காட்சிப் பொருளாக வைக்கப்பட்ட பெண்... சிதைத்த பார்வையாளர்கள்..! அதிர்ச்சி சம்பவம்

ரிதம் ஓ நிகழ்ச்சியில் பங்கேற்ற மரினா

“ஒருவர் ஆறுமணி நேரம் மேடையில் அசையாமல் இருப்பார்; அவரை, என்ன வேண்டுமானாலும் செய்யலாம்'' என்ற அறிவிப்பு எத்தனை பேருக்கு அதிர்ச்சியை அளிக்கும் என்று தெரியவில்லை. 

சென்னை  ஈ.சி.ஆரில் உள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில், ஒருவர் சிலைபோல் இருப்பார். காலையில் இருந்து மாலைவரை அவர் ஒரே இடத்தில் நின்றுகொண்டு, அசையாமல் இருப்பார். 'அவரைச் சிரிக்க வைப்பவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்' என அறிவிப்புப் பலகை ஒன்றும் அவர் பக்கத்தில் இருக்கும். அங்குவரும் சுற்றுலாவாசிகள் அவரைச் சிரிக்கவைக்க அவர்களால் முடிந்தவரை முயல்வார்கள். இதில், அவரைத் தொடாமல் சிரிக்கவைக்க வேண்டும் என்பது விதிமுறை. ஒருவேளை, நினைத்துப்பாருங்கள்.... அவரை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் என்ன நடக்கும் என்று. அதுதான் இத்தாலியில் 'ரிதம் ஓ' என்ற மேடை நிகழ்ச்சியிலும் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், அந்த இடத்தில் இருந்தது ஒரு பெண். அவருக்கு நடந்தவற்றை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவுக்கு கொடூரமானவை. 

மரினா ஆப்ரமோவிக் என்ற யூகோஸ்லோவியன் பெண்மணி மிகவும் பிரபலமானவர். அவருடைய செயல்திறனைப் பார்த்து வியந்தவர்கள் பலர். இதுபோன்ற மேடை நிகழ்ச்சியை அவர், 40 ஆண்டுகளாகச் செய்துவருகிறார். அவர் கடைசியாகப் பணியாற்றிய மேடை நிகழ்ச்சியைப்(1974) பற்றி மக்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன நடந்தது அந்த நிகழ்ச்சியில்?

'ரிதம் ஓ' மேடை மிகவும் எளிதாக அமைக்கப்பட்டிருக்கும். அதில், அவர் ஆறு மணி நேரம் அசையாமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பார். அங்கு வருபவர்கள், அவருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் 72 பொருட்களில் எதை வேண்டுமானாலும் எடுத்து... அவரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டிருக்கும். மேலும், அதில்

"இந்த மேடையில் 72 பொருட்கள் உள்ளன. அதை விருப்பப்படி என்மீது பயன்படுத்தலாம்.

* நான் ஒரு பொருள்.

* இந்த நேரத்தில் நடக்கும் அனைத்துக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்வேன்.

* நேரம்: இரவு 8 மணி முதல் காலை 2 மணிவரை 

- என்று முக்கியக்குறிப்புகளும் இடம்பெற்றிருக்கும்.

