வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (07/04/2017)

கடைசி தொடர்பு:08:57 (07/04/2017)

''மைல் கற்களில் இந்தி மொழி எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை'' - சர்ச்சையைக் கிளப்பும் திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

கொதிக்கும் வெயிலில், தலைநகர் தார்ச்சாலையில், விவசாயிகள் உருளுகிறார்கள், தலைகீழாக நிற்கிறார்கள், கை - கால்களைக் கட்டிக்கொண்டு மத்திய அரசை நோக்கிக் கதறுகிறார்கள். ஆனால், மத்திய அரசோ சட்டங்களையும் விதிகளையும் சொல்லி தட்டிக்கழிப்பதோடு முந்தைய ஆட்சியாளர்களை உதாரணம் காட்டித் தப்பிக்கவும் செய்கிறது. இந்த நிலையில், தமிழகத்தின் தற்போதைய பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது...

''டெல்லியில், போராடிக்கொண்டிருக்கிற விவசாயிகளை சந்தித்துப் பேசும் ராகுல்காந்தியும், திருநாவுக்கரசரும் நேரடியாக கர்நாடகத்திடம் பேசி காவிரித் தண்ணீரை வரவழைத்துத் தந்திருக்க வேண்டியதுதானே? என்று பி.ஜே.பி தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்களே...?''

''பொறுப்பில் இருப்பவர்கள் பேசுகிற பேச்சா இது? இதுவே கர்நாடகத்தில் பி.ஜே.பி ஆட்சி செய்துகொண்டிருந்தால் மட்டும் இவர்கள் பேசி காவிரித் தண்ணீரை வாங்கித் தந்துவிடுவார்களா? பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கோ, நியாயத்தை செயல்படுத்துவதற்கோ உண்டான வழிவகைகளை செய்யாமல், இப்படி குதர்க்கமாகப் பேசிக்கொண்டிருக்கக்கூடாது.

வடஇந்தியாவில், பி.ஜே.பி ஆட்சி செய்துவரக்கூடிய மத்தியப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய மாநிலங்களில்கூட தண்ணீர் பிரச்னை இருக்கிறது. அமித்ஷாவே அவர்களைக் கூப்பிட்டு, 'நீ தண்ணிரை விட்டுக்கொடுத்துடு', 'நீ வாங்கிக்கோ'னு சொல்லிப் பிரச்னையைத் தீர்த்துடுவாருன்னா அந்தப் பிரச்னை ஏன் உச்ச நீதிமன்றத்துல இருக்கு?

மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதல்ல பிரச்னை. அந்தந்த மாநில உரிமைகளைக் காக்கவேண்டியது பொதுவாக இருக்கக்கூடிய மத்திய அரசாங்கம், தனிப்பட்ட ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம்தான். இவ்வளவு பேசுகிற மத்திய அரசே, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருக்கிறதே... அப்படி வாரியம் அமைப்பதில் இவர்களுக்கு என்னதான் பிரச்னை? அவர்கள் சொல்கிறபடியே பார்த்தாலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. தமிழகத்திலும் பி.ஜே.பி., ஆட்சியில் இல்லை. அப்படியென்றால், உச்ச நீதிமன்றம் சொன்னதுபோல் மேலாண்மை வாரியத்தை அமைத்து பிரச்னையைத் தீர்க்க வேண்டியதுதானே...? ஏன் அமைக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்? அப்படி வாரியம் அமைத்தால், கர்நாடகத்தில் பி.ஜே.பி செல்வாக்குப் போய்விடும்... எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்கமுடியாது என்ற உள்நோக்கத்தோடுதானே வாரியம் அமைக்காமல் காலம் கடத்துகிறார்கள்.

ராகுல்காந்தி

''நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுதப்படுவது, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போதே அரசாணை எழுதப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறாரே...?''

'' 'இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை இந்தி திணிக்கப்படமாட்டாது' என்று ஜவஹர்லால் நேருவே வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதுதான் இத்தனைகாலமும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது. விருப்பப்படுகிறவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தியைப் படித்துக்கொள்ளலாம். இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் படித்துக்கொள்ளலாம்; அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அலுவல் மொழியாகவோ, கட்டாயமாகவோ இந்தி திணிக்கப்படக்கூடாது என்பதுதான் தமிழ் மக்களின் விருப்பம். தமிழகக் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் எனது விருப்பமும் அதுதான். 

தனிப்பட்ட முறையில், என்னுடைய கருத்து என்னவென்றால், நெடுஞ்சாலை மைல் கற்களில் திருக்குறளோ அல்லது சமஸ்கிருத ஸ்லோகமோ எழுதிவைக்கப்படுவது இல்லை. எந்த ஊருக்கு எத்தனை கிலோமீட்டர் தூரம் என்ற விவரங்கள் மட்டும்தான் அதில் இருக்கும். எனவே, ஊர் பெயரை முதலில் வட்டார மொழியில்தான் குறிப்பிடவேண்டும். அதாவது, நம் மாநிலத்தைப் பொருத்தவரையில் தமிழில் குறிப்பிட வேண்டும். அடுத்ததாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் வந்து செல்வதால், ஆங்கிலத்திலும் குறிப்பிடலாம். இப்போது ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா புண்ணியஸ்தலங்களுக்கு நிறைய வடமாநிலத்தவர்கள் வந்து போகிறார்கள் என்கிறபோது, மூன்றாவதாக இந்தி மொழியிலும் ஊர் பெயர்களை எழுதி வைக்கலாம் என்பதுதான் என்னுடைய வாதம். இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பலாம். ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் நிறைய வட மாநிலத்தவர்கள் வருகிறார்கள். அதில், மற்ற மொழிகளைப் படிக்கத் தெரியாத மக்கள் அதிகம் இருப்பார்கள். எனவே, அவர்களுக்குத் தெரிந்த இந்தி மொழியை எழுதி வைத்திருந்தால், எளிதாகப் படித்துத் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படும். மற்றபடி ரோட்டில் மைல் கற்களில் இந்தியை எழுதி வைத்துவிட்டதாலேயே தமிழ் நாட்டில் இந்தி நடைமுறை மொழியாக மாறி தமிழை அழித்துவிடும் என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழ் மொழியை எந்த மொழியாலும் அழிக்கமுடியாது!''

மைல் கல்

''சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்கிறீர்களா?''

''தமிழ்நாட்டில் தமிழ் மொழிதான் இருக்கவேண்டும். இந்தி மொழி இருக்கலாம் என்று நான் சொல்வது மைல் கற்கள் வரையில் மட்டும்தான். மற்றபடி பாடத்திட்டங்கள், அலுவல் விஷயங்களில் மற்ற மொழித் திணிப்புகளை நான் வன்மையாகவே எதிர்க்கிறேன். நேருவின் உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும்.'' என்று அழுத்தமாக முடித்தார் திருநாவுக்கரசர்.

-த.கதிரவன்