வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (30/03/2017)

கடைசி தொடர்பு:11:42 (31/03/2017)

தண்ணீர் திருட்டு... சந்தன மரக்கடத்தல்... அதிகார பலத்துடன் தேனியில் நடக்கும் அட்டூழியங்கள்! #VikatanExclusive #ForGovtAction

தேனி

விவசாயிகளின் பிரச்னை, சுற்றுச்சூழல் பிரச்னை போன்றவற்றிற்கு நாம் மத்திய அரசைப் பலமுறை சாடியிருக்கிறோம். ஆனால் நம்முடன் நிற்க வேண்டிய, நம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டிய மாநில அரசே இங்கு எதுவும் செய்யாமல், 'மிக்சர்' சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தேனியில் நடக்கும் சம்பவங்களே உதாரணம்.

இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். இதன் சிறப்பே இயற்கையாக அமைந்த மலையும், அதையொட்டி அமைந்துள்ள வனமும்தான். அந்த இயற்கை மாறாமல் இருப்பதால்தான் மக்கள் ஓரளவாவது விவசாயம் செய்து இன்னும் பிழைக்க முடிகிறது. அப்படிப்பட்ட வனத்தை சமீபகாலமாக சிலர் அழித்து வருவதாக அங்குள்ள மக்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். அந்தக் கூக்குரலுக்கு தமிழக அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

தேனி மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் சமீபகாலமாக சட்டவிரோதச்செயல்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் துணையுடன் தொடர்ந்து நடந்துவருவதாக, செய்திகள் வராத நாளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அங்கு குற்றங்கள் நடக்கின்றன. மாவட்டத் தலைநகரான தேனியிலிருந்து இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வனப்பகுதியில் வீரப்ப ஐயனார் மலையில் ஐயனார் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள அருவியிலிருந்து வரும் தண்ணீர் பனசலாறு வழியாக ஊருக்குள் செல்கிறது. தேனியில் முல்லைப்பெரியாறு, வைகை ஆறு வற்றினாலும் இந்த பனசலாற்றில் என்றும் நீர்வரத்து இருந்துகொண்டே இருக்கும். அதனால் இயற்கை வளம் மாறாமல் இந்த வனப்பகுதி திகழ்கிறது. தேனி நகராட்சியின் 12 வார்டுகளுக்கு, பனசலாற்றிலிருந்து வரும் தண்ணீரே நீராதாரமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயத்திற்கும் இது ஜீவாதாரமாக இருந்துவருகிறது.

தென் மாவட்டங்களெல்லாம் தண்ணீர் இல்லாமல் வறட்சியில் புலம்பிக்கொண்டிருக்கும்போது, தேனி மாவட்டத்தில் மட்டும் இந்தப் புலம்பல் இல்லாமல் இருக்கக் காரணம், இயற்கை கொடுத்த கொடைதான். மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், பல காட்டாறுகளாக உருவாகி பனசலாற்று வடிவில் தேனிக்குள் வந்துகொண்டிருந்தது. வருகிற வழியில் வீரப்ப ஐயனார் கோவிலருகே மீறு சமுத்திர கண்மாய், சின்னக்குளம் கண்மாய்களை நிரப்பிவிடும். இந்தக் கண்மாய்கள் தேனி - அல்லிநகரம் நகராட்சி முழுதுக்கும் பயன்பட்டது. ஆனால் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது இந்தப் பனசலாறு.

மரம்

இந்தப் பனசலாற்று நீரை வைத்து எவ்வளவு வறட்சியிலும் தேனி மக்கள் சமாளித்தார்கள்; கோவில் விழாக்களில் பக்தர்கள் இந்த ஆற்று நீரைத்தான் பயன்படுத்துவார்கள்; அப்படி ஓடிக்கொண்டிருந்த பனசலாற்றில் தண்ணீர் நின்று போனதால்தான் மீறுசமுத்திர கண்மாயும் சின்னக்குளக்கண்மாயும் வறண்டுபோனதாக மக்கள் நினைத்தனர். ஆனால், சில சமூகவிரோதிகள் ராட்சத குழாய்கள் அமைத்து வருகிற வழியிலயே தண்ணீரைத் திருடுவதால்தான் ஆறு வறண்டுபோனது என்ற உண்மை மக்களுக்கு சமீபத்தில்தான் தெரியவந்தது. யார் இப்படி தண்ணீரைக் குழாய் போட்டுத் திருடுகிறார்கள் என்பது மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் பின்னணயில் சாதி, அரசியல், பணபலம், மிக்க கூட்டம் மோசமான அதிகாரிகள் உதவியுடன் இருப்பது மட்டும் நன்கு தெரிந்தது.

