வெளியிடப்பட்ட நேரம்: 18:48 (31/03/2017)

கடைசி தொடர்பு:19:04 (31/03/2017)

எம்.ஜி.ஆர் ஆடிய 'ருத்ரதாண்டவம்'...நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் அத்தியாயம் - 25

எம் ஜி ஆர்

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக அறிமுகம் செய்த ஜூபிடர் நிறுவனம், 'ஸ்ரீமுருகனில்' அவருக்கு சிவனாக நடிக்கும் ஒரு சிறுவேடத்தை அளித்தது. அந்த வேடத்தைப் பெறுவதற்கு அவர் கையாண்ட சாதுர்யமும், அதைத் தொடர்ந்து அதே நிறுவனத்தில் கதாநாயகனாக அறிமுகமானதும் எப்படி...?

ஜூபிடர் நிறுவனம் பி.யு.சின்னப்பாவை வைத்து தயாரித்த படத்தில் எம்.ஜி.சக்கரபாணிக்கு பிரதான வில்லன் வேடம் கிடைத்தது. தரமான படங்களைத் தயாரித்து வந்த ஜூபிடர் நிறுவனத்தின் மேல் எம்.ஜி.ஆருக்கு ஒருவித காதல் இருந்த காலம் அது. தரமான படங்களைத் தயாரித்து வந்த அந்த நிறுவனத்தின் ஒரு படத்தில் நடித்து விட்டால் தனக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஆழமாக இருந்தது. இதனால் அண்ணனைப் பார்க்கும் சாக்கில் நேரம் கிடைத்தபோதெல்லாம் 'மஹாமாயா' செட்டுக்குப் போய் விடுவார் எம்.ஜி.ஆர். ஜூபிடர் நிறுவன உரிமையாளர்கள் வரும்போதும், போகும்போதும் அவர்கள் பார்வையில் படும்படியான இடத்தில் நிற்பார். அழகும், மிடுக்கும் இணைந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி தென்படுவதைக் கண்டு, ஒருநாள் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான எம்.சோமசுந்தரம், அவர் யார் என தயாரிப்பு நிர்வாகியிடம் கேட்க, 'சக்கரபாணியின் தம்பி' என அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் நிர்வாகி.

எம் ஜி ஆர்சக்கரபாணியும் தன் பங்குக்கு எம்.ஜி.ஆரின் முந்தைய படங்களைப் பற்றி எடுத்துக்கூறி, "நல்ல திறமைசாலி. வாய்ப்பு கிடைச்சா ஒரு நல்ல நிலைக்கு வந்திடுவான். என்ன நேரமோ அப்படி வாய்ப்புகள் இதுவரை வரலை” என சோமுவிடம் சொல்லி வைத்தார். எம்.ஜி.ஆரும் சோமுவிடம் தன் மனதில் இருந்த ஆசையை வெளிப்படுத்தினார். சகோதரர்களின் வேண்டுகோளை மனதில் குறித்து வைத்துக்கொண்டார் சோமு. என்றாலும் ஜூபிடர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான 'என் மகன்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஏற்றவேடம் இல்லாததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இங்கு நாம் தெரிந்துகொள்ளவேண்டிய இன்னொரு விஷயம்...எம்.ஜி.ஆரின் கதாநாயகன் கனவு 10 வருடங்கள் தள்ளிப்போனதற்கு அவர் மட்டுமே காரணம் அல்ல; அன்றைய திரைப்படச் சூழல் அப்படி இருந்தது. தமிழ் சினிமா வளர ஆரம்பித்த காலகட்டத்தில் பாடல்களே படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தன. பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து படங்கள் தயாரிக்கப்பட்டன. நன்கு பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே திரைப்படங்களில் நடித்தனர். கதாநாயக நடிகர், நடிகைகள் தங்களுக்கான பாடல்களைத் தாங்களே பாடினர். இதனால் இயல்பாக பாடும் திறமை பெற்ற நடிகர்களே மக்களின் அபிமானம் பெற்றவர்களாக சினிமாவில் ஜெயிக்க முடிந்தது. நடிப்புத் திறமைக்காக மட்டுமின்றி, அவர்களின் குரல்வன்மைக்காகவும் கொண்டாடப்பட்டனர். அன்றைய படங்களின் விளம்பர சுவரொட்டிகளில், 'கான மழையில் நனையுங்கள்' என்றும் '47 பாடல்கள் அடங்கிய இனிய குடும்ப சித்திரம்' என்றும் வாசகங்களை இடம்பெறச் செய்வர். பாடல்களின் எண்ணிக்கையே படங்களின் வெற்றியைத் தீர்மானித்தன. அந்த அளவுக்குப் பாடல்கள் அந்தக் காலகட்டத்தில் மக்களால் ரசிக்கப்பட்டன. தங்களுக்கு இருந்த அபரிதமான பாட்டுத்திறமையினால் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, இவர்களுக்கு அடுத்தபடியாக ஹொன்னப்பா பாகவதர், டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்கள் ரசிகர்களை தங்களின் பாடல்களாலும், நடிப்பாலும் கட்டிப்போட்டிருந்தனர்.

