வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (08/04/2017)

கடைசி தொடர்பு:12:52 (15/04/2017)

கொடூர வெயில்... கலையாத கூட்டம்... போராட்டம் இவ்வளவு ரணம் மிகுந்ததா?

காவிரி வெயில்

தேசிய நெடுஞ்சாலை. கட்டிடமோ, நிழல் தரும் மரமோ எதுவும் இல்லை. தக தகக்கும் தார் சாலையிலிருந்து வெடித்து கிளம்புகிறது கோடைவெயில். சின்னஞ்சிறு சாமியானா பந்தலுக்குள் அனல் காற்று கோர தாண்டவமாடுகிறது. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. பத்து நாட்களாக,  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறார்கள்  இது செம்மண் பூமி. சுட்டெரிக்கும் வெயிலை இரட்டிப்பாக்கி அசாதாரண சூழலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. விகடன் டாட்காமிற்காக இங்கு செய்தி சேகரிக்க  சென்றோம்.

 சக செய்தியாளர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் இது... ’என்ன சார் இவ்வளவு கொடுமையா இருக்கு.  இதுக்குமேல எல்லாம் இங்க தாக்குப்புடிக்க முடியாது. வாங்க சார் கிளம்புவோம்.  நெருப்பாட்டம் கொதிக்குது.” என்றார்.  ’என்னால மூச்சே விட முடியலை. ஒரே வெப்பக்காத்தா இருக்கு. வேர்த்துக் கொட்டுது” என்றார் இன்னொருவர்.  இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த பொதுமக்களும்
இருப்பு கொள்ளாமல்  ‘அய்யோ முடியலைங்க” என புலம்பித்தீர்த்தார்கள்.  சிலமணி நேரம் இங்கு வந்து செல்பவர்களுக்கே இந்த நிலையென்றால், கடந்த பத்து நாட்களாக இங்கேயே நிரந்தரமாக தங்கி இருந்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துபவர்களின் உடல்நிலை எப்படி இருக்கும். நினைத்து பார்த்து பார்ப்பதற்கே நெஞ்சம் பதைபதைக்கிறது. மக்கள் நலனுக்காக சிறை செல்பவர்கள், உயிர் கொடுப்பவர்கள் மட்டுமா தியாகிகள் ?  கொளுத்தும் கோடை வெயிலில்  இந்த சாமியானா பந்தலில் ஒருநாள் உட்கார்ந்திருந்தாலே அவரை  தியாகி என்று அழைக்கலாம். 

இந்த கொடூர வெயிலில்  உடல் வறுத்தி, உயிர் வறுத்தி ஏன் இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் ?

இந்த ஆண்டும் காவிரி தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் பயிர்கள் மட்டுமல்ல, குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் மனித உயிர்களும் செத்து மடிய வேண்டியதுதான். காரணம் அந்த அளவிற்கு தண்ணிர் பஞ்சம் தாண்டவமாட தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு கர்நாடகாவிலிருந்து காவிரிநீர் வராததால் ஆறுகளில் நீரோட்டம் இல்லை. வடகிழக்கு பருவமழையும் பெய்யவில்லை. இதனால் நிலத்தடிநீர் அதலபாதாளத்தில் அதிர்ச்சி அடையும் அளவிற்கு வறண்டு கிடக்கிறது. குடிநீருக்காக ஆறுகளில் போடப்படும் போர்வெல்கள் நிலத்தடி நீரின்றி தூர்ந்து கொண்டே வருகிறது. 

