அண்ணா சந்தித்த முதல் தேர்தலும்... அண்ணா வழி வந்தவர்களின் ஆர்.கே.நகர் தேர்தலும்!

அண்ணா, தினகரன்

2009-ம் ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, தேர்தலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தினார் அழகிரி. இதைச் சமாளிக்க முடியாமல் கதறின மற்ற கட்சிகள். இடைத்தேர்தல்கள் என்பது வெறும் தேர்தலாக இல்லாமல் திருவிழாக்களாக பார்க்கப்பட்டது திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பின்னர்தான். தி.மு.க.வின் இந்த வியூகத்தால் அடுத்தடுத்து நடந்த இடைத்தேர்தல்களை புறக்கணித்தன எதிர்க்கட்சிகள். வேறு வாய்ப்பே இல்லாமல், ஆளுங்கட்சித் தரப்பே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றது.

ஒரு இடைத்தேர்தலுக்கு இத்தனை பணத்தை வாரி இறைப்பார்களா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தி, 'திருமங்கலம் ஃபார்முலா' என இடைத்தேர்தலுக்கு புதிய ஃபார்முலாவை உருவாக்கியது தி.மு.க. இப்போது 'திருமங்கலம் இடைத்தேர்தல் எல்லாம் சும்மா...' எனும் அளவுக்கு இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் விளையாடுகிறது. இப்போது பணநாயகம் எனச்சொல்லி தி.மு.க.வும், மற்ற எதிர்கட்சிகளும் கதறிக்கொண்டு இருக்கிறது.

அண்ணா

'அண்ணா சந்தித்த முதல் தேர்தல்'

படு ஏழைக்கட்சியாகவே தனது பயணத்தை துவக்கியது தி.மு.க., தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்தபோது, அதற்கான நிதி கட்சியிடம் இல்லை. அப்போது சென்னை அரங்கு ஒன்றில், சிறப்புக்கூட்டத்தை ஏற்பாடு செய்த தி.மு.க., அந்த கூட்டத்துக்கு டிக்கெட் விற்பனை செய்தது. 5,10, 20 ரூபாய் என பணம் வசூலிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் வசூலான தொகை ஒரு லட்சம். "அப்போதுதான் முதல்முறையாக நாங்கள் லட்சம் ரூபாயை பார்த்தோம். நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஏன் நான்கூட வைத்த விழி எடுக்காமல் அப்படியே லட்ச ரூபாய் குவியலைப் பார்த்தபடி இருந்தோம்” என்றார் அண்ணா!

1967-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, இந்தியாவின் நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தை பொள்ளாச்சி தொகுதியில்  தி.மு.க. சார்பில் உடுமலை நாராயணன் எதிர்த்து போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியத்தை பொள்ளாச்சித் தொகுதியில் தோற்கடிப்பேன் என்றார் உடுமலை நாராயணன். அதற்கு 'உடுமலை நாராயணன் அல்ல, வைகுண்ட நாராயணனாலும் முடியாது' என்றார் சி.சுப்பிரமணியம்.  இதற்கு பதில் சொன்னார் அண்ணா. 'உங்களை தோற்கடிக்க தரித்திர நாராயணனே போதும்' என அவர் சொன்ன பதில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.  பண வசதியற்றவர்களும் போட்டியிட முடியும். தேர்தலில் வெல்ல முடியும் என்பது அன்றைய நிலைமையாக இருந்தது.

ஓட்டுக்கு பணம்

'அண்ணா வழிவந்தவர்களின் ஃபார்முலா'

இதே அண்ணாவின் வழிவந்தவர்களால் தான்  நேற்று திருமங்கலம் ஃபார்முலாவும், இன்று அதை மிஞ்சும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஃபார்முலாவும் படைக்கப்பட்டிருக்கிறது. பண வசதியற்றவர்கள் போட்டியிட முடியாது என்பதும், பணமில்லாமல் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற முடியாது என்பதையும் தான் இவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியில், பதினொன்றாவதாக எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளையும் பெற முடியும் என மாற்றி அமைத்தது இவர்கள் செய்த சாதனை.

இப்போது நாம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு வருவோம். இந்திய அளவில் இப்படி ஒரு இடைத்தேர்தலை யாரும் பார்த்திருக்க முடியாது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தற்போது தான் தேர்தல் நடந்து முடிந்தது. மிக முக்கியமாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்தார்கள் என்ற குற்றச்சாட்டைத்தவிர வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு எழவில்லை.

தினகரன்

வெறும் பணம் மட்டுமே தீர்மானிக்குமா?

ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பணம் கொட்டுகிறது. "ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய், இதுவரை 1.50 லட்சம் பேருக்கு பண விநியோகம் நடந்துவிட்டது. 130 கோடி வரை செலவழித்திருக்கிறார்கள்" என ஆளும் கட்சி மீது எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. வெறும் பணம் மட்டுமே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்குமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.

ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு சகட்டுமேனிக்கு பணம் கொழிப்பதால் தேர்தல் என்பது கரன்சிகளின் விளையாட்டாக மாறிவிட்டது. இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிக முக்கியமானது. இதன் பின்னர் பல தேர்தல்கள் நடந்தாலும் இந்தத் தொகுதி மக்களால் மறக்க முடியாத தேர்தலாக இது இருக்கும். ஆர்.கே.நகர் எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் பரவிவிடுமோ என நினைக்கும்போது தான் பதறுகிறது.

இதுவரை நாம் கேள்விப்படாத அளவுக்கு, ஆர்.கே.நகரில் பணம் கொழிக்கிறது. தேர்தல் கமிஷன் உச்சகட்ட கண்டிப்பை காட்டுகிறது. "மூன்று அதிகாரிகளை மாற்றச்சொன்னால் 30 அதிகாரிகளை மாற்றுகிறார்கள்" என புகழ்கிறார் ஸ்டாலின். காவலரில் துவங்கி ஐ.ஜி., கமிஷனர் வரை ஏராளமானோரை இடமாற்றி விட்டார்கள். உச்சக்கட்டமாக நாட்டில் இதுவரை நடக்காத ஒன்றையும் நடத்தி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஒரு தொகுதி தேர்தலுக்காக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் மேல் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

ஆர்.கே.நகர்

'கலவர'மூட்டும் ஆர்.கே.நகர் நிலவரம்

கடந்த தேர்தல்களில் எல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் தேர்தல் ஆணையம் இப்போது ஏன் திடீரென இத்தனை வேகம் காட்டுகிறது எனக் கேட்கலாம். தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் கண்டிப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். வேறு அழுத்தங்கள்கூட இருக்கலாம். ஆனால் பணம் கொட்டிக் குவிக்கப்படுவதை இல்லை என சொல்வதற்கில்லை. இடைத்தேர்தல் என்றால் பணம் கிடைக்கும் என்பது மக்களின் மனநிலையாக மாறி விட்டது. வீடு தேடி பணம் வரும் என்று பல வாக்காளர்கள் காத்திருந்ததை ஆர்.கே.நகரில் பார்க்க முடிந்தது. பணம் கிடைக்காதவர்கள் 'எங்க வீட்டுல 5 ஓட்டு இருக்கு. எங்களுக்கும் இன்னும் எதுவும் வரலையே' என கேட்பதையும் பார்க்க முடிகிறது.

தொகுதியை ஒருமுறை சுற்றி வந்தால் நிச்சயம் பண விநியோகத்தைப் பார்க்காமல் வர முடியாது. அந்த அளவு பண விநியோகம் உற்சாகமாய் நடக்கிறது. ஏன் பணம் வாங்குகிறீர்கள். பணம் வாங்கி ஓட்டுப்போடுவது சரிதானா என அவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

வாக்காளர்கள்

உண்மையான ஜனநாயகம் எப்போது?

"இந்தத் தொகுதிக்கு இந்த 2 வருஷத்துல நடக்குற மூணாவது தேர்தல் இது. அதுபோக பல தேர்தல்களைப் பாத்துட்டோம். ஆனா தொகுதிக்கு எதுவும் யாரும் செய்யலை. இனி ஜெயிக்கறவங்களும் செய்யப்போறதில்லை. எப்படியும் யாராவது ஒருத்தர் ஜெயிச்சு பணம் சம்பாதிக்கப் போறார். நமக்கு எதுவும் பண்ணப்போறதில்லை. கிடைக்கற வரைக்கும் லாபம்னு இப்போ கொடுக்கறதை வாங்கிக்க வேண்டியது தான்" என நம்மிடம் சிலர் சொல்ல அதிர்ந்து போய் நின்றோம்.

"தேர்தல் என்று ஒன்று நடந்து, சட்டமன்றம், நாடாளுமன்றம் அமைந்து நாட்டை ஆள்வது என்பது மட்டுமே ஜனநாயகம் ஆகிவிடாது. மக்கள் சாதிக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலோ, பணத்தின் அதிகாரத்தாலோ ஓட்டுப் போடாமல், லட்சியங்களையும் தேச நலனையும் நினைத்து ஓட்டளித்து உருவாகும் சட்டமன்றமும் நாடாளுமன்றமும்தான் நாட்டில் உண்மையான ஜனநாயகம் நடப்பதற்கான அறிகுறி"  என்றார் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர்.

உண்மையான ஜனநாயகத்தை விடுத்து, நாம் பணநாயகத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக காட்சியளிக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். உண்மையான ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை என்று உணரப்போகிறோம் நாம்?

- ச.ஜெ.ரவி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!