வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (05/04/2017)

கடைசி தொடர்பு:15:40 (05/04/2017)

புத்தகங்கள் வாசிக்க... சீன அறிவியலாளர்கள் சொன்ன காரணம்! #MustRead #3MinsRead

புத்தகம்

புத்தகம் என்னவெல்லாம் செய்யும்...? உங்களை தனிமையிலிருந்து மீட்கும்; கடந்த காலத்துக்கும்... எதிர்காலத்துக்கும் அழைத்துச் செல்லும்; குழப்பங்களிலிருந்து விடுவிக்கும்.  உங்கள் கற்பனைக்கான வெளியை திறந்துவிட்டு காற்றில் நீந்தச் செய்யும்.  இன்னும் இன்னும் என புத்தகங்கள் அனைத்து அற்புதங்களையும் செய்யும். அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘புத்தகங்கள் நன்கு வடிவமைக்கப்பட்ட, கைக்கு அடக்கமான மாயாஜால வித்தை’. ரஷ்ய கவிஞர் ஜோஷப், ‘புத்தகங்களை எரிப்பதைவிட மோசமான கொடுஞ்செயல், ஒருவரை புத்தகங்கள் படிக்கவிடாமல் தடுப்பது’ என்கிறார்.  இதையே அமெரிக்க புனைவு எழுத்தாளர் ராய் பிராட், “ஒரு கலாசாரத்தை அழிக்க வேண்டுமென்றால், நீங்கள் புத்தகங்களை எரிக்க வேண்டாம்... மக்களை புத்தகங்கள் படிக்கவிடாமல் தடுத்தாலே போதும்’ என்கிறார். இதை அப்படியே நமது அரசுகள்  உள்வாங்கிக் கொண்டதா என்று தெரியவில்லை. ஈழத்தில் புத்தகங்களை எரித்து வரலாற்றை அழிக்கிறது... தமிழகத்தில் நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதலை நிறுத்தி சமூகத்தை அறிவிலியாக ஆக்குகிறது. 

"சரி... ஏன் இப்போது இத்தனை மேற்கோள்கள். புத்தகங்களின் மகத்துவம் எங்களுக்குத்  தெரியும்... புரியும். ஆனால், ஒளியின் வேகத்தில் காலச் சூழல்கள் மாறிக் கொண்டிருக்கும் உலகமயமாக்கப்பட்ட இவ்வுலகத்தில், புத்தகங்களுக்காக எப்படி நேரம் ஒதுக்க... எங்கே சென்று புத்தகங்களைத் தேடிப் படிக்க...  பணி சார்ந்த சஞ்சிகைகளே மேஜையெங்கும் குவிந்திருக்கின்றன. இதைத்தாண்டி நாங்கள் எதைத் தேர்ந்தெடுத்து படிக்க...?” என்கிறீர்களா...  வெற்றிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் சூழ்நிலையில், உங்கள் கேள்வியின் அடர்த்தியான அர்த்தம் புரிகிறது. ஒவ்வொரு நிமிடமும் காட்சியில் நம் இருத்தலை தக்க வைத்துக் கொள்ள, நம்மை நிரூபிக்க நாம் அனைவருமே போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்; மறுப்பதற்கில்லை. ஆனால், தினம் தினம் நம்மை நிரூபித்தலில் நம் சுயம் தேய்மானம் அடைகிறது. ஒரு கட்டத்தில் அது இல்லாமலே போய்விடுகிறது. அந்த சுயத்தை காக்க, அதற்கு புடம் போட புத்தகங்கள் வேண்டும்.   

டெட்லைன்கள் மத்தியில் நாம் திணறும் ஒரு புதன்கிழமை புத்தகங்கள் குறித்தும்...  வாசித்தல் குறித்தும் நான் எழுத காரணம் அண்மையில் நான் படித்த புனைவு எழுத்தாளர் நீல் கெய்மெனின்  உரை. அவர், ’நம் எதிர்காலம் புத்தகங்களிலும், வாசித்தலிலும்... பகல் கனவு காணுவதிலும்தான் இருக்கிறது’ என்கிறார்.  இதில், ’நம் எதிர்காலம்’ என்று அவர் சொல்வது இந்தப் பூவுலகின் எதிர்காலம். அவரது உரையின் சாரத்தை  மிகச் சுருக்கமாக இங்கு பகிர்கிறேன். 

வன்மம் கரைய...

