வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (05/04/2017)

கடைசி தொடர்பு:12:57 (15/04/2017)

கண்ணுக்கு அழகு... மண்ணுக்கோ ஆபத்து... நீலகிரியின் நீர்வளத்தைக் கெடுக்கும் ஸ்காட்ச்ப்ரூம் மலர்கள்!

ம் மண்ணின் நிலத்தடி நீர்வளத்தை உறிஞ்சுகிறது என்பதற்காக, பல்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் முழுவதுமாக வெட்டப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து நம் நாட்டிற்கு வந்த சீமைக்கருவேல மரம் என்ற ஒரு தாவரத்தைத்தான் நாம் கண்டறிந்து களையெடுத்து வருகிறோம். ஆனால் இதுபோல பல தாவரங்கள் நம் மண்ணில் இருந்துகொண்டே, நம் பல்லுயிர் சூழ்நிலையை சிதைத்துக்கொண்டிருக்கின்றன. குளங்களில் காணப்படும் ஆகாயத்தாமரை, மலைவாசஸ்தளங்களில் காணப்படும்   யூகலிப்டஸ் மரங்கள் போன்றவை எல்லாம் நம் கண்ணுக்கு தெரிந்த சில உதாரணங்கள். தற்போது இதேபோல நீலகிரி பகுதியில் அதிகளவில் வளர்ந்து, அந்தப் பகுதியின் மரபுசார்ந்த தாவரங்களுக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்து வருகின்றன ஸ்காட்ச்ப்ரூம் செடிகள்.

ஸ்காட்ச்ப்ரூம்ஸ்

மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்க...

கோத்தகிரி மலர்கள் என அழைக்கப்படும் இந்த மலர்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் நம் நாட்டிற்குள் நுழைந்த ஒன்று. அழகுக்காக இங்கே வந்த இந்த ஸ்காட்ச்ப்ரூம், நீலகிரி பகுதியில் இருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ஏற்படுத்தும் தீங்குகள் கொஞ்சம் நஞ்சமல்ல. நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் வளர்ந்திருக்கும் இந்த செடியால், பவானி நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி மற்றும் அப்பர் பவானி அணைகளுக்கு நீர்வரத்து குறைவாக வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் வளர்ந்திருக்கும் புற்களையும் வளரவிடாமல் தடுக்கிறது இந்த ஸ்காட்ச்ப்ரூம். 

இதன் தீமைகள் பற்றி விளக்குக்கிறார் தமிழ்நாடு பசுமை இயக்கத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன். "இந்தச் செடிகள், நீலகிரிப் பகுதியில் இருக்கும் புல்வெளிகள் மற்றும் தாவரங்களுக்கே மிகுந்த ஆபத்தானது. இங்கே வளர்ந்திருக்கும் புல்வெளிகள் மீது இந்தச் செடிகள் படர்ந்து வளர்வதால், அவை அதிக அளவில் வளரமுடியாது. அத்துடன் ஏற்கெனவே இருந்த புல்வெளிகளும் காய்ந்துவிடும். இந்தப் புல்வெளிகளின் நன்மை குறித்து தெரிந்தால்தான் இதன் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும். மழைக்காலத்தில் கிடைக்கும் மழைநீர் முழுவதையும் தனது வேரில் சேமித்துவைத்துக் கொண்டு, மழை இல்லாத காலங்களில் ஆறுக்கு கொடுக்கும் தன்மை கொண்டவை இந்த சோலைக்காடுகளின் புல்வெளிகள். இதனால்தான் வெயில் காலங்களில் கூட, இந்தப் பகுதியில் இருக்கும் ஆறுகளில் நீரானது வற்றாமல் இருக்கும். மழைக்காலங்களில் பெய்யும் நீரை சேமித்து வைத்து, மழை இல்லாத காலங்களில் நீரைத் திரும்பத் தருவதில் அதிமுக்கியம் வாய்ந்தவை இந்த சோலைக்காடுகள். மாயாறு, பவானி உள்பட மொத்தம் நான்கு ஆறுகளுக்கு இந்த சோலைக்காடுகள்தான் நீரைத் தருகின்றன. 

ஸ்காட்ச் ப்ரூம் செடிகளின் வளர்ச்சி

மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்க...

