Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமச்சந்திரனுடன் மோதிய ராமச்சந்திரன்.. நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் - 26

எம் ஜி ஆர்

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படமான 'ராஜகுமாரி', '1001 அரேபியன் இரவுகள்' கதையை அடிப்படையாக வைத்து சிலசில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட கதை. மாய மந்திரக் கதைகளுக்கு அன்று மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பினால் ஜூபிடர் நிறுவனம் ஸ்ரீமுருகனுக்குப்பின் தான் எடுக்கவிருந்த திரைப்படத்திற்கு இப்படி ஓர் கதையை தேர்வுசெய்திருந்தது.

எம்.ஜி.ஆர் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான படத்தின் சுவாரஸ்யமான கதை இதுதான்...

உலகிலேயே பெரிய அழகியை அடைந்து பெரும் சக்தியை அடையவேண்டும் என்ற வெறியுடன் அப்படி ஓர் அழகியைத் தேடி தனது மாயா சக்தியுடன் உலகை வலம் வருகிறான் ஓர் மந்திரவாதி (எம்.ஆர். சாமிநாதன்). இந்திய தேசத்தில் அப்படி ஓர் அழகியை கண்டுபிடிக்கிறான். அவள் அந்நாட்டின் அப்பாவி மன்னனின் மகள். ராஜகுமாரியான மல்லிகா (கே.மாலதி) அறிவிலும் அழகிலும் தேர்ந்தவள். ராஜாவின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி பல தவறுகளை செய்துவருபவன் ஆளகாலன் என்ற கொடூர எண்ணம் கொண்டவன் (டி.எஸ்.பாலையா). அவனுக்கு ராஜகுமாரி மீது ஒரு கண். ஒருநாள் வேட்டைக்காக  காட்டுக்குச் சென்ற இடத்தில் சுகுமாரன் (எம்.ஜி.ஆர்) என்ற கட்டழகனை சந்தித்து காதல் கொள்கிறாள் மல்லிகா. மல்லிகாவின் மனதை மாற்றுவதற்காக மாயசக்தியை தேடிச்செல்லும் ஆலகாலன் மாயாவிளக்கு மந்திரவாதியை சந்திக்கிறான். 

எஆனால் மல்லிகாவின் அழகில் மயங்கிய மந்திரவாதி, ஆலகாளனை ஏமாற்றிவிட்டு மல்லிகாவை ஜாலத்தீவு எனும் தன் இடத்திற்கு துாக்கிச்செல்கிறான். மகளை கண்டுபிடித்து தருபவருக்கே அவளை மணமுடித்து தருவதாக அறிவிக்கிறார் மன்னன். இதைக் கேள்வியுற்று காதலி மல்லிகாவை தேடிச் செல்கிறான் சுகுமாரன். மல்லிகா ஜாலத்தீவில் இருப்பதை அறிந்து அவளைத்தேடிச்செல்கையில் வழியில் சர்ப்பத்தீவு ஒன்று வருகிறது. அந்த தீவின் ராணியான விஷாராணி, அவன் மேற்கொண்டு பயணம் செய்யாதபடி தடுக்கிறாள். சர்ப்பத்தீவில் நண்பராகும் பாம்பாட்டி பஹ் (நம்பியார் ) என்பவன் விஷாராணி (தவமணிதேவி)நடத்தும் போட்டியில் வென்றால் ஜாலத்தீவு செல்ல கப்பல் கிடைக்கும் என வழிசொல்கிறான். 

அதேசமயம் சுகுமாரனுக்கு போட்டியாக மல்லிகாவைத்தேடி வரும் ஆலகாலனும் இதேபோல் சர்ப்பத்தீவில் சிக்கிக்கொள்ள, ராணி நடத்திய போட்டியில் அவன் தோற்றுவிட சுகுமாரன் வெல்கிறான். காலையில் கப்பல் கிடைத்து ஜாலத்தீவு சென்று மல்லிகாவை மீட்டுவிடலாம் என கற்பனையில் மிதக்கும் சுகுமாரனுக்கு மீண்டும் சிக்கல் வருகிறது. அவனது கட்டழகில் மயங்கும் விஷாராணி, தன்னை ஓர் இரவு திருப்திப்படுத்தினால்தான் ஜாலத்தீவு செல்ல கப்பல் ஏற்பாடு செய்வதாக நிபந்தனை விதிக்கிறாள். கற்பு நெறியில் வாழ்ந்துவரும் சுகுமாரன் அதை மறுக்கிறான். இதனால் விஷாராணியால் பல தொல்லைகளுக்கு ஆளாகும் சுகுமாரன் மல்லிகாவை மீட்கிறானா இல்லையா என்பதுதான் ராஜகுமாரி படத்தின் கதை. எஸ்.ஏ.சாமியின் இயக்கத்தில் பல ட்விஸ்ட்டுகளுடன் படம் வெளியானது. 

கதாநாயகன் என்றாலும் கதாநாயகி மாலதிக்கு வழங்கப்பட்டதில் பாதிதான் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக தரப்பட்டது. டி.எஸ். பாலையா அன்று புகழ்மிக்க நடிகர் என்பதால் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டதை விட 5 மடங்கு ஊதியம் அதிகமாக வழங்கப்பட்டது. 