மரினா ஆப்ரமோவிக்

அங்கு இன்பமூட்டும் பொருள்களாகப் பறவையின் இறகுகளும், பூக்களும் இருக்கும். அதுபோல், ஒருவரை அழிக்கப் பயன்படுத்தும் பொருள்களாகக் கத்தி, பிளேடு, துப்பாக்கி முதலியன வைக்கப்பட்டிருக்கும். இப்படியிருக்கும் அந்த நிகழ்வில், மரினா ஆப்ரமோவிக்கின் உடல்மீதுதான் அந்தப் பொருள்கள் அங்கு வருபவர்களால் பயன்படுத்தப்படும். இதுபோன்ற ஒரு நிகழ்வின்போதுதான் அவருக்கு, அடுத்த 6 மணி நேரத்தில் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில், அந்தப் பெண்ணை உட்காரவைத்து... அவருடைய கால்களைச் சங்கிலிகளால் கட்டினர். இதையடுத்து, பின்னர் வந்தவர்கள் அவர்மீது பல பொருள்களைவைத்துக் கட்டினர். ஆரம்பத்தில் அவர்மீது பொருள்களை எடுத்துவைப்பதோடு மட்டும் இருந்தவர்கள்... பின்பு, அடுத்தகட்டமாக அவரைத் தொடவும் தொடங்கினார்கள். இவையெல்லாம் முதல் இரண்டு மணி நேரத்தில் நடந்தவை. ஆனால், பெரும் அதிர்ச்சியே கடைசி இரண்டு மணி நேரத்தில் நடந்ததுதான். 

மேடைக்கு வந்த சிலர், பிளேடைக்கொண்டு அவரது உடையைக் கிழிக்கத் தொடங்கினார்கள். பின்னர், அதே பிளேடைக்கொண்டு அவரின் உடலைக் கிழித்தார்கள். அதன்பிறகு, அங்கிருந்த கத்தியின் மூலம் அவருடைய கழுத்தும் பதம் பார்க்கப்பட்டது. கடைசியாக வந்த சிலர், துப்பாக்கியை அவர் கையில் கொடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொல்லும் வகையில் செய்தனர். இதையெல்லாம் பார்த்து அவர் சிறிதும் பதற்றப்படாமல், அவர் செய்யும் வேலையில் அவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தார். 

ஆறு மணி நேரம் கழிந்த பின்னர் அந்தப் பெண் பேசியதாவது, "நான் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக உணர்ந்தேன். என்னுடைய உடைகளை முழுவதுமாகக் கிழித்து என்னை நிர்வாணம் ஆக்கினர். ஒருசிலர், என் வயிற்றில் ரோஜா முள்களைவைத்துக் கீறினார்கள். இன்னும் சிலரோ, துப்பாக்கியைக்கொண்டு நான் சுட்டுக்கொல்வதுபோல வைத்தார்கள். அவர்கள் செய்த இந்தச் செயல்களை எல்லாம் பார்க்கும்போது அவர்களிடம் மனிதநேயம் என்பது ஒன்று இல்லாததுபோலத்தான் தெரிகிறது. ஒருவர் எதிர்க்காமல் இருந்தால் அவரை எவ்வளவு விரைவில் காயப்படுத்த முடியும் என்பதை இவர்களிடம் இருந்து நான் தெரிந்துகொண்டேன். ஒரு மேடை கொடுத்தால், சாதாரண மனிதன்கூட மிகக் கொடூரமானவனாக முடியும் என்பது இதன்மூலம் நன்கு புரிகிறது" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில், அவர் அங்கு வந்திருந்தவர்களைச் சந்திக்க மேடையில் இருந்து இறங்கி பார்வையாளர்களை நோக்கிச் சென்றார். ஆனால், அங்கிருந்தவர்கள் அவரைச் சந்திக்க முடியாமல் தலைகுனிந்து கொண்டனர். அந்தப் பெண் அவர்களைத் தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதில், அனைவரும் கவனமாக இருந்தனர். அங்கு வந்த அனைவருமே அவரைக் காயப்படுத்தி மகிழ்ந்தனர். என்னதான் போட்டியாக இருந்தாலும் மக்களுக்கு மனிதநேயம், பொது இடம் என்ற சிந்தனைகூட இல்லாமல் செயல்பட்டிருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. 

வரைமுறை இல்லாத போட்டியாக இருந்தாலும், போட்டியில் கலந்துகொண்டர்கள் ஒரு வரைமுறையுடன் நடந்திருக்க வேண்டியது அவசியம். பெண் உரிமை, பெண் மேம்பாடு பற்றிப் பேசும் இதே உலகில்தான் ஒரு பெண் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டால்...  இப்படியும் விஷமச் செயல்கள் அரங்கேறும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்.

- நந்தினி சுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!