வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (03/04/2017)

கடைசி தொடர்பு:11:10 (03/04/2017)

“ஆதலினால் கொலையும் செய்தீர்..!” தீவிரவாத கொலைகளை விட காதல் கொலைகள் அதிகம்

காதல்

“காதலினால் மானிடர்க்குக் கவிதை யுண்டாம் கானமுண்டாம்..  சிற்பமுதற் கலைக ளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர்.. உலகத்தீரே...!”  என்று காதல் செய்ய அழைத்தான் பாரதி.  “ஒரு பெண்ணை காதலிப்பதென்றால், அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள். அடிமுதல் முடிவரை காதலால் நீவி  சாபமேற்றுவது, உறைந்துபோன ரத்தத்தில் கனவுகளில் சூடேற்றுவது என்று பொருள்” என்று பரம்பொருளான காதலுக்கு அர்த்தம் சொன்னார் சச்சிதானந்தம். “நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது. சூரியன் குளிர்ந்து போகும்வரை நட்சத்திரங்கள் முதுமையடையும்வரை நான் உன்னைக் காதலிப்பேன்” என்று எப்படிக் காதலிக்க வேண்டும் எனக் கற்றுத்தந்தார் ஷேக்ஸ்பியர்.  ஆம், காதலைப் பேசாத... காதலை எழுதாத...  காதலைக் கொண்டாடாத கவிஞர்கள் இல்லை; படைப்பாளிகள் இல்லை.  காதலைக் கடக்காத... காதலுடன் கைகோக்காத மனிதர்களும் இல்லை...  காதல்தான்... காதல்மட்டும்தான் அனைத்துக்கும் கிரியா ஊக்கி. எழுத்தா... ஓவியமா... புகைப்படமா... கவிதையா.. அறிவியல் கண்டுபிடிப்பா... அனைத்தும் ஈரமான காதலிலிருந்துதான் உயிர்ப்பித்தது... உயிர்ப்பிக்கிறது. துரதிர்ஷ்டமாக இப்போது கொலைகளும்கூட!
 
“புலம்பித் தவிக்கும் புள்ளிவிபரம்”

ஆம்.  தீவிரவாதத்தால் மாண்டவர்களைவிடக் காதலால், மன்னிக்கவும் காதலின் பெயரால் இறந்தவர்கள்தான் அதிகம் என ஒரு புள்ளிவிபரம் குருதி சொட்டச்சொட்டப் புலம்பித் தவிக்கிறது.   2001 தொடங்கி 2015 வரையிலான 15 ஆண்டுகளில், காதலால் மாண்டவர்களின் எண்ணிக்கை 38,585. இதே காலகட்டத்தில் தீவிரவாதச் செயல்களால்  இறந்தவர்கள் 20,000. 

இதே வருடங்களில்தான் காதலுக்காக, காதலின் பெயரால்  கடத்தப்பட்டவர்கள் 2.6 லட்சம் பேர்.  காதல் தற்கொலைகளில்,  மூழ்கித் தவிக்கும் முதன்மையான ஏழு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.  இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த 15 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 9,405 தற்கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி இருக்கின்றன என்கிறது அந்தப் புள்ளிவிபரம். இந்த  ரத்தக்கறையை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பிறமாநிலங்கள் ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம்,  ஒடிசா, அசாம். 

இது 2015 வரையிலான துயரக் கணக்குத்தான்... இந்தக் கணக்கில் ஆதிக்கத்தால் தற்கொலை செய்யப்பட்ட இளவரசனும்... கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜும்... சங்கரும்... சோனாலியும், ஃப்ரானிசிகாவும், சுவாதியும்  வரமாட்டார்கள்.  அந்தக் கணக்கும், அதன் பின்னால் உள்ள கதைகளும்  கூடும்போது, அந்தப் புள்ளிவிபரத்திலிருந்து புறப்படும் குருதி நாற்றம் நம் வயிற்றைப் புரட்டும்.