இதனால் அபரிதமான திறமைகள் பெற்றிருந்தும் பாடி நடிக்க முடியாத நடிகர்கள், அவர்களை மீறி முன்னணி நடிகர்களாக வர முடியவில்லை. அவர்களுடன் ஒரு படத்தில் துண்டுக்காட்சியில் நடிப்பதே தங்களின் அதிகபட்ச பெருமையாக சிலர் கருத வேண்டியிருந்தது. அப்படி சோர்ந்து போன நடிகர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். (ஆனால் மற்றவர்களில் இருந்து எம்.ஜி.ஆர் முற்றிலும் வேறுபட்டவர். திறமையிருந்தும் தனக்கான வாய்ப்பு தள்ளிப்போவதை உணர்ந்த எம்.ஜி.ஆர், எவ்வளவு காலமானாலும்  வாய்ப்பு கனிந்துவரும்போது அதற்கு தகுதியானவனாக தான் இருக்கவேண்டும் என்பதற்காக, அந்த பத்து ஆண்டுகளில் சினிமாத்துறைக்கு தேவையான அத்தனை தகுதிகளையும் வளர்த்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு முக்கியமான காரணம் இது). 

அந்தக் காலகட்டத்தில் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதருடன் 'அசோக் குமார்' என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார். சிறிய வேடம்தான் என்றாலும் தியாகராஜ பாகவதரின் நண்பராக உருக்கமாக நடித்திருந்தார். நன்றாக பேசப்பட்ட வேடம் அது. அந்தப் படத்துக்குப்பிறகு எம்.ஜி.ஆரின் மீது அன்பு கொண்ட பாகவதர், "யார் இந்தப் பையன், நல்லா நடிக்கிறான். முயற்சித்தால் நல்லா வருவான்" என்று படத்தின் இயக்குநரிடம் பாராட்டிச் சொன்னாராம். 

எம் ஜி சக்கரபாணி1940-களின் மத்தியில், சினிமாவில் பின்னணி பாடும்முறை அறிமுகமானது. இதனால் சினிமாவில் புதிய அலை ஒன்று உருவானது. பாடும் திறமையைத் தவிர்த்து மற்ற திறமைகள் கொண்ட நாடக நடிகர்கள் மெல்ல சினிமா ஆசையில் ஸ்டுடியோக்களில் வாய்ப்புத் தேட ஆரம்பித்தனர். இது எம்.ஜி.ஆரின் மனதில் சினிமாவின் மீது ஓர் அழுத்தமான நம்பிக்கையை விதைத்தது. இப்படிச் சோதனையான காலகட்டத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு 'ஸ்ரீமுருகன்' பட வாய்ப்பு வந்தது. சென்ட்ரல் ஸ்டுடியோ என்ற பெயரில் வால்மீகி, ஸ்ரீமுருகன் என்ற இரு படங்களை 1945-ம் ஆண்டு தயாரிக்க திட்டமிட்டது ஜூபிடர் நிறுவனம். ஸ்ரீமுருகனில் கதாநாயகனாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் எம்.கே.டி பாகவதர். பாகவதரின் முந்தைய படமான 'ஹரிதாஸ்' மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த நேரம். இதனால் புகழின் உச்சியில் இருந்த அவர், ஸ்ரீமுருகனில் நடிப்பதற்காக விதித்த நிபந்தனைகள், தயாரிப்பாளர்களை மிரளச் செய்தன.

