வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (06/04/2017)

கடைசி தொடர்பு:19:40 (08/04/2017)

நம்மாழ்வாரின் இறுதி உரையும்... நெடுவாசல், டெல்லி போராட்டங்களும்...! நம்மாழ்வார் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

 

 

“காவிரி பாசனப்பகுதிதான் தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை பேருக்கும் சோறு போடுது. வீரநாராயணம் ஏரியிலே காவிரித்தண்ணியை நிரப்பி, அங்கிருந்துதான் சென்னையிலே இருக்குறவன் தண்ணி குடிக்கிறான். கூட்டுக் குடிநீர் திட்டம்னு சொல்லி திருப்பூர்ல இருக்குறவன் காவிரித்தண்ணி குடிக்கிறான். ராமநாதபுரத்துல இருக்குறவன் காவிரித்தண்ணி குடிக்கிறான். மொத்தம் தமிழநாட்டுல இருக்குற மக்கள்தொகையிலே மூணுல ரெண்டு பேரு, காவிரிப் படுகையிலே வாழ்க்கை நடத்திக்கிட்டிருக்காங்க. இது, இவங்களுக்குப் பிசினஸ் எல்லாம் கிடையாது. பிசினஸா இருந்தா, இதை விட்டுட்டு என்னைக்கோ ஓடியிருப்பாங்க. தங்களோட தேவையைக் குறைச்சுக்கிட்டு, வீட்டுக்குத் தேவையானதை அதுல செஞ்சுக்கிட்டு காலம் தள்ளிக்கிட்டுருக்காங்க. மீத்தேன் எடுக்குற திட்டம் தஞ்சாவூர், திருவாரூர் பிரச்னை இல்லை. தமிழ்நாட்டுப் பிரச்னை. இந்தத் திட்டம் வந்தா தமிழ்நாடே சோறு இல்லாம, தண்ணி இல்லாம சுருண்டு பாலைவனமாப் போயிரும்” - இதுதான் தமிழகத்தின் வேளாண் திசைவழியைக் காட்டிய, இளைஞர்களைச் சூழலியலுக்காகப் போராட ஊக்கியாக இருக்கும் தமிழ் பெருங்கிழவர் நம்மாழ்வார் நிகழ்த்திய உரை. இதுதான் மீத்தேன் போராட்டக் களத்தில் அவரது இறுதி உரையும் கூட.    

நம்மாழ்வார்

நம்மாழ்வாரின் பூத உடல் இன்று நம்மோடு இல்லாமல் இருக்கலாம்... ஆனால், இந்த உரை எந்தச் சூழலில் நிகழ்த்தப்பட்டதோ... எந்த வார்த்தைகள் எந்தப் பொருளின் பின்னணியில் உச்சரிக்கப்பட்டதோ... அந்தச் சூழலும், பொருளும் இன்னும் அப்படியே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசவேண்டுமென்றால், அந்தப் பெருங்கிழவனின் காலத்துக்குப் பின்னால், சூழல் இன்னும் மோசமாகத்தான் ஆகி இருக்கிறது. நெடுவாசல், காவிரி டெல்டா மரணங்கள், டெல்லி ஜந்தர் மந்தர் எனக் காவிரியுடன் பின்னிப்பிணைந்த தமிழரின் வாழ்வு தூர்த்துப்போன நட்டாற்றில் நிற்கிறது. ‘காவிரிதான் எங்கள் வாழ்வு... காவிரிதான் எங்கள் வளம்... காவிரிதான் எங்கள் நாகரிகம்’ என தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக வாசலிலும்... டெல்லி ஜந்தர் மந்தரிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. 

சரி... இதற்கெல்லாம் என்ன தீர்வு...?. எளிமையான தீர்வு இருக்கிறது. அது நம்மாழ்வாரை முழுமையாகப் புரிந்துகொள்வது. முதலில் நெடுவாசல் மற்றும் டெல்லி போராட்டம் பின்னணியில் நம்மாழ்வாரைப் புரிந்துகொள்வோம்.

“மீத்தேனை ஆதரித்த வெண்தாடிக்காரர்!”

