ஆர்.கே நகர் தேர்தல் நடக்குமா? என்ன சொல்கிறார் முன்னாள் தேர்தல் ஆணையர்?

ஆர்கே நகர்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக  டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம்  டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை செய்து வருகிறார். எனவே, தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என்ற பரபரப்பு கூடியிருக்கிறது.

அதிரடி மாற்றங்கள்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலைக் கண்காணிப்பதற்காக கூடுதலாக 5 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இது இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறை என்று சொல்கிறார்கள். அதேபோல, ஆர்.கே நகர் தொகுதியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மட்டம் வரை உள்ள அத்தனை தேர்தல் அதிகாரிகளையும் மாற்றி இருக்கின்றனர். இன்ஸ்பெக்டர் முதல் கூடுதல் ஆணையர் வரை தொகுதியில் உள்ள அனைவரையும் மாற்றி இருக்கிறது தேர்தல் ஆணையம். அதேபோல ஆர்.கே.நகருக்குள் பணிபுரியும்  மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர்கள், உதவி பொறியாளர்களையும் இடமாற்றம் செய்திருக்கின்றனர்.

உறுதியான முடிவு

தமிழகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில், அதிகாரிகளின் துணையுடன் ஆளும் கட்சி தரப்பில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குச் சென்றுள்ளது. அது போல ஆர்.கே நகரிலும் உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் அரசியல் கட்சியினர் தேர்தலின்போது முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே இப்போது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகாரிகள் மாற்றத்தை அடுத்து கண்காணிப்பும் தீவிரம் அடைந்துள்ளது பணம் கொடுக்க முயன்றதாக சிலரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

தொகுதியில் அ.தி.மு.க-வின் இரண்டு அணிகள் சார்பிலும் பணப்படுவாடா நடக்கிறது என்று தி.மு.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் தரப்பட்ட புகார்களை உமேஷ் சின்ஹா பரிசீலனை செய்திருக்கிறார். அவர்களின் புகார்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில்தான் அதிகாரிகள் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. எனவே, தேர்தல் முறைகேடுகளைத் தடுத்தே தீர வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியான முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் நடந்த தேர்தல்களைப் போல அதிக அளவு பணம் ஆர்.கே நகரில் பணம் கைப்பற்றப்படவில்லை. 7 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கடந்த 3-ம் தேதி போலீஸ்  கமிஷனர் கூறி உள்ளார்.

ரத்தாக வாய்ப்பில்லை

அதிக அளவு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாலும், தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் வரும் புகார்களின் அடிப்படையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சொல்கின்றனர்.

இது குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமியிடம் பேசினோம்."இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர் யாராவது இறந்து விட்டாலோ அல்லது புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் தேர்தல் தள்ளி வைக்கப்படும். அதே போல தேர்தல் முறைகேடு நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால், தேர்தல் தள்ளி வைக்கப்படும். ஆர்.கே.நகரில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று ஆணையம் கருதவில்லை என்று கருதுகிறேன். நியாயமாக தேர்தல் நடத்தவே தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது என்று கருதுகிறேன்" என்றார்.

- கே.பாலசுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!