“திராவிட இயக்க ஆய்வு மையத்தை முடக்கிய திராவிட கட்சி!” - படபடக்கும் பேராசிரியர்கள்

ஆய்வு மையம்

சென்னை பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 2006-ம் ஆண்டு திராவிட இயக்க ஆய்வு மையத்தை அமைக்க அப்போதைய தி.மு.க அரசு அனுமதி அளித்தது. இதற்கு மாநில அரசு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 2.96 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால், என்ன நோக்கத்துக்காக இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டதோ அது நிறைவேறும் முன்பே மூடப்பட்டு விட்டது என்று பல்கலைக்கழகத்தின் செனட் குழுவில் வைக்கப்பட்ட தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது."திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கு பல்கலைக்கழக நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வு அறை இல்லை

திராவிடம் விதைக்கப்பட்ட மண்ணில் திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்துக்கு நேர்ந்த கதி ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதில் ஆய்வாளராக இருந்த  சிவபிரகாசத்திடம் பேசினோம். "2008 டிசம்பர் இறுதியில் மையம் செயல்படத் தொடங்கியது. நூலகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் அமைக்க 10 மாதங்கள் ஆகிவிட்டது. எங்களுக்கு ஆய்வுக்கான அறையே ஒதுக்கப்படவில்லை. அரசியல் அறிவியல் துறையில் ஒரு பகுதியில் நாங்கள் செயல்பட்டோம். 2010 மார்ச் வரைதான் பணியாற்றினோம். அப்போது துணைவேந்தராக இருந்த திருவாசகம் எங்களுடைய ஒப்பந்த காலத்தை நீடிக்கவில்லை. எங்கள் மீது அதிருப்தி இருந்திருந்தால், வேறு நபர்களை நியமித்து செயல்படுத்தி இருக்கலாம்.  
நீதிக்கட்சி காலம், சுயமரியாதை காலம், திராவிடர் கழகம், தி.மு.க என்று பிரித்து, நான் ஆய்வு மேற்கொண்டேன். எங்கள் ஒப்பந்த காலம் முடிவதற்குள் 3 புத்தகங்கள் வெளியிட்டோம். திராவிட ஆட்சிகாலத்தில் கோயில் நிலங்கள் என்ற தலைப்பில் புத்தகம் எழுதினேன்.

வறண்ட அரசியல்

ஆய்வு மையம் செயல்டாமல் போனதற்கு முதல் காரணம் முன்னாள் துணைவேந்தர் திருவாசகம். அவர் எங்கள் ஒப்பந்தத்தை நீடித்திருந்தால், ஆய்வு மையம் செயல்பாட்டுக்கு வந்திருக்கும். அதே நேரத்தில் அரசு ஒதுக்கிய நிதியை திருப்பித் தரவில்லை. அடுத்து துணைவேந்தராக வந்த தாண்டவனிடம் இது குறித்துப் பேசினேன். தி.மு.க ஆட்சியின் போது தொடங்கப்பட்டது என்பதால், தொடர்ந்து செயல்பட இந்த அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிந்தது. திராவிட இயக்கம் குறித்து போதிய இயக்க அறிவு அவர்களுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். திராவிட அரசியல் பண்ண வேண்டும் என்றால், பெரியார், அம்பேத்கர்  உள்ளிட்ட தலைவர்கள் எப்படி இயங்கினார்கள் என்றெல்லாம் தத்துவார்த்த ரீதியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெறும் அரசியல், வறண்ட அரசியல் பண்ண ஆரம்பித்து விட்டனர். இதனால்தான் திராவிட இயக்கத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லாம் வந்தார்கள். தத்துவ வறட்சி ஏற்பட்டு விட்டது" என்றார் வருத்தத்துடன்.

அரசாங்கமே இல்லை

சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணனிடம் பேசினோம். "திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்தை மட்டுமல்ல. சென்னைப் பல்கலையில் இதுபோல நிறைய மையங்களை தொடங்கி மூடியிருக்கிறார்கள். ராஜிவ் காந்தி மையம், மகாத்மா காந்தி மையம் என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். பெயரளவில் தொடங்கி விட்டு, அதற்கான செலவுகளை மட்டும் காண்பித்து விட்டு, பின்னர் ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்கள்.  சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளுக்கு உரிய கவனம் செலுத்துவதில்லை. கிராம வளர்ச்சி என்ற ஆராய்ச்சிப் பிரிவுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவில் இருந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்தனர். ஆனால், முறையான ஆய்வுகள் ஏதும் நடக்காமலேயே வெறும் கணக்கு மட்டும் காட்டி விட்டனர். தமிழ்நாட்டில் இப்போது அரசாங்கமே இல்லை. சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் என யாருமே இல்லை. திராவிட இயக்க ஆய்வு மையம் தி.மு.க ஆட்சியின் போது தொடங்கப்பட்டது என்பதால்தான் இப்போது அதனை செயல்படுத்தாமல் விட்டுவிட்டனர்" என்றார்.

-கே.பாலசுப்பிரமணி    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!