16 கோடி பயனர்களின் தகவல்களைப் பகிரும் வாட்ஸ்அப்..! என்ன செய்யும் உச்சநீதிமன்றம்?

வாட்ஸ்அப் தகவல்களை ஃபேஸ்புக்குடன் பகிர்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது. உங்களுக்கும் இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துபவராக இருந்தாலே போதும்; இந்த வழக்கு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம் இது நம் பாதுகாப்பு பற்றியதும் கூட.

வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்

என்ன பிரச்னை?

2010-ல் துவங்கப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனமானது உலகெங்கும் வெகு விரைவாக வாடிக்கையாளர்களை சம்பாதித்தது. பிறகு இதனை 19 பில்லியன் விலைகொடுத்து வாங்கியது ஃபேஸ்புக். ஆனால் அதன்பிறகும் கூட, வாட்ஸ்அப்பின் சேவை மற்றும் பிரைவசி பாலிசியில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் முதல்முறையாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வாட்ஸ்அப்பின் பிரைவசி பாலிசியில் மாற்றங்களை செய்வதாக அறிவித்தது அந்நிறுவனம். அதாவது வாட்ஸ்அப் பயனாளர்களின் மொபைல் எண், கடைசியாக வாட்ஸ் அப் பயன்படுத்திய நேரம் போன்ற உள்ளிட்ட தகவல்களை, ஃபேஸ்புக் மற்றும் அதன் குழும நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ளப் போவதாக அதில் கூறியிருந்தது. இதன் மூலம் ஃபேஸ்புக்கில் உங்களுக்கு சரியான நண்பர்களை பரிந்துரைக்கவும், போலியான நபர்களை தடுக்க முடியும் எனவும் வாட்ஸ்அப் கூறியிருந்தது. 

இந்த தகவல் பரிமாற்றத்திற்கு உடன்படுபவர்கள் மட்டுமே இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும் என்றும், இதற்கு உடனே சம்மதம் தெரிவிக்காதவர்களுக்கு, வாட்ஸ்அப் பயன்படுத்த கடைசி 30 நாட்கள் அவகாசமும் அளித்தது அந்நிறுவனம். இன்று நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுடைய இந்த தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் பகிரப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.  இது உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் பொருந்தும். இதனால் இங்கிலாந்து, ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல நாடுகளில் எதிர்ப்புகள் கிளம்பின. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் வாட்ஸ் அப் பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்வதை நிறுத்தி வைத்தது வாட்ஸ்அப். அதேபோல இந்த முடிவு தேசத்தின் தகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறுவதாக இருக்கிறது எனக் கூறி, தகவல்களை பரிமாறிக்கொள்ள தடை விதித்தது ஜெர்மனியின் தனியுரிமை கண்காணிப்பு அமைப்பு (Germany's privacy watchdog). அத்துடன் ஏற்கெனவே பரிமாறிக்கொண்ட தகவல்களை அழிக்கவும் உத்தரவிட்டது. ஆனால் இந்த நாடுகளை விடவும் அதிக மக்கள் தொகையும், வாட்ஸ்அப் பயனாளர்களையும் கொண்ட இந்தியாவில், இது குறித்த எவ்வித எதிர்ப்பும், கண்டனமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அமைப்பிடம் இருந்து எழவில்லை என்பது அதிர்ச்சிக்குரிய விஷயமாகும்.

