வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (07/04/2017)

கடைசி தொடர்பு:08:26 (07/04/2017)

உடல்நிலை பாதிப்பு, சிங்கப்பூர் செல்லும் விஜயகாந்த்..! கலக்கத்தில் கட்சியினர்

விஜயகாந்த்

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் (சில கட்சிகளைத் தவிர) தங்களுடைய வேட்பாளர்களைக் களமிறக்கி, தீவிரமாய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜெயலலிதா பாணியில் ஆர்.கே.தொகுதிக்குத் தன் கட்சி சார்பில் முதன்முதலாக வேட்பாளரை அறிவித்தவர் விஜயகாந்த் தான். அப்படி அறிவித்த விஜயகாந்த் இதுநாள்வரை அந்தத் தொகுதிக்குச் சென்று அவருடைய வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவில்லை. ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களின் பிரசாரம் அனலைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், பி.ஜே.பி-யின் மாநிலச் செயலாளர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் களத்தில் இறங்கிப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தே.மு.தி.க தரப்பிலான பிரசாரம் மட்டும் கலையிழந்து காணப்படுகிறது.அத்துடன் அந்தக் கட்சியின் தொண்டர்களும் வருத்தத்துடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதுதான் என்கின்றனர், அவரது நெருங்கிய வட்டாரத்தினர்.

பிரேமலதா பேச்சு! 

உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி நள்ளிரவு, விஜயகாந்த் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வதைப்போல இந்த ஆண்டும் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்தக் கட்சியின் அறிக்கையில் சொல்லப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் விஜயகாந்த தங்கிய நாட்கள் அதிகரித்த நிலையில்... மருத்துவப் பரிசோதனைக்கு இத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வார்களா என்ற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. பின்னர், விஜயகாந்துக்குச் சிறுநீரகப் பாதிப்பு இருப்பதாகவும்,அதற்கான சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாயின. அதனால், ''விஜயகாந்த வீடு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்துக்கு வரமாட்டார்'' என்றும் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு நிகழ்வு ஒன்றில் பேசிய பிரேமலதா, "ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்துக்கு விஜயகாந்த வருவார்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த வீடு திரும்பினார். தற்போது ஆர்.கே.நகர், இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ள நிலையில், விஜயகாந்த் பிரசாரத்துக்கு எப்போது செல்கிறார் என்பது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.இதனால், அவர் களத்துக்கு வருவாரா... மாட்டாரா என்ற கலக்கம் கட்சியின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. 

விஜயகாந்த்

விஜயகாந்த் வருவார்! 

இதனால், அந்தத் தொகுதியில் ஒரு தொய்வு ஏற்பட்டிருப்பதாக அங்குள்ள தே.மு.தி.க பிரமுகர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள், ''தற்போது தே.மு.தி.க சார்பில் முக்கியப் பிரமுகர்களாக விஜயகாந்த் மனைவியான பிரேமலதாவும், அவரது மைத்துனரான சுதீஷுமே பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும், 'பிரசாரத்துக்கு விஜயகாந்த் வருவார்' என்று சொல்லி வருகிறார்கள். ஆனால், அவர் களத்துக்கு வரும் தேதி குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். அவர், வரும் 8 மற்றும் 9-ம் தேதிகளில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்'' என்றனர். 

சிங்கப்பூர் செல்கிறார்! 

''விஜயகாந்த் நிச்சயம் பிரசாரத்துக்கு வருவார்'' என்று நம்பிக்கொண்டிருக்கும் அந்தத் தொகுதி தே.மு.தி.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "அவருக்குச் சிறுநீரகக் கோளாறு இருப்பதாக சொல்கிறார்கள். அந்தத் தகவலை முழுமையாகச் சொல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆர்.கே.நகர் தொகுதிப் பிரசாரத்துக்கு விஜயகாந்த் வருவது சந்தேகம்தான். மருத்துவமனையில் இருந்து வந்து 3 நாள்கள்தான் ஆகின்றன. மருத்துவர்கள், 'அவருக்கு ஓய்வு தேவை' என்று கூறியுள்ளனர். அப்படி இருக்கும்போது, அவர் எப்படி ஆர்.கே.நகர் பிரசாரத்துக்கு வருவார் என்று தெரியவில்லை. ஆனால் இந்த மாத இறுதியில், அவர் சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்காகச் செல்கிறார்.''

ஆர்.கே.நகர் தொகுதியில், அந்தக் கட்சிக்கு.. மக்கள் செல்வாக்கு குறைந்துவிட்டதைத் தெளிவாகக் காணமுடிகிறது. அவர் மீதுள்ள நம்பிக்கை மக்களிடையே குறைந்துவருகிறது. ரசிகர்கள் மன்றத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக நின்றவர்கள் எனப் பலரும் அவரை நம்பி இருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும் வேதனைக்குரியது'' என்றனர். 

- கே. புவனேஸ்வரி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்