படத்தின் கதாநாயகி தேர்வு வரை பாகவதரின் தலையீடு இருந்தது. படத்தில் வள்ளியாக வசுந்தரா தேவியையும் (வைஜெயந்தி மாலாவின் தாயார்) தெய்வானையாக டி.ஆர்.ராஜகுமாரியையும் ஒப்பந்தம் செய்யச் சொன்னார் பாகவதர். மிக சொற்பமான படங்களை மட்டுமே ஒப்புக்கொள்ளும் பாகவதர் தங்கள் நிறுவனத்தின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே ஜூபிடர் உரிமையாளர்களுக்கு பெருமிதமாக இருந்தததால், அவரது நிபந்தனைகளை ஏற்றனர். ஆனால் டி.ஆர். ராஜகுமாரி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஜூபிடரில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்ததோடு, பாகவதரின் வெற்றிப்படமான ஹரிதாஸிலும் கதாநாயகியாக நடித்துள்ள அவர், 'தெய்வானை கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டேன்' என உறுதியாகத் தெரிவித்து விட்டார். தர்மசங்கடத்தில் நெளிந்தனர் தயாரிப்பாளர்கள். இதன் நடுவே ஒருநாள் ஜூபிடர் நிறுவனத்தில் அதன் உரிமையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த பாகவதர், புகழ்போதை தலைக்கேறிய நிலையில், "என் வாழ்வில் மிகக் குறைந்த படங்களில் நடித்து யாரும் அடையாத புகழை அடைந்து விட்டேன். இப்போது உங்கள் படமான ஸ்ரீமுருகனையும் சேர்த்து, என்னிடம் 10 படங்கள் உள்ளன. இதற்குமேல் படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இன்னும் 10 வருடங்களுக்கு நான் படத்துறையில் பிஸியாக இருப்பேன்" என தெரிவித்தார். அவரது பதில், தயாரிப்பாளர்களுக்கு தலைசுற்றலை ஏற்படுத்தியது. "பத்து படங்கள் முடிக்க 10 வருடம் என்றால் கடைசியாக புக் ஆன ஸ்ரீமுருகன் வர 10 வருடங்கள் காத்திருக்க வேண்டுமா?" என அதிர்ச்சியடைந்தனர். ஆனால், ஜூபிடர் உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல; பாகவதருக்கும் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது... தமிழ்சினிமா உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த விஷயம்...லட்சுமிகாந்தன் கொலைவழக்கு!

தன்னை இன்னும் 10 வருடங்களுக்கு யாரும் அசைத்துப் பார்க்க முடியாது என கர்வத்துடன் தெரிவித்து வந்த பாகவதரின் கணக்கை, காலம்போட்ட கணக்கு வேறுவிதமாக மாற்றி அமைத்துவிட்டது. சினிமா நடிகர், நடிகைகளை பல வருடங்களாக அவதூறாக எழுதி வந்த லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் நடுத்தெருவில் சிலரால் குத்தப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் மரணமடைந்தார். இந்த வழக்கில் அன்றைய மூன்று சினிமா பிரபலங்கள் மீது வழக்கு போடப்பட்டது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பக்ஷிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு, மூன்றாமவர் வேறு யாருமல்ல, அடுத்த 10 வருடங்களுக்கு சினிமாவில் தானே ராஜா என்று பெருமிதப்பட்ட தியாகராஜ பாகவதர்தான். இந்தக் கொலைவழக்கில் அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து திரையுலகில் பல மாற்றங்கள் நடந்தேறின. பக்ஷிராஜா அதிபர் வழக்கின் ஆரம்பத்திலேயே விடுவிக்கப்பட கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் தங்களது படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பியளித்துவிட்டு சிறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. 

தியாகராஜ பாகவதர்

'ஸ்ரீமுருகனில்' முருகன் வேடத்தில் தியாகராஜ பாகவதருக்குப் பதிலாக ஹொன்னப்ப பாகவதர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் சிவன் வேடத்துக்கு யாரைப் போடலாம் என பேசப்பட்டபோது, சோமுவுக்கு எம்.ஜி.ஆர் நினைவில் வந்தார். அப்படத்தில் எம்.ஜி.ஆர் ஒப்பந்தமானார். அவருக்கு ஜோடி தெலுங்கு நடிகை மாலதி. இருவருக்கும் படத்தில் நடனங்கள் உண்டு. குறிப்பாக எம்.ஜி.ஆர் இதில் ருத்ரதாண்டவம், ஆனந்த தாண்டவம் என இரு நடனங்களை ஆடியிருப்பார். சண்டை, வாள்வீச்சு என சகல துறைகளிலும் பயிற்சி பெற்றுவந்த எம்.ஜி.ஆர் இந்தப் படத்துக்காக நடனமும் கற்றுக் கொண்டார். இந்த இரண்டு நடனங்களுக்காக எம்.ஜி.ஆர் சுமார் 6 மாத காலம், குமார ஆசான் என்ற நடன ஆசிரியரிடம் முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். இது எம்.ஜி.ஆரின் தொழில் சிரத்தை என்பதோடு ஜூபிடர் தந்த வாய்ப்பு என்ன காரணத்துக்காகவும் கைவிட்டுப் போய்விடக்கூடாது என்ற அவரது ஜாக்கிரதை உணர்வும்கூட. 