உச்சநீதிமன்றம்

மாணவர்களின் சட்டப் போராட்டம்:

எனவே இதனை எதிர்த்து கர்மன்யா சிங் சரீன் மற்றும் ஸ்ரேயா சேத்தி ஆகிய இரு மாணவர்களும் கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். மக்களின் தனிப்பட்ட விஷயங்களின் பாதுகாப்பு குறைபாடுகளைக் கருத்தில் கொண்டும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாக இருப்பதாகவும் மற்றும் உயர்நீதிமன்றம் இது தொடர்பான சட்ட வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியிருந்தனர். இதில் விளக்கம் அளித்த வாட்ஸ்அப் நிறுவனமானது 'பயனாளர்களின் பெயர் மற்றும் மொபைல் எண்களைத் தவிர, அவர்களது சொந்த செய்திகள், புகைப்படங்கள் போன்றவை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளமாட்டோம். வாட்ஸ்அப் பயன்படுத்துவது மக்களின் சுய விருப்பம் சார்ந்தது' என விளக்கம் அளித்திருந்தது. இதனை விசாரித்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் வாட்ஸ்அப் தனது புதிய பிரைவசி பாலிசியை செப்டம்பர் 25-ம் தேதி முதல் அமல்படுத்த அனுமதி அளித்தது. அத்துடன் வாட்ஸ்அப்பை அன் இன்ஸ்டால் செய்த பயனாளர்களின் தகவல்களை வாட்ஸ்அப்பின் சர்வர்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும், செப்டம்பர் 25-ம் தேதிக்கு முந்தைய வாட்ஸ்அப் பயனாளர்கள் தகவல்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் கூறியது. ஆனால் இதில் திருப்தியடையாத இரு மாணவர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.கெஹர் , 'நீங்கள் வாட்ஸ்அப் சேவையையும் பயன்படுத்த வேண்டும்; அதே சமயம் உங்கள் பிரைவசியையும் பாதுகாக்க வேண்டும் என்றால், நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து விலகி விடுங்கள். டெலிபோன் சேவைக்கு நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள். அதனால் உங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் இதில் நீங்கள் பணம் செலுத்துவதில்லை. அதுவும் தனியார் சேவை." என்றனர். ஆனால் இதனை மறுத்து வாதிட்ட, வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, 'இந்தியாவில் சுமார் 155 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் ஆனது டெலிபோன் சேவையைப் போல, மக்கள் அதிகம்பேர் பயன்படுத்தும் சேவையாகும். ஒருவேளை டெலிபோன் சேவைகள் பணம் செலுத்தும் சேவை என்றாலும் கூட, அரசின் அனுமதி இன்றி, டெலிபோன் அழைப்புகளில் குறுக்கீடு செய்தால், அது சட்டவிரோதம் என ட்ராய் சொல்கிறது. ஆனால் இந்த வாட்ஸ்அப் விஷயத்தில் ட்ராய் எதுவும் செய்யவில்லை. அரசு ஆனது மக்களின் அடிப்படை உரிமைகளை சட்டவிதி 19-ன் கீழ் பாதுகாக்க வேண்டும். 155 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த சேவையை இன்னும் முறைப்படுத்தாமல் இருக்கலாமா? ' என வாதிட்டார். பிறகு இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறி, மத்திய அரசு, ட்ராய், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். பிறகு மத்திய அரசின் கருத்தைக் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், தற்போது இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வரும்  18-ம் தேதி துவங்கவிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பலபேரின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய விஷயம் என்பதால், இதனை மிக முக்கியமான வழக்காகக் கருதுகிறது உச்சநீதிமன்றம்.

வாட்ஸ்அப்

சட்ட விதிமுறைகள் வேண்டும்:

பிறநாடுகளில் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்து ஆராய்ந்து வரும் நிலையில், இந்தியாவில் இதுகுறித்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் விரைவில் இதுபோன்ற தகவல் தொடர்பு சேவைகளை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்படலாம் எனத் தெரிகிறது. எனவே மற்ற நாடுகளில் இருப்பது போலவே இங்கும், தனிநபர்களின் தகவல்களை கையாளவும், பாதுகாக்கவும் போதுமான சட்ட விதிமுறைகளும், அமைப்புகளும் காலத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட வேண்டும். அதுவே நல்ல டிஜிட்டல் இந்தியாவிற்கான அடையாளமாக இருக்கும்.

- ஞா.சுதாகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!