியங்களை வீரியமான விமர்சன ஆயுதங்களாக்கினார். இந்த நாகர்கோவில் இளைஞனுக்கு ஆயிரமாயிரம் லைக்ஸ். ஹாட்ஸ் ஆஃப் ஹாசிஃப்!   


சளைக்காத சமூகப் போராளி

முகிலன் (சமூகச் செயற்பாட்டாளர்)

மிழ்நாட்டில் எங்கே… என்ன போராட்டம் என்றாலும் முதல் குரலாக முதல் ஆளாகப் போய் நிற்பார் முகிலன். அணுஉலைகளுக்கு எதிராக… மரங்கள் வெட்டுப்படுவதற்கு எதிராக… ஏரிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக… சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக… அத்தனை மக்கள் போராட்டங்களிலும் முகிலன் இருப்பார். அதிகார ஆசையோ பணத்தேவையோ புகழ் போதையோ எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இவரது முன்னெடுப்புகள் `ஏதாவது செய்யணும்’ என நினைக்கும் எல்லோருக்குமான முன்னுதாரணம். 1980-களில் ஈழப்பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, போராட்டக்களத்துக்கு வந்தவர், இன்றும் தீராத  உயிர்ப்புடன் போராடுகிறார். `செயற்பாட்டாளராக இருப்பதுதான் மனநிறைவைத் தருகிறது’ என, சம்பளம் கொடுத்த பொதுப்பணித் துறை வேலையைத் துறந்தவர். தாதுமணல் கொள்ளைக்கு எதிரான இவரது தொடர்ச்சியான போராட்டங்கள், இந்த மண்ணுக்கான பெருங்காதல்; அடுத்த தலைமுறைக்கான அறைகூவல். நேரடி வன்முறைகளுக்கும் மிரட்டல்களுக்கும் ஆளானபோதும் முகிலனை இயக்குவது அறத்தின் மீதான பெரும் நம்பிக்கை.
 

------

மண்ணுக்கான ஈர விதை

மல்லிகா (சமூகச் செயற்பாட்டாளர்)

ளியர் சமூகத்தைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, நமக்கான நம்பிக்கை வெளிச்சம். தந்தையின் விவசாய நிலத்தை ஆதிக்கச் சாதியினர் ஏமாற்றிப் பிடுங்கிவிட, அதை மீட்கக் களம் இறங்கியதில் தொடங்கியது மல்லிகாவின் போராட்ட வாழ்வு. அதை ஒடுக்கப்பட்ட தன் இன மக்களுக்கான போராட்டமாக மாற்றியதுதான் அற்புதம். இன்றைக்கு இவர் கொடைக்கானல் பகுதி பழங்குடி மக்களின் தேவதை. ரேஷன் கார்டு வாங்கித் தருவது, வீடுகட்ட உதவுவது, பழங்குடிப் பிள்ளைகளுக்குக் கல்வி பெற்றுத்தருவது... என ஒவ்வொரு நாளும் களத்தில் நிற்கிறார். அரசு உதவியோடு 30-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடுகளையும் விவசாய நிலங்களையும் பெற்றுத்தந்திருக்கிறார். தேனி சின்னூர் காலனி தோட்டக் காடுகளில், சம்பளம் இன்றிக் கொத்தடிமைகளாக வைத்திருந்த மக்களைப் போராடி மீட்டு, அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும் பெற்றுத்தந்தார். இப்போது பழநி மலையில் ஆதிவாசிகளுக்கான இடங்களை மீட்கும் போராட்டத்தில் நிற்கும் மல்லிகா, பள்ளிக்கூடமே போகாதவர். இவரிடம் கற்க, எவ்வளவோ இருக்கிறது நமக்கு!