புத்தகம் “நான் (நீல் கெய்மென்) சில ஆண்டுகளுக்கு முன் நியூயார்க் சென்றபோது   தனியார் சிறைச்சாலைகள் குறித்த ஒரு விவாதம் எழுந்தது. எதிர்காலத்தில் தனியார் சிறைச்சாலைகளின் வளர்ச்சி எப்படி இருக்கும்? என விவாதிக்கப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் எத்தனை கைதிகள் இருப்பார்கள்... அவர்களுக்கு எத்தனை சிறைக்கொட்டகைகள் தேவைப்படும் என்றெல்லாம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு  அவர்கள் சிறிய வழிமுறையைத்தான் பின்பற்றினார்கள். அந்த வழிமுறை என்ன தெரியுமா...? வாசித்தல் பழக்கத்தைத்தான் ஆய்வு செய்தார்கள். ஆம், சமூகத்தில் பத்து, பதினோரு வயதில் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேருக்கு வாசித்தல் பழக்கம் இருக்கிறது...? குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாசிக்கிறார்கள்? என்றெல்லாம் கணக்கிடத் திட்டமிட்டார்கள். வாசித்தல் பழக்கம் இல்லாத குழந்தைகள் வழிமாற வாய்ப்பிருக்கிறது என்பது அவர்களின் கணிப்பு. சரியான கணிப்புதானே...?  எப்படி சொல்கிறீர்கள்... வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் தவறே செய்வதில்லையா...?  அப்படி அறுதியிட்டுச் சொல்லமுடியாதுதான். ஆனால், வாசிக்கும் பழக்கமுடையவர்கள் புனைவு படிக்கும்போது, அடுத்து என்ன, அடுத்து என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது. புதிய வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆர்வத்திலும்... புதியதை அறிந்துகொள்வதிலும்  மனதின் வன்மம் கரைகிறது”
ஆம்... வாசித்தலில் வன்மம் கரையும்! 

புதியதை படைக்க...

“சீனாவில்  2007- ம் ஆண்டு அறிவியல் புனைவு சம்பந்தமான மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்டேன். அப்போது சீன அறிவியலாளர்களிடம் கேட்டேன், ‘சீனாவில் அறிவியல் புனைக்கதை மாநாட்டுக்கு பல தசாப்தங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுதானே... இப்போது   இந்த மாநாட்டை ஒருங்கிணைக்க என்ன காரணம்...?’ என்று. அதற்கு அந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், “எளிமையான காரணம்தான்... சீனர்கள் எப்போதும் திறமைசாலிகள்...  உழைப்பாளிகள். நீங்கள் ஒரு திட்டத்துடன் வரும்போது அவர்களால் ஒரு பொருளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், புதுமையாக ஒரு விஷயத்தை அவர்களால் யோசிக்க முடியாது... கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், அவர்களால் கற்பனை செய்யமுடியாது. என்ன காரணமென்று கண்டறிய எங்கள் அறிவியலாளர்கள் குழுவை நாங்கள் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அனுப்பினோம்... அங்கு எங்கள் குழு கண்டறிந்த விஷயம், அம்மக்கள் அதிகமாக  ‘அறிவியல் புனைவு’ படிக்கிறார்கள். அதனால்தான், அவர்கள் கற்பனா சக்தி விரிவடைகிறது... புதிது புதிதாக கண்டுபிடிக்க முடிகிறது  என்பதைதாம்.”

ஆம்... வாசித்தல் புதிய படைப்புகளை உண்டாக்க வைக்கும்!

புத்தகம்

“குழந்தைகளை புத்திசாலியாக்க...”

 ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒருமுறை பெற்றோர்கள் இவ்வாறாகக் கேட்டார்கள், “உங்களைப் போல எங்கள் பிள்ளைகளும் அறிவியலாளராக... புத்திசாலியாக... என்ன செய்ய வேண்டும்...?”  அதற்கு ஐன்ஸ்டீன், “உங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வேண்டுமா...? அப்படியானால் அவர்களுக்கு கதைகள்  சொல்லுங்கள்... புனைவு படிக்க வையுங்கள்.  மேலும் மேலும் புத்திசாலியாக்க வேண்டுமா... மேலும் மேலும் புனைவு படைக்க வையுங்கள்” என்கிறார். 

ஆம்... வாசித்தல்...  உங்கள் குழந்தைகளை புத்திசாலியாக்கும்!
- இது நீல் உரையின் சாரம். 

நீல் சொல்வது உண்மைதானே...? நம் பிள்ளைகளை  சிறந்த குடிமகனாக்க... அறிவியலாளராக்க, படைப்பாளியாக்க  வாசித்தலின் சுவையைக் கற்றுத் தருவோம்... நாமும் அவர்களுடன் சேர்ந்து வாசித்து... வாசித்ததை விவாதிப்போம்!

ஊடகவியலாளர் அன்னா குயிண்ட்லென் சொல்லிய மேற்கோளுடன் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்...  ’புத்தகங்கள் விமானங்கள்; புத்தகங்கள் தொடர்வண்டி; புத்தகங்கள் சாலை... பயணமும் புத்தகம்தாம்... போய் சேரும் இடமும் புத்தகம்தான்! புத்தகங்கள்தான் எல்லாமும்’

 ஆம்... புத்தகங்கள்தான் எல்லாம்!

- மு. நியாஸ் அகமது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்