நம்மாழ்வார்

நம்மில் பெரும்பாலானவர்கள் புரிந்துகொண்டதுபோல அந்த வெண்தாடிக்காரர் மீத்தேனை எதிர்க்கவில்லை... சொல்லப்போனால் மீத்தேன் வேண்டுமென்றார். அவர் சொன்னது, ''இருக்கின்ற மீத்தேன் வாயுவை எடுக்காதீர்கள்... அதைப் புதிதாக உற்பத்தி செய்யுங்கள்'' என்றார். அதை எப்படி உற்பத்தி செய்யவேண்டுமென்ற வழிகளையும் தனது இறுதி உரையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.
அவர் சொன்னது இதுதான், “எல்லார் வீட்டிலேயும் மாடு இருக்குது. எல்லார் வீட்டிலேயும் சாணியோடத்தான் பழகிட்டுருக்கோம். காயம்பட்டதுனா அதுல சாணியை எடுத்துத் தடவுனா ரத்தம் ஒடுறது நின்னுப்போச்சு. சாணி மருந்தாவே இருக்குது, இந்தச் சாணியைப் புடிச்சு அருகம்புல் சொருகுனோம்னா அது கடவுளாவே ஆகிப்போச்சு. ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்துலேயும் வீடுகளுக்குப் பின்னால் சாண எரிவாயுக்கலன் போட்டுட்டே இருந்தாங்கன்னா, எல்லோருக்கும் மீத்தேன் வந்திரும். அது இப்படிப் பூமியிலே துளைச்சு எடுக்குறதைவிட மிக அதிகமா இருக்கும்”.

ஆனால், இதை எந்த அரசுகளும் விரும்புவதில்லை... விரும்பவும் செய்யாது. ஏனெனில், இந்தத் திட்டம் எளிமையானது, சாமான்ய மக்கந்த் தன்னிறைவாக்குவது. அரசுகள் எளிமைகளையும், உண்மைகளையும், மக்கள் தன்னிறைவாகுவதையும் எப்போதும் விரும்புதில்லை. எளிமையிலிருந்தும் உண்மையிலிருந்தும் பெரும்பணம் பண்ண முடியாது என்பது பெரும் நிறுவனங்களின் நலனை மட்டுமே விரும்பும் நம் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். அவர்கள் இந்த எளிய திட்டத்தை உதாசீனம் செய்தார்கள்... செய்கிறார்கள். அதனால்தான், மக்கள் போராட்டத்துக்குபின்னும், நெடுவாசலைத் தாரைவார்க்கத் துடிக்கிறார்கள்... ஹைட்ரோ கார்பன் திட்டதுக்காகக் கையெழுத்திடுக்கிறார்கள். 

“டெல்லி போராட்டமும்... நம்மாழ்வாரும்”!

நம்மாழ்வார், 'விவசாயிகள் அனைவரும் அரசியல் பழக வேண்டும், விழிப்படைய வேண்டும், போராட வேண்டும்' என்று விரும்பினார். ''விவசாயிகள் நல்வாழ்வில்தான் சமூகத்தின் எதிர்காலம் இருக்கிறது. அதனால் அவர்கள் நலனுக்காகச் தமிழ்ச்சமூகம் உடன் நிற்க வேண்டும்'' என்று பேசினார். இன்று நம்மாழ்வார் இருந்திருந்தால், நிச்சயம் அவர் நம் குடியானவர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தரில்தான் இருந்திருப்பார். அவர்களுடன் கோஷம் போட்டு இருப்பார்... ஆனால், அதே நேரம்... அங்கு விவசாயிகள் வைக்கும் சில கோரிக்கைகளையும் மாற்றி இருப்பார். ஆம், நம்மாழ்வார் நதிகள் இணைப்பு என்னும் ஏமாற்றுத் திட்டத்துக்கு எதிரானவர். அதற்குச் செலவு செய்யும் பெருந்தொகையை... உள்ளூர் நதிகளை... ஏரிகளை... குளங்களைப் புதுப்பிக்க பயன்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து பேசிவந்தவர். இன்று அவர் இருந்திருந்தால், நிச்சயம் அந்த விவசாயிகளுடன் உரையாடலை நிகழ்த்தி... இதைப் புரியவைத்திருப்பார். போராட்டத்தை இன்னும் வீரியமாக முடுக்கிவிட்டிருப்பார். 

