வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (04/04/2017)

கடைசி தொடர்பு:09:45 (05/04/2017)

நாடாளுமன்றத்தில் பெண்கள்...இந்தியாவை முந்திய பாகிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள்! #VikatanDataStory

நாடாளுமன்றத்தில் பெண்கள்

லக பெண்கள் தினம், மார்ச் 8-ம் தேதி பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்களும், உரிமை மறுப்புகளும் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் பெண்களுக்கெதிரான குற்றங்களும், உரிமை மறுப்புகளும் மற்றும் பலவிதமான அநீதிகளும் இழைக்கப்படுகிறது. இந்தியாவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது, உலகின் மோசமான நாடுகள் என்று நாம் நினைக்கும் பல நாடுகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகவும் குறைவாகத்தான் உள்ளது.

இந்தியாவில் 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் வெறும் 62 உறுப்பினர்களே அதாவது 11 சதவீதத்தினரே பெண் எம்.பி.க்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அநீதிகளும் அதிகம் உள்ள நம் நாட்டில், அவை தொடர்பான குரலை பெண்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கான வாய்ப்புகளோ, தங்களின் தொகுதிகளில் முன்னேற்றப் பணிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலையோ இல்லை. பொருளாதாரத்திலும் மின்னணுமயமாக்கத்திலும் உற்பத்தியிலும் கல்வியிலும், பாதுகாப்புத் துறையிலும் உலகின் முன்னணி நாடுகளுக்குச் சவால் விடும் நிலையில் இந்தியா உள்ளதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை இன்னமும் நிறைவேற்றாமல் உள்ளது.

இந்தியா முன்னணியில் உள்ள பல்வேறு துறைகளில் பின்தங்கியிருக்கும் ருவாண்டா, பொலிவியா, செஷல்ஸ், நமீபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில்கூட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்தியாவைவிடவும் அதிகமாக உள்ளது.

உலக அளவில் நாடாளுமன்றங்களில் உள்ள பெண் உறுப்பினர்களின் சராசரி 22.4% ஆகும். உலக சராசரியை விட அதிகமாக ஐரோப்பாவில் 25.2 சதவிகிதத்தினரும், ஆப்ரிக்காவில் 22.6 சதவிகிதத்தினரும், ஆசியக் கண்டத்தில் 19 சதவிகிதத்தினரும், அரேபிய நாடுகளில் 18 சதவிகிதத்தினரும் உள்ளனர். 42 நாடுகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாக உள்ளனர். 

148-வது இடத்தில் இந்தியா!

சுஷ்மா சுவராஜ்உலகின் 190 நாடுகளில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலில் 11 சதவிகித பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியா 148-வது இடத்தையே பெற்றுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும், அதனினும் பெரிய அதிர்ச்சி இந்தப் பட்டியலில் முன்னணி இடங்களைப் பெற்றுள்ள நாடுகளைப் பார்த்தால் கண்டிப்பாக ஏற்படும்.

உகாண்டா 34.3 சதவிகிதத்துடன் 31-வது இடத்தையும், 32.6 சதவிகிதத்துடன் ஜிம்பாப்வே 34-வது இடத்தையும், நேபாளம் 29.6 சதவிகிதத்துடன் 48-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியே உள்ளது. 

ஆப்பிரிக்க நாடான ருவாண்டா 61.3 சதவிகித பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உலகிலேயே முதலிடத்தையும், பொலிவியா 53.1%, கியூபா 48.9%, ஐஸ்லாந்து 47.6%, நிகரகுவா 45.7%, ஸ்வீடன் 43.6%, செனெகல் 42.7%, மெக்ஸிகோ 42.6%, பின்லாந்து 42%, தென்னாபிரிக்கா 42% எனப் பெற்று, பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

அனைத்து கூட்டமைப்புகளிலும் பின்தங்கிய இந்தியா!

உலகின் 190 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பட்டியலில் இந்தியா 148-வது இடத்தைப் பிடித்துள்ளது.  பட்டியலிடப்பட்ட 18 ஆசிய நாடுகளில் 13-வது இடத்தையும், எட்டு சார்க் நாடுகளில் ஐந்தாவது இடத்தையும், பிரிக்ஸ் நாடுகளில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த நிலைக்குக் காரணமென்ன?

உலக அளவில் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் முன்னணி இடங்களைப் பெற்றுள்ள பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. குறிப்பாக ருவாண்டாவில் 30 சதவீத நாடாளுமன்ற இடங்கள் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில், நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான பயணம், கடந்த 1996-ம் ஆண்டிலேயே ஆரம்பித்து 1999, 2002 மற்றும் 2003-ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2008-ல் மீண்டும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி 2010-ல் அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது. 

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மசோதாவை அமல்படுத்த வேண்டுமென்றால், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளின் ஒப்புதலும் அவசியம். ஆனால், 2014-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி முடிவடையும்வரை மக்களவையில் மகளிர் மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படவில்லை. அதன்பின்னர் தற்போது ஆட்சியிலிருக்கும் பி.ஜே.பி தலைமையிலான அரசும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நம் சமூகத்தில் பெண்களுக்கான உரிமை என்பது வார்த்தை அளவில் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் பள்ளியிலும் கல்லூரியிலும் அலுவலகத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் சமத்துவ நிலையை அடைவதே ஆகும். பெண்கள் பாதுகாப்பிற்காக விர்ச்சுவல் உலகில் இணையதளம் மற்றும் கைப்பேசிச் செயலிகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கம், ரியாலிட்டியில் இனியாவது ஏதாவது செய்யுமா?!

- ஜெ. சாய்ராம்,
மாணவப் பத்திரிகையாளர்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்