லட்சிய இளைஞன்

இளம்பகவத் (ஐ.ஏ.எஸ் அதிகாரி)

ல்லூரிக் கல்வியையே தொடர முடியாமல் நின்ற இந்த இளைஞன், இன்று இந்திய அளவில் 117-வது ரேங்க் அடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. தஞ்சாவூர் பக்கம் சோழன்குடிகாடு கிராமம். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு கல்வியைத் தொடர வழி இல்லாமல் வாரிசு வேலைக்குக் காத்திருந்தார். ஏழு ஆண்டுகள் போராடியும் வேலை கிடைக்காமல் இழுத்தடித்தார்கள். ‘வாரிசு வேலை தேவை இல்லை... போட்டித் தேர்வு எழுதி அரசு வேலையில் சேருவேன்’ என வைராக்கிய சபதம் எடுத்தார். முதல் முயற்சியில் காவல் துறையில் ‘இளநிலை உதவியாளர்’. அங்கு இருந்தே குரூப் 2 தேர்வு எழுதி ‘இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்’, குரூப் 1 தேர்வு எழுதி ‘ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்’, அடுத்து சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐ.ஆர்.எஸ்., பிறகு போலீஸ் டி.எஸ்.பி என அடுத்தடுத்து உழைத்து, உயரங்கள் தொட்டார். இப்போது ஐ.ஏ.எஸ் இலக்கும் இவர் வசம். தன்னைப் போன்ற இளைஞர்களின் திறமையை வறுமை தின்னக் கூடாது என ‘இலவசப் பயிற்சி மையம்’ தொடங்கி திசைக்காட்டியாகவும் நிற்கிறார் இந்த நம்பிக்கை நண்பன்.


ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை தீபங்கள்

சரண்யா - பூபாலன் (சமூக ஆர்வலர்கள்)

பூபாலன்-சரண்யா தம்பதியின் வாழ்வும் போராட்டமும் நம் ஒவ்வொருவருக்குமான நம்பிக்கை உதாரணம். இருளர் இனத்தைச் சேர்ந்த இருவருக்கும் 25 வயதுதான். பூபாலன் பார்ப்பது கூலி வேலை. டிப்ளமோ நர்ஸிங் படித்த சரண்யாதான் அந்த ஊரிலேயே அதிகம் படித்தவர். இதுதான் வாழ்வு என முடங்கிவிடாமல், அடுத்த தலைமுறைக்கு விதை போட்டது இவர்களின் பேரன்பு. செங்கல் சூளைக் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 500 இருளர் குடும்பங்கள், திருவள்ளூர், பாலவாக்கம் ஜெ.ஜெ நகரில் வசிக்கிறார்கள். வறுமைக்கும் அடக்குமுறைக்கும் நடுவில் தவிக்கும் இந்தக் குடும்பங்களின் 60 பிள்ளைகளுக்கான கல்விப் போராட்டத்தைத் துவக்கியது இந்தத் தம்பதி. தினமும் இலவச ட்யூஷன், அவர்களின் கல்விக்கான நிதி உதவி, அடுத்தடுத்த பயணத்துக்கான வழிகாட்டல்கள் என, இதையே வாழ்க்கையாக்கிக் கொண்டார்கள். ‘கல்வியால் மட்டுமே ஒரு சமூகத்தின் அடிமைத்தனத்தை உடைக்க முடியும்’ என்கிற இவர்களின் குடிசையில் இருந்து ஒளிர்கிறது நம்பிக்கையின் விளக்கொளி!


அசத்தல் அதிரடி போலீஸ் மங்கை

வந்திதா பாண்டே (ஐ.பி.எஸ் அதிகாரி)

.பி.எஸ் தமிழக கேடரில் 2010-ம் ஆண்டு பேட்ச். சொந்த ஊர் உ.பி அலகாபாத். கடந்த ஐந்து வருடங்களாக இவர் நிகழ்த்திய நேர்மைப் பணிகளுக்கு, தமிழ்நாடே சல்யூட் வைக்கிறது. குற்றவாளிகளிடம் மட்டும் அல்ல, காவல் துறையிடமும் இவர் கண்டிப்பு பிரசித்தம். சமரசம் இல்லாத நேர்மைக்காகவே இடமாற்ற நெருக்கடிகளை எதிர்கொண்டார். ஆனாலும் அசராமல்போன இடங்களில் எல்லாம் அதே துணிவோடு அதிரடித்தார். உயர் போலீஸ் அதிகாரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிவகங்கைச் சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கி, அஞ்சாமல் சட்டப்படி வழக்கு பதிவுசெய்தார். பரிசாகக் கிடைத்தது கரூருக்கு மாற்றல். அங்கே தேர்தல் நேரத்தில், அன்புநாதனிடம் 4¾ கோடி பறிமுதல் செய்ததில் தொடர்ந்தது இவரின் இரும்புக் குணம். கொலை மிரட்டல்கள், இடமாற்றல்கள், மன அழுத்தங்கள்... அத்தனையையும் உடைத்துப் பாயும் வந்திதாவின் உறுதிக்குப் பெருமித வணக்கங்கள்!