இந்தப் பிரச்னை குறித்து, இரண்டு மாதத்திற்கு முன் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி விவசாயிகள் முறையிட்டார்கள். ``நான்கு கிமீ தொலைவிலிருந்து இந்த ஆற்றிற்குத் தண்ணீர் வருகிறது, அருவிகளில் விழும் தண்ணீரின் சத்தம் கேட்கிறது. ஆனால், அந்தத் தண்ணீர் எங்கள் பகுதிக்கு வருவதற்கு முன் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழாய்கள் அமைத்து தண்ணீரை திருடிச் செல்கிறார்கள். இதனால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, சிலரின் சுயநலத்தால் தேனி மாவட்டம் கடும் வறட்சிக்கு ஆளாகியுள்ளது.``என்றனர். ஆனால் இதன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மீண்டும் முறையிட்டார்கள், பெயருக்கு சில குழாய்கள் அகற்றினார்கள். அந்தக் குழாய்களை யார் அமைத்தது, தினமும் எவ்வளவு நீர் திருடப்படுகிறது என்பதுபற்றி எந்த விசாரணையும் நடைபெறவில்லை. அதுகூட சில நாள்கள்தான், தற்போது மீண்டும் குழாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் சரியாக எடுக்கப்படுகிறதா என்பதைப் பார்க்க ஆட்களைப் போட்டிருக்கிறார்கள் தண்ணீர் திருடர்கள். இவ்வாறு திருடப்படும் தண்ணீர், கேன் தண்ணீராக மாற்றி விற்கப்படுகிறது.

இதனால் தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் மலை அடிவாரத்தில் விவசாய நிலங்களை நாசம் செய்ய நேரிடுகிறது. இந்தப் பிரச்னையில் வனத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தேனி மாவட்ட விவசாயிகளின் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. பனசலாற்றில் மீண்டும் தண்ணீர் வந்தால் தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும். கண்மாய்களிலும் நீர் வரத்து அதிகரித்தால் நிலத்தடி நீர் கூடும் என்பது உண்மை. ஆற்றில் தண்ணீர் திருடும் நபர்கள் மீதும் அதற்கு துணை போகும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க ஏன் மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் தயங்குகிறது என்ற கேள்வி பலர் மனதில் கொழுந்து விட்டு எரிகிறது.

தண்ணீர்த் திருட்டுக்கு சற்றும் சளைக்காத சந்தன மரக்கடத்தல்:

தண்ணீர்த் திருட்டு ஒருபக்கமென்றால், வனத்தை அழிக்கும் செயலும் இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. தேனி மாவட்ட வனப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இணைந்துள்ளது. இந்த வனப்பகுதியின் முதல் பாகத்தில் மாந்தோப்பு, அதன் பின் சோலார் வேலி பிறகு, 40 அடி தூரத்தில் மூங்கில் காடு, பின் சந்தனக்காடு அமைந்துள்ளது. இந்த வனம் பல ஆபூர்வ வகையான பாம்புகளையும், பூச்சி வகைகளையும், பல்வேறு அரிய வகை பட்டாம் பூச்சிகளையும் கொண்டது. இத்தகைய சிறப்பு கொண்ட வனத்தில் சமீபகாலமாக சந்தன மரம் வெட்டப்பட்டு கடத்தி செல்லப்படுகிறது. இந்தச் செயலை யார் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டிச் செல்லப்பட்டிருக்கின்றன.

இன்னும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மரம் வெட்டப்பட்ட அமைச்சர்நிலையில் உள்ளது. இதுகுறித்து, தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகளோ விசாரித்து வருவதாகக் கூறுகிறார்கள். கடந்த வருடம் டி.சுப்புலாபுரத்திலுள்ள ஆண்டிபட்டி வனச்சரக அலுவலகத்தில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை ஒரு கும்பல், அங்கிருந்த வனக்காவலர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி சந்தன மரங்களை வெட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வனத்துறை.

அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றால்தான் இன்னும் எத்தனை மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் என்ற தகவல் தெரியும் என்கிறார்கள். வெட்டிய மரங்களை தேனி வழியாகக் கொண்டு செல்லாமல், பெரியகுளம் வழியாகக் கொண்டு செல்வதாகக் கூறுகிறார்கள். காட்டுக்குள் ஒரு சுள்ளியைப் பொறுக்கினாலே வழக்கு போடும் வனத்துறை, ஐம்பதுக்கு மேற்பட்ட சந்தன மரங்கள் கடத்தப்பட்டும் எந்த விசாரணையும் நடத்தாமல் தயங்குவது ஏன் என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகிறார்கள்.

தேனி வனத்துறையின் அலட்சியம் பற்றி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்கலாம் என போன் செய்தால், அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேலையில் பிஸியாக இருப்பதாக அவருடைய உதவியாளர் நம்மிடம் தகவல் சொன்னார், நாம் தேனி மாவட்ட வனத்துறை விவகாரத்தைத் தெரிவித்து இதற்கு பதில் சொல்லச் சொல்லுங்கள் என்றோம், இதுவரை தொடர்பில் வரவில்லை. நாடு எக்கேடு கெட்டால் என்ன? தினகரனை வெற்றி பெறச் செய்வதல்லவா அவர்களின் தற்போதைய கடமை; அதையே பார்க்கட்டும்!

- செ.சல்மான், உ.சுதர்சன் காந்தி (மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள் : வீ.சக்தி அருணகிரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்