பெரு நஷ்டத்தில் திணறும் பேருந்து கழகங்கள்... சேவை நிறுத்தம்தான் தீர்வா..? | Huge Revenue Loss for Transport Corporation

வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (04/04/2017)

கடைசி தொடர்பு:11:11 (04/04/2017)

பெரு நஷ்டத்தில் திணறும் பேருந்து கழகங்கள்... சேவை நிறுத்தம்தான் தீர்வா..?

அரசு பேருந்து

ரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் 3,200 அரசு பேருந்துகள் நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியானது. தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவை அரசு கைவிட்டுள்ளது.

வருவாய் குறைந்த பேருந்துகள்...

தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமான 8 போக்குவரத்துக் கழகங்களின் மூலம் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் செல்லமுடியாத குக்கிராமங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் அரசுப் பேருந்துகள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. நஷ்டத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இதனால், அரசுக்கு பெரும் நிதி சுமை ஏற்பட்டிருக்கிறது. எனவே,  போக்குவரத்துக் கழகங்களை லாப நோக்கில் செயல்பட வைக்க அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அண்மையில் போக்குவரத்துறை அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையில்,  வருவாய் குறைவான பேருந்துகளை நிறுத்தி விடலாமா என்று விவாதிக்கப்பட்டதாகச் சொல்கின்றனர்.  அதன்படி நஷ்டத்தில் இயங்கும்  3,200 பேருந்துகளை நிறுத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சென்னையில் மட்டும் 360 பேருந்துகள் நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.  இதன் தொடர்ச்சியாக போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஒரு கி.மீ-க்கு 18 ரூபாய்க்கும் குறைவாக வசூல் இருந்தால், அந்தப் பேருந்தை நிறுத்தி விடலாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.  

அரசு மானியம் தரவேண்டும்

நிர்வாகக் குளறுபடிகள் காரணமாகவே, போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அரசு பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் ஓடும் தனியார் பேருந்துகள் மட்டும் எப்படி லாபமாக இயங்குகின்றன என்பதையும் அரசு சிந்திக்க வேண்டும். போக்குவரத்துக்கழகங்கள் லாபநோக்கம் இன்றி சேவை நோக்கில் செயல்பட வேண்டும் என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் இருக்கிறது.  
"போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டம் இல்லாமல் செயல்பட போக்குவரத்துக்கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் இடையான வித்தியாசத்தை அரசு தர வேண்டும். இலவச பஸ்பாஸ், முதியோர் பஸ் பாஸ் போன்றவற்றுக்கான தொகையை காலதாமதம் இன்றி முழுமையாக அரசு தர வேண்டும். டீசல் விலை உயரும் போதெல்லாம் நஷ்டத்தை ஈடுகட்ட போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார். அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியும் அதை அமல்படுத்தவில்லை" என்றார் உயர் அதிகாரி ஒருவர்.

நிறுத்தினால் எதிர்ப்பு

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் தொழிற்சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம்." பேருந்துகள் நிறுத்தம் குறித்து நிர்வாகம் தரப்பில் இருந்து முறையான அறிவிப்பு ஏதும் வரவில்லை. இந்தத் தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒரு டெப்போவுக்கு 15 பேருந்துகள் நிறுத்த நேரிடும். பேருந்தை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர் வேலை இழக்கக் கூடும். பேருந்துகள் எண்ணிக்கையைக் குறைப்பதை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளாது. மக்களுக்குப் போதுமான அளவுக்கு பேருந்து வசதிகள் இல்லை என்று சொல்லும் நிலையில், திடீரென பேருந்துகளை நிறுத்தக் கூடாது. கோடைகாலத்தில் தற்காலிகமாக பேருந்துகள் நிறுத்துவதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டால் எதிர்ப்புத் தெரிவிப்போம். போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக, பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவலை அரசு மறுத்துள்ளது. நேரத்தை மட்டுமே மாற்றி அமைக்கிறோம். பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்படமாட்டாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்துக் கழங்களின் நிர்வாகம், பேருந்துகள் பாரமரிப்பு, ஆகியவற்றில் குறைகளைக் களைந்தால் லாபநோக்கில் செயல்பட முடியும் என்றும் சிலர் சொல்கின்றனர். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

-கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close