எம்.ஜி.ஆர்ஒரு பாடலுக்காக இத்தனை கர்ம சிரத்தை எடுத்துக்கொண்டதும், தொழிலில் சுறுசுறுப்பும் அர்ப்பணிப்புமாக அவர் செயல்பட்ட விதமும் ஜூபிடர் உரிமையாளர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஸ்ரீமுருகன் படம் தயாரிப்பில் இருந்தபோதே அந்நிறுவனம், வித்யாபதி, ராஜகுமாரி என இரு படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது. அதற்கான நடிகர்கள் தேர்வு நடந்தபோது ஸ்ரீமுருகனில் எம்.ஜி.ஆர் தந்த ஒத்துழைப்பு சோமுவின் நினைவில் வந்துபோக, ராஜகுமாரியில் கதாநாயகனாக அவரையே போடுவது என தீர்மானித்தனர் மொஹிதீனும், சோமுவும். 

இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமியும் எப்போதோ ஒருமுறை சக்கரபாணியிடம் எம்.ஜி.ஆருக்கு கதாநாயகன் வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்தி ருந்தார். இதனால் அவரும் எந்த மறுப்புமில்லாமல் தயாரிப்பாளர்களின் முடிவை ஏற்றுக்கொண்டார். 

ஒப்பந்தப் பத்திரம் தயாராகி எம்.ஜி.ஆருக்கு தகவல் வந்துசேர்ந்தபோது, அதைக் கொண்டாடுவதா, வேண்டாமா என்ற குழப்பமே வந்தது. காரணம் கதாநாயகன் வாய்ப்பு நான்காவது முறையாக வந்து கதவைத் தட்டுகிறது. ராஜகுமாரிக்கு முன்பே அவர் கோவிந்தன் கம்பெனி தயாரிப்பில் ஒரு படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். 'மருதநாட்டு இளவரசி' என்ற அந்த படம் பின்னாளில் வெளியாகி வெற்றிபெற்றது என்றாலும், எம்.ஜி.ஆர் அட்வான்ஸ் பெற்ற கொஞ்ச நாட்களிலேயே படம் வெளியாகுமா என சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அந்தப் படத்துக்குப் பல தடைகள் உருவாகின.

கடந்த காலங்களில் தான் கதாநாயகனாக ஒப்பந்தமானதைச் சொல்லி, பின்னாளில் அது நிறைவேறாமல் போய், அவமானப்பட நேர்ந்ததால் ராஜகுமாரி வாய்ப்பு வந்தபோது கொஞ்சம் அடக்கியே வாசித்தார் எம்.ஜி.ஆர். 

ஆனால் 'ஸ்ரீமுருகன்' படத்துடன் 'ராஜகுமாரி'-யும் விறுவிறுவென தயாரானபோதுதான் 'நிச்சயம் இந்த முறை கதாநாயகனாவோம்' என்ற நம்பிக்கை எம்.ஜி.ஆருக்குப் பிறந்தது.

1946-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி, 'ஸ்ரீமுருகன்' படம் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லையென்றாலும், மக்களிடையே எம்.ஜி.ஆர் ஆடிய ருத்ரதாண்டவம் பெரிதும் பேசப்பட்டது. நடனக்காட்சியில் அவர் காட்டிய வேகம், மக்களிடம் இன்னும் நெருக்கமாக ரசிகர்களிடம் அவரைக் கொண்டு சேர்த்தது. 

இதனிடையே ராஜகுமாரி படமும் விறுவிறுவென தயாராகிக் கொண்டிருந்தது.

- எஸ்.கிருபாகரன்

                 இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்