நாற்பதாண்டு கால நட்புக்கு விதைபோட்ட ராஜகுமாரி திரைப்படம்... நுாற்றாண்டு நாயகர் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் - 27 | This Is How MGR and Karunanidhi became best Friends: Life History of MGR : Episode 27

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (07/04/2017)

கடைசி தொடர்பு:17:05 (07/04/2017)

நாற்பதாண்டு கால நட்புக்கு விதைபோட்ட ராஜகுமாரி திரைப்படம்... நுாற்றாண்டு நாயகர் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் - 27

எம்.ஜி.ஆர்

'ராஜகுமாரி' திரைப்படம் எம்.ஜி.ஆர் வாழ்வில் மட்டுமல்ல எம்.ஜி.ஆரின் எதிர்கால அரசியலில் அவரோடு பயணித்த பிரபலத்துக்கும் சினிமா வாயிலை திறந்துவிட்ட படம். படத்தின் இயக்குனராக ஏ.எஸ்.ஏ சாமிக்கு கதை - வசனத்தில் உதவியாக இருந்து அந்த படத்தின் பாட்டுப் புத்தகங்களில் 'உதவி ஆசிரியர்' என குறிப்பிடப்பட்ட அந்த 'பிரபலமும்' இந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

திராவிடர் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த தட்சணாமூர்த்தி என்ற அந்த இளைஞர் மிக இளம்வயதில் பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். அரசியல் ஆர்வத்தோடு எழுத்துப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் 1940 ம் ஆண்டு. தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற நிதிக்காக முதன்முதலாக 'பழனியப்பன்'  நாடகத்தை எழுதினார். இந்த நாடகத்தின் அரங்கேற்றம் நடந்த அன்று பெரு மழையின் காரணமாக கூட்டம் வரவில்லை.

நாடகத்திற்காக 200 ருபாய் செலவிட்டிருந்த நிலையில் வசூலானது வெறும் 80 ரூபாய் மட்டுமே. மீதி 120 ரூபாய்க்காக நாடகம் நடந்த அன்றே கடன்காரர்கள் நாடக கொட்டகையை முற்றுகையிட்டு பிரச்னை கிளப்பினர். அன்று அந்த சிக்கலிலிருந்து அவரைக் காப்பாற்றியவர்கள் திராவிட நடிகர் கழகத்தினர். தங்கள் மன்றத்திற்காக 'பழனியப்பன்' நாடகத்தின் உரிமையை நுாறு ரூபாய் விலை கொடுத்து பெற்று 'சாந்தா' என்ற பெயரில் தொடர்ந்து அவர்கள் நடத்த ஆரம்பித்தனர். இதனால் தொடர்ந்து தட்சணாமூர்த்திக்கு நாடகத்தின் மூலம் வருவாய் கிடைக்க ஆரம்பித்தது. இந்த நாடக வருவாய் அவருக்கு எழுத்துப்பணியின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ந்து நாடகங்களை எழுத தலைப்பட்டார். 'பழனியப்பன்' என்ற அந்த நாடகம் 'நச்சுக்கோப்பை' என்ற பெயரில் பல வருடங்கள் நடத்தப்பட்டது. நாடகத்தை வாங்கிக்கொண்ட திராவிட நடிகர் கழகம் அதில் எழுத்தாளர் தட்சணா மூர்த்தியும் நடிக்க வேண்டும் என வற்புத்தினர்.

எம்.ஜி.ஆர்

1942 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா நடத்திவந்த 'திராவிட நாடு' இதழில் 'இளமைப் பலி' என்ற இவரது கட்டுரை வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூரில் நபிகள் நாயகம் விழாவுக்கு வந்த அண்ணா 'இளமைப்பலி' எழுதிய எழுத்தாளரை காண விரும்பி, அவரை அழைத்து வரச் செய்தார். நடு வகிடெடுத்து வாரிய தலை, அரும்புமீசை, கண்களில் ஓர் கனல், பேச்சில் தெளிவு என தட்சணாமூர்த்தியை நேரில் கண்ட அண்ணா அவரை பாராட்டியதோடு எழுத்துப்பணியோடு படிப்பிலும் கவனம் செலுத்தச் சொன்னார்.

ஆனால் தட்சணாமூர்த்திக்கு எழுத்தின் மீதுதான் ஆர்வம். இதே ஆண்டில் தான் “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரால் ஒரு நிறுவனம் தொடங்கிய தட்சணாமூர்த்தி 'முரசொலி' என்ற மாத இதழை துவக்கினார். அதில் 'சேரன்' என்ற பெயரில் புரட்சியான பல கருத்துக்களுடன் கட்டுரைகள் எழுதினார்.