“நாம் என்ன செய்யவேண்டும்?”

நம்மாழ்வார்சரி... நாம் என்ன செய்ய வேண்டும்? அந்தத் தமிழ்த் தாத்தா சொற்களைவிடச் செயலை விரும்பியவர். உண்மையில், அவரது பிறந்தநாளை அவருக்குப் பிடித்த வழியில் கொண்டாட வேண்டுமென்று விரும்புவோமாயின்... நாம் செயலில் இறங்க வேண்டும். ஆம், அந்தப் பெருங்கிழவர் மீத்தேனை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்று அனைவருக்குமான எளிய வழியைச் சொன்னார்தானே... அதை ஒரு சிறிய இடத்தில் செயல்படுத்திக் காட்ட வேண்டும். இயன்றால் நெடுவாசலிலேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும். இந்த எளிய திட்டத்தை அரசு செயல்படுத்திவைக்க அரசியல்வாதிகளுக்கு நிர்பந்தம் தரவேண்டும்

அடுத்து, காவிரிக்கான போராட்டம் ஏதோ தஞ்சாவூர்க்காரர்கள் போராட்டம் இல்லை என்று புரியவைக்க வேண்டும். சென்னைக்காரர்களும் காவிரிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் என்று புரியவைக்க வேண்டும். இதற்காக மக்களுடன் ஒரு தொடர் உரையாடலை நிகழ்த்த வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, நாம் நம் நுகர்வையும் குறைத்துக்கொள்ள வேண்டும்!

ஆம், நண்பர்களுடன் உரையாடும்போது நம்மாழ்வார், “நம்முடைய மேற்குத் தொடர்ச்சி மலையில் உயர்ந்திருந்த நெடுமரங்களையெல்லாம் சரித்துவிட்டு, குட்டைத் தேயிலையையும் காபிக்கொட்டையையும் பயிரிட்டு நமக்குப் பானமாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள். காடுகளைக் களைந்துவிட்டு மழை வரவில்லையென்று புலம்புகிறோம். இன்று உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் ஒவ்வொருமுறை தேநீர் பருகும்போதும் வெட்டிச் சரிக்கப்பட்ட மரங்களின் நினைவு, உங்கள் மண்டையில் பேரிடியாய் இறங்கவேண்டும்” என்றிருக்கிறார். 

இதை நாம் அப்படியே உள்வாங்கிக்கொள்ள வேண்டும்... ஆற்றின் அழிவில், மணல் கொள்ளையில்... நம் நுகர்வுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து, நுகர்வைக் கூடுமானவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும். 

முதல் பத்தியில் அவருடைய இறுதி உரையைக் குறிப்பிட்டிருந்தேன்தானே... அது எந்தச் சூழலில் நிகழ்த்தப்பட்டது என்று சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்... அந்த உரை நிகழ்த்தப்பட்டபோது,  அவர் தீவிரமான உடல்நலக் கோளாரில் போராடிக்கொண்டிருந்தார்.. உரை நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும்போதே அவர் முதுகில் இருந்த கட்டி உடைந்து ரத்தமாக வழிந்தது. ஆனால், அந்தப் பெருங்கிழவர் அதைப் பொருட்படுத்தவில்லை... அவர் எதை உண்மை, மக்கள் நலன் என்று நினைத்தாரோ... அதை அந்த வலிகளின் போதும் உரக்கப் பேசினார். எல்லாவாற்றையும்விட இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடம். ஆம், மக்களுக்காக உழைக்கும்போது எதிர்வரும் துயர்களைத் துச்சமாகப் புறந்தள்ளி முன்னேறிச் செல்லவேண்டும்.    

இவற்றைத்தான்... இவற்றை மட்டும்தான் அந்தப் பெருங்கிழவர் விரும்புவார்.

- மு. நியாஸ் அகமது

நீங்க எப்படி பீல் பண்றீங்க