வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (06/04/2017)

கடைசி தொடர்பு:17:39 (06/04/2017)

தீபாவுக்கு ஆர்.கே.நகரில் என்ன வரவேற்பு? அதிர்ச்சி ரியாக்‌ஷன்! #SpotReport

தீபா

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் இருக்கும் ஜெ.தீபா தம்மை ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால், தேர்தல் களத்தில் முக்கியமான போட்டியாளராக இருக்கிறாரா? என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 

தி.மு.க-வில் கருணாநிதி, முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் என்று வாரிசு அரசியல் பாரம்பர்யத்தை தமிழகம் ஏற்றுக்கொண்டது. ஆனால், அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர்., ஜானகி என்ற வாரிசு அரசியலை அ.தி.மு.க இன்றளவும் ஏற்றுக்கொண்டதில்லை. எம்.ஜி.ஆர் குடும்பத்துக்குத் தொடர்பே இல்லாத, அதே நேரத்தில் கட்சியில் கொள்கைபரப்புச் செயலாளர், மாநிலங்களவை எம்.பி என்று பல்வேறு பதவிகளை வகித்த ஜெயலலிதாவுக்குத்தான் அ.தி.மு.க-வின் தலைமைப் பதவி கிடைத்தது. மாநிலமும் அவரை அங்கீகரித்து முதல்வர் பதவியை அளித்தது.

சசிகலாவை எதிர்த்தவர்

ஜெயலலிதாவை அரசியல் வாரிசாக எம்.ஜி.ஆர் எப்போதும் அறிவிக்கவில்லை. அதே போல ஜெயலலிதாவும் தமது அரசியல் வாரிசு இவர்தான் என்று அறிவிக்கவில்லை. இப்படியாக அ.தி.மு.க-வுக்குள் வாரிசு அரசியல் என்றுமே எடுபட்டதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், ஊடகங்களுக்கு தீபா அளித்த பேட்டிகளில், சசிகலாதான் என்னை என் அத்தையிடம் இருந்து பிரித்து விட்டார் என்று குற்றம் சாட்டினார். சசிகலாவுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் என்ற வகையில் தீபா பார்க்கப்பட்டார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்துத்தான் பன்னீர் வெளியே வந்து சசிகலாவுக்கு எதிராகப் பேசுகிறார். சசிகலாவை எதிர்த்து தைரியமாக அரசியல் செய்கிறார் என்று ஜெ. தீபாவின் துணிச்சலைப் பாராட்டியவர்கள் பலர். மாவட்டங்களில் இருந்தெல்லாம் திரண்டு வந்த அ.தி.மு.க தொண்டர்கள் தீபாவைப் பார்க்க தி.நகர் வீட்டுக்கு வந்தனர். சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகப் பார்க்கப்பட்டவர். ஆனால், அந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதாவின் குரல்

சசிகலாவுக்கு எதிராக பன்னீர் குரல் கொடுக்க ஆரம்பித்த பின்னர், தீபாவுக்கான செல்வாக்கு குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில்  தீபா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கியபோது, அவருடன் அவர் கணவரே உடன் வரவில்லை. தமது அத்தை இரண்டு முறை வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக களத்தில் இருக்கிறார். தீபா பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அவரைப் பார்க்க கூட்டம் கூடுகிறது. பிரசாரத்தின் போது அத்தை விட்டுச் சென்ற பணிகளை செய்ய எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்கிறார்.  சசிகலாவையும், டி.டி.வி தினகரனையும் வறுத்தெடுக்கிறார். ஆனால், ஆர்.கே.நகர் களத்தில் அவரது இருப்பு எவ்வளவு தூரத்துக்கு வாக்காளர்களைக் கவர்ந்திருக்கிறது என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற கரிசனத்தோடு பார்க்கிறார்கள். ஜெயலலிதா மாதிரி இருக்கிறார், ஜெயலலிதா பேசுவது மாதிரியே இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். வாக்காளர்களை கவர்வதற்கு இது மட்டும் போதுமானதல்ல. ஆனால், அவர்கள் எல்லாம் ஜெ.தீபாவின் படகு சின்னத்துக்கு ஓட்டுப்போடுவார்களா என்பது சந்தேகமே. தீபாவின் பிரசாரத்தை பார்க்க வந்திருந்த சிலரிடம் தீபாவுக்கு ஓட்டுப்போடுவீர்களா? என்று கேட்டபோது, அவர்களின் சாய்ஸ் தீபாவாக இல்லை. பன்னீராகவோ, தினகரனாகவோ,மருதுகணேஷ் என இவர்களில் ஒருவர்தான் அவர்களின்  தேர்வாக இருக்கிறது.

துணை பாத்திரம்

சினிமாவில் ஒரு ஹீரோ, அவருக்கு எதிராக ஒரு வில்லன் மட்டுமே என்பது நிதர்சனமான உண்மை. மற்ற பாத்திரங்கள் எல்லாம் துணைபாத்திரங்கள் அல்லது காமெடி பாத்திரங்களாகவோ இருக்கும். ஜெ.தீபாவை பொறுத்தவரை அவர் ஒரு துணைபாத்திரமாகத்தான் இருக்கிறார். களத்தில் இருக்கிறார். ஆனால் முக்கிய போட்டியில் இல்லை  என்பதுதான் நிஜம். தேர்தல் முடிவை அவர் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்து அவரது அரசியல் எதிர்காலம் இருக்கலாம்.

-கே.பாலசுப்பிரமணி

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க