ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகார்... தேர்தலைத் தடுக்கும் சதியா?

ஆர் கே நகர்

மிழகத்தின் ஒட்டு மொத்த கவனமும் ஆர் கே நகர் நோக்கித் திரும்பி இருக்கிறது. வேட்பாளர்கள் வீதி, வீதியாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு புறம் தேர்தல் ஆணையமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. ஆக இப்போது, ஆர் கே நகர் தொகுதி ரணகளம் ஆகி இருக்கிறது.

புரளியா, உண்மையா?

இரண்டு பட்டுக் கிடக்கும் அ.தி.மு.க- சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. இதுவரை சந்தித்த இடைத்தேர்தல்களில் எல்லாம் ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க வெற்றி பெற்றே வந்திருக்கிறது. எனவே, இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் டி.டி.வி.தினகரன் இருக்கிறார்.

இந்த சூழலில்தான்  4-ம் தேதி இரவு முழுக்க தொகுதியில் பல இடங்களில் டி.டி.வி. தினகரன் ஆட்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தி.மு.க-வினர் புகார் தெரிவித்துள்ளனர். தினகரன் ஆட்கள் ஒரு ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் தருவதாக சொல்கின்றனர். பணப்பட்டுவாடா செய்தவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றிய தி.மு.க-வினர், இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். பணப்பட்டுவாடாவைத் தடுக்க முயன்றபோது எதிர்தரப்பினர் தாக்கியதால் காயம் அடைந்த தி.மு.க-வினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். பன்னீர்செல்வம் அணிக்கும், டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையே பல இடங்களில் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

ஆர்.கே நகர்

 

தேர்தல் தள்ளி வைப்பா?

மோதல், பணப்பட்டுவாடா நடப்பது போன்ற சூழலில் ஆர்.கே.நகரில் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எல்லா மட்டத்திலும் எழுந்துள்ளது. இந்தப் புரளியை கிளப்பி விட்டவர்களே டி.டி.வி தினகரன் தரப்பினர்கள்தான் என்றும் சொல்கிறார்கள். ஆர் கே நகர் தொகுதி இப்போதைக்கு நமக்கு சாதகமாக இல்லை என்று டி.டி.வி.தினகரனிடம் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே தேர்தலை நிறுத்துவதற்காக இது போன்ற பணப்பட்டுவாடா புகார்களை கிளப்பி விடுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். பணப்பட்டுவாடா செய்பவர்கள் எப்போதும் காதும், காதும் வைத்த மாதிரி ரகசியமாகச் செய்வார்கள். ஆனால், இப்படி வெளிப்படையாக பணப்பட்டுவாடா செய்யமாட்டார்கள். இதில் இருந்தே இது வேண்டுமென்றே நடைபெற்ற  நாடகம் என்றும் சொல்கின்றனர். எனினும் வெறும் புகார்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவாய்பில்லை என்று சொல்லப்படுகிறது.

வலுவான ஆதாரம் தேவை

இது  குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பேசினோம்.
"ஆர்.கே.நகரில் சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த போதுமான ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் இரவு நேரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அவர்கள் 5 பேரைப் பிடித்திருக்கின்றனர். புகார்கள் வந்த உடன் 5 நிமிடத்தில் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று உடனே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பணம் கொடுக்க முயற்சி செய்கின்றனர். கண்காணிப்பை தீவிரப்படுத்த தெருக்களில் பைக்கில் சென்று ரோந்து சுற்ற உள்ளனர். தொடர்ந்து இது போன்று பணம் கொடுப்பது குறித்து வரும் புகார்களால் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்படமாட்டாது. வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். தேர்தல் தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையர்தான் முடிவு எடுப்பார்" என்றார்.

பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்தி, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்கள். அதன்பின்னரே தேர்தல் தள்ளி வைக்கப்படுமா என்பது தெரியவரும்.

-கே.பாலசுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!