வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (08/04/2017)

கடைசி தொடர்பு:13:25 (08/04/2017)

3 வருடங்களில் 35 முறை பழுது..! - அணு உலையைச் சாடும் சுப.உதயகுமாரன்

அணு உலை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலையால் தென் தமிழகம் மட்டுமல்லாமல் தென் கேரளாவுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கிய 3 வருடத்தில் 35 முறை பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதனால், இது செயல்படுவதற்குத் தகுதியானது அல்ல என சுப.உதயகுமாரன் தெரிவித்தார். 

தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கவும், அணு உலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக மே 13ம் தேதி நெல்லையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஒருமித்த கருத்துக் கொண்ட அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சி.பி.ஐ (எம்.எல்) மாவட்டச் தலைவர் ரமேஷ், மார்க்சிஸ்ட் மாவட்ட தலைவர் கே.ஜி.பாஸ்கரன், மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் உஸ்மான்கான், மற்றும் பல்வேறு அரசியல்கட்சிகள் மற்றும் அமைப்புகளில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
இந்தக் கூட்டத்தில், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் பொதுமக்களிடம் தாமிரபரணி குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களை திரட்டுவது குறித்து இந்த கூட்டத்தில் பேசிய பலரும் ஆலோசனைகளை வழங்கினர். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களின் மாநில நிர்வாகிகளை இந்தப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான நிறுவனங்களுக்கு தண்னீர் கொடுக்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன், பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படமுடியாத நிலைமை உள்ளதை மக்களிடம் தெரியப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பேசிய பலரும் தங்களின் அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு உதவும் வழிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார்கள். 

கூடங்குளம், சுப.உதயகுமாரன்

பின்னர் சுப.உதயகுமாரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘‘கூடங்குளம் மின் நிலையத் திட்டம் என்பது தோல்விகரமான திட்டம். இதையே நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே எடுத்துச் சொல்லி வருகிறோம். அணு உலை வளாகத்தில் பல்வேறு குறைபாடுகள் நடந்து வருகிறது. 2வது அணு உலை தொடங்கப்பட்டபோது அதில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை பல்வேறு மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப் போவதாக தெரிவித்தார்கள். ஆனால் அந்த அணு உலையானது, மின் உற்பத்தியைத் தொடங்கி விட்டதாக அறிவித்த 3வது நாளிலேயே பழுதடைந்தது. தற்போது கூட அந்த அணு உலையானது இயங்காமல் வால்வு பழுதடைந்து நிறுத்தி வைக்கபப்ட்டு இருக்கிறது. 

நாங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதற்குக் கூட காவல்துறையினர் சிரமங்களை ஏற்படுத்தினார்கள். இந்த இடத்தைக் கொடுத்தவர்களிடம் சென்று அனுமதி கொடுக்கக் கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். இது ஜனநாயக விரோதச் செயல். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாங்கள் மே 13ம் தேதி நடத்த இருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் 20 அரசியல் கட்சிகள் பங்கேற்க உள்ளார்கள். இதில் சில கட்சிகளின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

 அணு உலையானது மிகவும் அபாயகரமானது. கூடங்குளத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ள மின் திட்டம் தோல்விகரமானது. இந்த அணு உலைகளில் பலமுறை பழுது ஏற்பட்டு உள்ளது. இரண்டாவது  உலை இப்போது பழுது ஏற்பட்டு இருக்கிறது. முதல் அணு உலையிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. முதல் அணு உலையானது கடந்த 3 வருடங்களில் 35 முறை பழுது ஏற்பட்டு மின்சார உற்பத்தி நிறுத்தபட்டு இருக்கிறது. இந்த அணு உலையான இயங்குவதற்குத் தகுதியானது அல்ல. அதனால் தான் இந்த அணு உலைகளை மூட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கூடங்குளம் அணு உலை நெல்லை மாவட்ட மக்களுக்கு மட்டும் அல்லாமல் தென் தமிழகம் மற்றும் தென் கேரளாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அணு உலை நிர்வாகம், மத்திய, மாநில அரசுகள் மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு கூடங்குளம் அணு உலையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளை அமைக்கக் கூடாது. இருக்கும் அணு உலைகளையும் மூடிவிட்டுச் செல்ல வேண்டும்’’ என்றார் காட்டமாக. 

மீண்டும் அணு உலை விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கி இருப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது!

-ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன் 

 


டிரெண்டிங் @ விகடன்