காதல்

“ஆதலினால் கொலையும் செய்தீர்”

ஏன் இத்தனை கொலைகளும்... தற்கொலைகளும்...?  ஒரே காரணம்தான்... ‘மனிதமாண்புகள் விழுமியங்கள் மாறிவிட்டன”. இந்த காரணத்துக்குப்பின்னால்  சாதி, மத, பண்பாடு சார்ந்த  அழுத்தமான அரசியலும் இருக்கிறது;  நவ யுவன்கள், யுவதிகளின் காலம் மாறிவிட்டது; நாங்கள் புது யுகத்துக்குள் நுழைந்துவிடோம்...நவ நாகரிகம் அடைந்துவிட்டோம். அந்தக் கணத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் வாழ்கிறோம்... கொண்டாடுகிறோம் என்று கொண்டாடத்தை வெளித்தோற்றத்தில் முன்வைத்தாலும். அவர்கள் உள்ளுக்குள் உறவுச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதன் தெளிவான எடுத்துக்காட்டுத்தான் இந்தப் புள்ளிவிபரம். 

காதல்இந்தப் போட்டி சந்தைப் பொருளாதாரம்.. அறத்தை உதிர்த்துத் தள்ளிவிட்டது. இந்தப் பிரபஞ்சத்தின் உள்ள அனைத்தையும் வெறும் சந்தைப் பொருளாக மட்டும்  பார்க்க வற்புறுத்துகிறது. அதன் அங்கமான கல்வியும் அதையேதான் வழிமொழிகிறது.  “எல்லாம் உனக்காகத்தான்...  உனது தேவையை அடைய எந்த எல்லைக்கும் செல்லலாம்.. இறுதியில் வெற்றி மட்டும்தான் கணக்கில் கொள்ளப்படும்,. அதனால் எதற்காகவும் கவலைகொள்ளாமல் முன்னேறிச் செல்” என்ற குரல் எங்கும் எதிலும் உரக்க ஒலிக்கிறது. இதை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் மனித மனம், காதலையும் வெறும் பண்டமாகமட்டும் பார்த்து, அதை அடையே அனைத்து வழிகளையும் கைகொள்கிறது. அதை அடைய முடியாதபோது  கொலையும் செய்கிறது, தற்கொலையும் செய்துகொள்கிறது. இது பண்பாடு... நாகரிகமாற்றத்தால் ஏற்பட்ட உளவியல் சிக்கலென்றால்... குடும்பமே  தங்கள் வெற்றுப் பெருமைகளுக்காகச் செய்யும் கொலைகளும் பதறவைப்பதாக இருக்கிறது.  

தன் மகள் சதுரா தங்கள் பேச்சை மீறி...   டேனியல் என்னும் தலித் இளைஞனைத் திருமணம் செய்துகொண்டதற்காகத் அவள் காதில் விஷம் ஊற்றிக்கொன்றது. காதல் திருமணம் செய்துகொண்ட மகள் கெளசல்யாவையும், மருமகன் சங்கரையும் கொல்ல ஆள் ஏவி... உடுமலைப்பேட்டையில் நடுவீதியில் சங்கரைக் கொன்றது எனப் பெற்றோர்களே முன் நின்று செய்துவைத்த கொலைகளின் பட்டியலும் நீளும். 

சரி... என்னதான் தீர்வு...? காதலைக் கவிதையாக உருகும், மருகும் அதே நேரம்... காதல் ஒரு பண்டம் அல்ல என்று நம் பிள்ளைகளுக்குப் புரியவைப்போம்.  நண்பன் நித்திஷ், “Letting the Loved One Go is also part of Love" என்பான். உண்மைதானே... நமக்குப் பிடித்தமானவர்கள்.. நம்மைவிட்டு விலகிச் செல்வதும் காதலின் ஓர் அங்கம்தான் என்று உணர்த்துவோம்.  இதைக் குடும்பங்களும்... கல்வியமைப்பும் செய்ய வேண்டியதென்றால்... அரசும், முற்போக்கு இயக்கங்களும் சாதி மறுப்புத் திருமணம் குறித்த உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்த வேண்டும். இவை இரண்டும் ஒரு நீண்டகாலச் செயல்பாடு... இதைச் செய்ய தவறுவோமானால், கண்ணதாசன் கூறியதுபோல,  “தற்கால உலகம் காதலுக்கு லாயக்கற்றது” என்றாகிவிடும்.  அப்படி  ஆகுமாயின், கலையும் படைப்பும் எந்த அழகும், ஒழுங்கும் இல்லாமல் சிதைந்துவிடும். சமூகத்தில் நல்லிணக்கம் இல்லாமல் ஆகிவிடும்... அமைதி சிதைந்துவிடும். அதற்காகவேணும்... காதல் குறித்த ஓர் உரையாடலை நிகழ்த்துவோம்.

- மு. நியாஸ் அகமது 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்