பருவமழையின் போது பெய்யும் மழைநீரை சேமிப்பதோடு மட்டுமில்லாமல், மற்றொரு முக்கியமான பணியையும் இந்தப் புல்வெளிகள் செய்கின்றன. அதாவது பனிக்காலங்களில், இரவில் பெய்யும் பனியை வாங்கிவைத்துக்கொண்டு, பகலில் அதனை நீராக மாற்றி ஆற்றுக்கு அனுப்பும். அதாவது கிடைக்கும் மழைநீரை சேமிப்பதோடு மட்டுமில்லாமல், தண்ணீரை உற்பத்தி செய்யும் மூலமாகவும் இருக்கிறது. அந்த அளவிற்கு நீராதரத்திற்கு முக்கியமானது இந்தப் புல்வெளிகள். இவற்றைத்தான் போகிறபோக்கில் அழித்துவிடுகின்றன இந்த ஸ்காட்ச்ப்ரூம்ஸ் செடிகள். இந்தச் செடிகள் அந்தப் புற்களின் மேற்பகுதியில் வளர்வதால், புல்வெளிகள் வளர முடியாமல் காய்ந்துபோய் விடுகின்றன. இதனால் அவை தண்ணீர் தேக்கிவைக்க முடியாமல் போகும் அபாயம் ஏற்படுகிறது. சுமார் 40,000 ஹெக்டேர் அளவுக்கு இருந்த இந்தப் புல்வெளிகளின் பரப்பளவு இன்று, 4000 ஹெக்டேர் என்ற அளவில் சுருங்கிவிட்டது. இவற்றை ஒழுங்காக பராமரித்தாலே நம் தண்ணீர் தேவையை நாமே நிறைவேற்றிக்கொள்ளலாம். நீருக்காக அண்டை மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் குறைந்துவிடும். எனவே இந்த களைச்செடிகளை உடனே அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்கிறார் ஜெயச்சந்திரன்.

இதுகுறித்து தாவரவியல் ஆய்வாளர் குணசேகரன் கூறும்போது, "ஆங்கிலேயர்கள் காலத்தில் நம் நாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டதுதான் இந்த ஸ்காட்ச்ப்ரூம்ஸ். இது மட்டுமல்ல; இன்னும் எக்கச்சக்கமான வெளிநாட்டு தாவரங்கள் இங்கே இருக்கின்றன. நம் மண்ணிற்குரிய தாவரங்களை விடவும், இவை வெகுவிரைவாக வளரும். இது அவற்றின் பொதுவான குணங்களில் ஒன்று. இந்த அயல்நாட்டுத் தாவரங்களால், நம் மண்ணுக்குரிய தாவரங்கள் மற்றும் இவற்றிற்கு இடையே இடத்திற்கான போட்டி அதிகரிக்கும். இவற்றின் பரப்பளவு அதிகரிப்பதன் மூலமாக, நம் மண்ணின் புல்வெளிப் பரப்பளவு குறையும். இதனால் நீர்ப்பிடிப்பு பகுதியின் பரப்பளவும் குறையும். எந்த அளவிற்கு வெயில் அடித்தாலும், இந்தப் பகுதியில் நீர் இருப்பதற்கு இந்த சோலைக்காடுகள்தான் காரணம். ஆனால் அவற்றிற்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் என்பது புல்வெளிகளுக்கு மட்டுமல்ல. இந்தப் பகுதியில் இருக்கும் தாவரங்கள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்குமே இந்த ஸ்காட்ச் ப்ரூம்ஸ் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உயிர்ச்சங்கிலியில் ஒவ்வொரு உயிரினமும், மற்றொரு உயிரினத்தை சார்ந்துதான் வாழ்கிறது. இவற்றுள் ஏதேனும் ஒரு உயிருக்கு பாதிப்பு என்றாலும், இந்த பல்லுயிர் சூழலுக்கு சிக்கல் உண்டாகும். 

ஸ்காட்ச்ப்ரூம் செடிகள்

மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்க...

மே,ஜூன் மாதங்களில்தான் இந்த செடியில் பூக்கள் பூக்கும். பிறகு விதைகள் உருவாகி வளரத்துவங்கிவிடும். இதற்கு முன்பாகவே இந்தச் செடிகளை களையும், நடவடிக்கைகளை மேற்கொண்டால் இதன் வளர்ச்சியைத் தடுக்கமுடியும். அரசு இதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்.

ஸ்காட்ச் ப்ரூம்ஸ்

மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்க...

கண்ணுக்கு இனிதாக பார்க்கும் இடமெல்லாம் பரவியிருந்தாலும், மண்ணுக்கே மோசம் செய்யும் தன்மை கொண்டவை இந்த ஸ்காட்ச்ப்ரூம்ஸ். அதுவும் தமிழகமே வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இந்த நிலையில், இந்த சோலைக்காடுகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு அரசு இனியாவது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஞா.சுதாகர்,

படங்கள்: தி.விஜய்

நீங்க எப்படி பீல் பண்றீங்க