இந்த ஆண்டு எப்பாடு பட்டாவது காவிரிநீரை மீட்டெடுத்தே ஆக வேண்டிய நெருக்கடியில் உள்ளோம். ஆனால் கர்நாடகமோ இந்த ஆண்டும் மட்டுமல்ல, இனிவரும் ஆண்டுகளிலும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்காமல் முட்டுக்கட்டை போடும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.  இதற்கு மத்திய அரசு பக்க பலமாக துணை நிற்கிறது. இந்த இக்கட்டான நிலையில் தான் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு கோரி காவிரி உரிமை மீட்புக்குழுவினர்  தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவிரித் தாய் காப்பு தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரவு பகலாக இங்கேயே  தங்கி இருக்கிறார்கள். உணவு, உறக்கம் அனைத்துமே இங்குதான். கோடை வெயிலும், செம்மண் புழுதியும், ஆயிரக்கணக்கான வாகனங்களின் புகையும் இவர்களை மிக மோசமாக
சித்ரவதை செய்து கொண்டிருக்கிறது. இவர்களின் உடல்நிலையை பார்த்து  பொதுமக்கள் பலரும் பதைபதைக்கிறார்கள்.  ’நாளுக்குநாள் வெயில் உக்கிரமாகிக்கிட்டே இருக்கு.  எப்பதான் இந்த போராட்டம் முடிவுக்கு வரும்.” என அக்கறையோடு கேள்வி எழுப்புபவர்களிடம்  ‘27 ஆண்டுகளாக காத்திருந்து போராடி பெற்ற காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்புக்கு இறுதி சடங்கு செய்ய துடிக்கிறது மத்திய அரசு.  காவிரி தீர்ப்பாயத்தை கலைப்பதற்காகவே, இந்தியா முழுமைக்குமான ஒற்றை தீர்ப்பாயத்தை கொண்டு வருகிறார்கள். காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித்தீர்ப்பு  கைவிடப்பட்டால், தமிழ்நாட்டு மக்கள் காவிரி நீரையே ஒரேயடியாக மறந்து விட வேண்டிய நிலைதான் உருவாகும். ஒற்றை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, புதிதாக காவிரி வழக்கு நடைப்பெற்றால், அது  முடிவுக்கு வர, இன்னும் பல ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியதிருக்கும். அதுவரை கர்நாடகம் நமக்கு தண்ணீர் தராது. நீதி மன்றத்திலும் நமக்கு நீதி கிடைக்காத நிலை உருவாகும். எனவே ஒற்றை தீர்ப்பாயத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தும் வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும்.   இதற்காக எத்தகைய இழப்புகளையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். காரணம் தற்போது தமிழ்நாடு மிகவும் ஆபாத்தான நிலையில் இருக்கிறது”  என்கிறார் இப்போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் பெ.மணியரசன். பதினொரு நாள்களாக இங்கு கடும் தவ போராட்டம் தொடர்கிறது. ஆனாலும் கூட தமிழக ஆட்சியாளர்கள் இவர்களை சந்தித்து பேசவில்லை. 

வெயில்

இவர் உட்பட  இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருமே உடல் மெலிந்து, மிகவும் சோர்வுற்று காணப்படுகிறார்கள். ஆனால் இவர்களது  மனதில் உறுதியும் உற்சாகமும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே  போகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், மாணவர்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள், திரைப்படத்துறையினர் என தினமும் நுற்றுக்கணக்கானவர்கள் இங்கு நேரில் வந்து
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறார்கள். காவிரி இல்லாமல் நம் வாழ்வில்லை... களம் காணாமல் காவிரி இல்லை. காவிரி நமது ரத்த ஓட்டம். காவிரி நமது வளர்ப்புத்தாய் என்ற ஆவேச முழக்கங்கள் நம்மை ஏதோ செய்கிறது. 

பதினொரு நாட்களாக இங்கு கடும் தவ போராட்டம் தொடர்கிறது. ஆனாலும் கூட தமிழக ஆட்சியாளர்கள் இவர்களை சந்தித்து பேசவில்லை. மத்திய அரசின் ஒற்றை தீர்ப்பாயம் குறித்து தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை வாய் திறக்கவே இல்லை. போராட்டம் சுகமானதா ? எப்பொழுதும் குளிரூட்டப்பட்ட  அறையிலேயே  இருக்கும் ஆட்சியாளர்களே இங்கு வந்து  அமர்ந்து பாருங்கள். இப்போராட்டத்தின் ரணம் தெரியும். 

 -கு. ராமகிருஷ்ணன்

 


டிரெண்டிங் @ விகடன்