28.5.1944 திருவாரூரில் ‘பழனியப்பன்’ நாடகம் நடந்தபோது, திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார், முரசொலி ஏட்டைப் பாராட்டியதோடு 'மிகச்சிறந்த பணி' என்று தட்சணாமூர்த்தியை தட்டிக்கொடுத்தார். பெரியாருடன் நட்பு ஏற்பட்டபின் தொடர்ந்து அவரது கூட்டங்களில் கலந்து கொண்டு பேசத் துவங்கினார் தட்சணாமூர்த்தி. 

இதனையடுத்து தட்சணாமூர்த்தியின் பகுத்தறிவுப்பற்று, எழுத்துத்திறமையைக் கண்டுகொண்ட பெரியார் ஈரோட்டிலிருந்து வெளியிட்டு வந்த தன் குடியரசு பத்திரிகையில் அவரை உதவி ஆசிரியராக பணிக்கு சேர்த்துக்கொண்டார். 

கருணாநிதி1946 ஆம் ஆண்டின் மத்தியில் குடியரசு பத்திரிகையில் பணியாற்றியபடி நேரடியாக பெரியாரிடம் பயிற்சிபெற்றுவந்த தட்சணாமூர்த்திக்கு கட்சிப்பணி, எழுத்துப்பணி இவற்றோடு சினிமாத்துறை மீதும் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. அந்நாளில். அண்ணா, பெரியார் இவர்களுடனான நட்பினால்  சினிமா சார்ந்த சிலரின் நட்பும் கிடைத்தது. அவர்களில் ஒருவர்தான் இயக்குனர் ஏ.எஸ்.ஏ சாமி. தட்சணாமூர்த்தியின் எழுத்தாற்றலை நன்கு அறிந்தவரான சாமிக்கு, 'ராஜகுமாரி' படத்தயாரிப்பின்போது தன்னுடன் பணியாற்ற ஒரு உதவியாளர் தேவைப்பட்டது. அவருக்கு சட்டென நினைவுக்கு வந்தவர் தட்சணாமூர்த்தி. இதையடுத்து ஈரோட்டிலிருந்த அவருக்கு உடனே புறப்பட்டு வரும்படி கடிதம்  எழுதினார் சாமி. சினிமா ஆசையில் இருந்த தட்சணாமூர்த்தி, கடித விபரத்தை தயங்கித் தயங்கி பெரியாரிடம் சொல்ல,  ஒரு இளைஞனின் சினிமா ஆசையை தகர்க்க விரும்பாமல் அவரை வழி அனுப்பிவைத்தார் அவர். பெட்டிப் படுக்கையுடன் கோவை வந்துசேர்ந்தார் தட்சணாமூர்த்தி. 

கோவையில் நிரந்தரமாக வந்து தங்கி ராஜகுமாரியின் இயக்குனர் ஏ.எஸ்.ஏ சாமிக்கு உதவியாக கதைவசனம் எழுத ஆரம்பித்த தட்சணாமூர்த்தி என்ற அந்த அரும்பு மீசை இளைஞர் வேறு யாருமல்ல; தமிழ்த்திரையுலகில் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதி வசன நடையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய, பிற்காலத்தில் அரசியல் உலகிலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டிய கலைஞர் கருணாநிதி

புகழ்பெற்ற கதை வசனகர்த்தாவாக பின்னாளில் ஆனபோது கருணாநிதி தான் கதைவசனம் எழுதும் படங்களின் படப்பிடிப்புக்கு போய் அங்கு ஆலோசனைகள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அன்றைக்கு புதுமுகமாய் இருந்ததால் அந்த வழக்கத்தை கடைபிடிக்கவில்லை. அதனால் எம்.ஜி.ஆர் கருணாநிதி இருவரும் நேரடிப் பரிச்சயம் இக்காலத்தில் உருவாகவில்லை. அரிதான சந்தர்ப்பங்களில் ஒருவரைப்பற்றி ஒருவர் கேள்வியுற்றது மட்டுமே நடந்தது. ஆனால் படத்தின் வசனங்களில் ஈர்க்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், கருணாநிதியின் எழுத்துத்திறமையை மற்றவர்களிடம் சொல்லிப் பாராட்டியதோடு அவர் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

'அரசியல் பங்காளி' கருணாநிதி மட்டுமல்ல, தன் வாழ்வில் பல முக்கிய திருப்பங்களுக்கு காரணமாகப்போகும் முக்கிய மனிதர்களை 1940 களின் பிற்பகுதியில்தான் எம்.ஜி.ஆர் சந்தித்தார். அவரது அரசியல் ஆசான் அண்ணாத்துரை, வாழ்க்கைத்துணைவி வி.என்.ஜானகி, திரையுலகப் போட்டியாளர் சிவாஜி கணேசன்... இப்படி தன் வாழ்வில் இடம்பெறப் போகும் மனிதர்களை சந்தித்தது இந்த காலகட்டத்தில்தான்.  

அடுத்தடுத்து இவர்களுடனான எம்.ஜி.ஆரின் சந்திப்புகளும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் வெகு சுவாரஸ்யமானவை...

- எஸ். கிருபாகரன்  

                           இந்த தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்