இனிய இயற்கை நேசன்

செந்தமிழன் (பன்முகப் பண்பாட்டு ஆளுமை)

த்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் என அடையாளங்கள் இருந்தாலும் இயற்கை விவசாயியாகத் தன்னை முன்னிறுத்தியதில் தொடங்கியது செந்தமிழனின் நம்பிக்கைப் பயணம். ‘செம்மை வாழ்வியல் நடுவம்’ என இவர் தொடங்கிய அமைப்பு, இயற்கை மீட்புக்கான அர்த்தமுள்ள முயற்சி. இயற்கை வாழ்வியலைக் கற்றுத் தரும் ‘பிரண்டைத் திருவிழா’, இயற்கை விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை விற்கக் கூடும் ‘ஊர் சந்தை’, வேளாண் தொழில் கற்பவர்களுக்காக ஆச்சாம்பட்டியில் செயல்படும் ‘செம்மைவனம்’ என செந்தமிழன் நிகழ்த்தும் ஒவ்வொன்றும் நாளைய தலைமுறைக்கான நல் வழித்தடம். விகடனில் இவர் எழுதும், `ஆயிரம் சூரியன்... ஆயிரம் சந்திரன்... ஒரே ஒரு பூமி’ தொடர் உள்பட, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து ஒலிக்கிறது இவரது குரல்... தொடர்ந்து விதைக்கிறது இவர் கரம்.


நம்பிக்கை நாயகி

ஐஸ்வர்யா ராஜேஷ்  (நடிகை)

‘காக்காமுட்டை’யில் ஏழைத்தாயாக கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த வருடம் முழுவதும் வசீகரித்தார். நடித்த ஒவ்வொரு பாத்திரத்திலும் பளிச்சிட்டது இவரின் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும். பாசக்கார மனைவியாக ‘ஆறாது சினத்தில்’ உருக்கினார், ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’-ல் டபராக்குத்து போட்டுத் தெறிக்கவிட்டார், ‘குற்றமே தண்டனை’யில் காட்டியது நவீனம் என்றால், ‘தர்மதுரை’ காமக்காப்பட்டி அன்புச்செல்வி ஆசம். பார்த்துப் பார்த்துப் பாத்திரங்களைத் தேர்ந் தெடுப்பதும் அதற்காகத் தன்னைச் செதுக்கிக் கொள்வதுமாக... ஐஸ்வர்யா சமகால நடிகைகளில் நம்பிக்கை அடையாளம்!


வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன் (எழுத்தாளர்)

சென்ற ஆண்டுதான் முதல் நாவலான ‘ஐந்து முதலைகளின் கதை’ வெளிவந்தது. அதற்குள் அடுத்தடுத்து மூன்று நூல்கள். சமீபத்தில் வந்த இவரது ‘அஜ்வா’ நாவல், அதிர்வு நரம்புகளை மீட்டியது. சமகால இலக்கியத் தளத்தில், தவிர்க்க முடியாத குரல் சரவணனுடையது. எளிமையும் ஆழமுமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன. நம் கால வாழ்வியலின் துயரங்களை, பிரச்னைகளைப் பேசும் விரல். ஒருபக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை... இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப் படுத்துகிறது!


நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைக் காதலன்

அருண்  (சினிமா ஆர்வலர்)

சினிமாவுக்கு என்றே பிரத்யேகமாக, ‘ப்யூர் சினிமா’ என்கிற புத்தகக் கடை நடத்துகிறார். இங்கேயே சினிமா நேசர்களுக்கான நூலகமும் உண்டு. தொடர்ச்சியாக மாற்று சினிமா திரையிடல்கள், திரைக் கலைஞர்களோடு கலந்துரையாடல்கள், பயிற்சிப்பட்டறைகள் நிகழ்த்துகிறார். ‘பேசாமொழி’ பதிப்பகமும், ‘படச்சுருள்’ சிற்றிதழும் இவரின் நன்முயற்சிகள். மென்பொருள் துறை வேலையைத் துறந்துவிட்டு, ‘தமிழ் ஸ்டுடியோ’ என்ற அமைப்பைத் தொடங்கி, இவர் முன்னெடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் அடிப்படைக் காரணம், நல்ல சினிமாவுக்கான தேடலும்... காதலும்.


தமிழோடு இசை பேசு!

பிரதீப்குமார் (பின்னணிப்  பாடகர்)

ண்டு முழுவதும் இசை ரசிகர்களை தன் மேகக்குரலால் நனைத்த `மாயநதி’ பிரதீப்குமார். தமிழர்களின் இனிய இரவுகளின் புதிய வரவு.  நண்பர்களுடன் சேர்ந்து இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள் மூலம் யூ-டியூபில் ஹிட்ஸ் வாங்கிக்கொண்டிருந்த இளைஞர். சினிமாவுக்கு வந்த பிறகு இவர் பாடுபவை எல்லாமே பட்டையைக் கிளப்பும் ஹிட்டுகள். 2016-ம் ஆண்டு எல்லா இசைப்பட்டியல்களிலும் இவரின் பெயர் மூன்று முறையாவது உச்சரிக்கப்பட்டிருக்கும். `வானம் பார்த்தேன்’ பாடலில் சோகம், `மாயநதி’யில் பிரிவு, `இணைவோம் இணைவோம்’ல் வீரம், `வீரத் துரந்திரா’வில் தைரியம்  என இந்த ஆண்டு பிரதீப் காட்டியவை எல்லாமே காதுக்கு இனிய காம்போ!

`குக்கூ’, `மெட்ராஸ்’ என 2014-ம் ஆண்டில் பிரதீப்பின் கிராஃப் மேலே ஏறியது. அது இந்த ஆண்டு `இறுதிச்சுற்று’, `மாவீரன் கிட்டு’, `கபாலி’ என ஹெலிகாப்டர் ஷாட்களாகப் பறந்திருக்கின்றன. கிட்டாரில், ஸ்லைடு கிட்டார் என்பது தனிவகை. அதில் பிரதீப் அபாரக் கலைஞன். `உலக இசைக்கலைஞன் கில்பார்ட்டோ தனது ஃபேவரைட்’ எனக் குறிப்பிடும் பிரதீப்பிடம் தெரிவதோ பக்கா தமிழ்க் குரல். உருகும் குரலும் உளறாத தமிழும் உணர்வோடு கலந்த இசையும் பிரதீப்பின் பலம். மெகா பைட் கணக்கில் இருக்கும் இவரது ஹிட் கலெக்‌ஷன், டெர்ரா பைட் அளவுக்கு ஏறப்போவது நிச்சயம்!


தங்கத் தமிழச்சி

சூர்யா  (தடகள வீராங்கனை)

ந்திய அளவில் 5,000 மீட்டர், 10,000 மீட்டர் போட்டிகளில் இப்போது இவர்தான் நம்பர் ஒன். அதிரடி அம்பாகப் புறப்பட்டு அத்தனைப் போட்டிகளிலும் தங்கத்தடம் பதித்தார். கௌஹாத்தியில் நடந்த தெற்காசியப் போட்டிகளில், இந்தியாவுக்கு இரண்டு தங்கங்கள் அடித்து வந்தது தமிழகத்தின் பரவசத் தருணம். 12 வயதில் தொடங்கிய ஓட்டம், பதக்கங்களை அள்ளுகிறது. சில விநாடிகள் வித்தியாசத்தில் ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தாலும் அடுத்தடுத்த சர்வதேசப் போட்டிகளுக்காகத் தளராமல் தயாராகிறார். 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் கனவுகளோடு தடதடக்கும் சூர்யா, நமது தங்க நம்பிக்கை!

 விருது பெறப்போகும் மேலும் சிலர் யாரென்று தெரிந்து கொள்ள க்ளிக் செய்க....


டிரெண்டிங் @ விகடன்