ராஜகுமாரி படத்தின்போது சுவாரஸ்யமான ஓர் சம்பவம் அரங்கேறியது. ராஜகுமாரி படத் தயாரிப்பில் இருந்தபோது வழக்கம்போல் விநியோகஸ்தர்கள் படங்களை ஒப்பந்தம் செய்ய ஸ்டுடியோவிற்கு வந்தனர். அவர்களில் பெங்களுரைச் சேர்ந்த நாகண்ணா என்ற பிரபல விநியோகஸ்தரும் ஒருவர். பல வருடங்களாக  ஜூபிடருடன் தொழில் தொடர்பில் இருப்பவரான அவர் டி.ஆர்.ராமச்சந்திரனின் 'வித்யாபதி'  படத்தை அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்தார். காரணம் டி.ஆர்.ராமசந்திரன் அன்று பிரபலமாக இருந்ததே. 

1945 ம் ஆண்டு ஏ.வி.எம் செட்டியார் தம் பிரகதி ஸ்டுடியோ மூலம் டி.ஆர் ராமச்சந்திரனைக் கொண்டு ஸ்ரீவள்ளி என்ற திரைப்படத்தை 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் தயாரித்தார். அந்நாளில் அதன் வசூல் 20 லட்ச ரூபாய். அந்நாளில் தயாரிப்பாளருக்கு பெரும் லாபம் அது. மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டரில் ஸ்ரீவள்ளி திரைப்படம் 55 வாரங்கள் தொடர்ந்து ஓடியதாக புள்ளிவிபரம் சொல்கிறது ஒரு சினிமா இதழ். 

'வித்யாபதி' படத்திற்கு அவருக்கு அளிக்கப்பட்ட சம்பளம், ராஜகுமாரியின் கதாநாயகனான எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டதைவிட பத்து மடங்கு அதிகம் என்பதிலிருந்தே இரண்டு ராமசந்திரன்களுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளமுடியும். ('அன்பே வா' திரைப்படத்தில் சரோஜாதேவிக்கு தந்தையாக நடித்தவர்)

எம்.ஜி.ஆர்

நாகண்ணாவிடம் எஸ்.கே, ராஜகுமாரி படத்தைப்பற்றியும் சொல்ல, படக்காட்சிகளைப்பார்த்த நாகண்ணா, 'யாருப்பா இது?...பாகவதரோ, இல்ல சின்னப்பாவோ நடிக்கவேண்டிய படத்துல யாரோ முன்பின் தெரியாத ஆளைப் போட்டிருக்க, அதை வாங்கிட்டுப்போய் நான் நஷ்டமடையணுமா? என எரிச்சலாக மறுத்துவிட்டார். 'வித்யாபதி வாங்கிக்கொண்டால் ராஜகுமாரியை குறைந்தவிலைக்கே தருகிறேன்' என எஸ்.கே. சொன்னபோது கோபமடைந்த நாகண்ணா, 'என்ன எஸ்.கே உன் பழைய பார்ட்னரான என்னிடமே உன் தொழில் புத்தியை காட்டறியா...நீ சும்மா தந்தாலும் அந்தப்படம் வேண்டாம்'  என 'வித்யாபதி'யுடன் ஊர் போய் சேர்ந்தார். 'வித்யாபதி', 'ராஜகுமாரி' திரையிடப்பட்டன. ராஜகுமாரி அபார வெற்றி. வித்யாபதிக்கு போட்ட முதலீடு கூட கிடைக்கவில்லை. இதுதான் சினிமா எனும் வர்த்தக விளையாட்டு. 

ராஜகுமாரி பற்றி அன்றைய பிரபல சினிமா இதழான குண்டூசி, “ராஜகுமாரியில் ராமச்சந்திரனை பிரதம பாகத்திற்கு தேர்ந்தெடுத்த ஏ.எஸ்.ஏ சாமியை பாராட்டவேண்டும். சரியான பாகத்தைக் கொடுத்து அவரது திறமையை வெளிக்கொணர்ந்த பெருமை அவரையும்  ஜூபிடர் பிக்சர்ஸாரையுமே சாரும்” என வாழ்த்துக்களை அள்ளிக்கொட்டியிருந்தது எம்.ஜி.ஆர் மீது.

எம் ஜி ஆர்

எப்படியோ ராஜகுமாரியின் வெற்றி, எம்.ஜி.ஆரின் பத்தாண்டுக் கனவை ஒரு பகல்பொழுதில் நனவாக்கியது. எல்லா ஆண்களின் வெற்றிக்கு பின்னாளும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். எம்.ஜி.ஆர் திரையுல வெற்றியின் பின்னணியாக இருந்தது ஒரு 'ராஜகுமாரி'!
'ராஜகுமாரி' திரைப்படம் எம்.ஜி.ஆர் வாழ்வில் மட்டுமல்ல எம்.ஜி.ஆரின் எதிர்கால அரசியலில் நீரும் நெருப்புமாக பயணிக்கப்போகும் இன்னொரு பிரபலத்துக்கும் சினிமா வாயிலை திறந்துவிட்ட படம் எனலாம். படத்தின் இயக்குனராக ஏ.எஸ்.ஏ சாமிக்கு கதை -வசனத்தில் உதவியாக இருந்து அந்த படத்தின் பாட்டுப் புத்தகங்களில் 'உதவி ஆசிரியர்' என குறிப்பிடப்பட்ட அந்த 'பிரபலம்' யார் தெரியுமா...

- எஸ். கிருபாகரன்

      இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