வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (08/04/2017)

கடைசி தொடர்பு:16:08 (08/04/2017)

“எங்கே எங்கள் ரேஷன் கடைகள்..?” அமைச்சரை கலங்கடித்த மே 17 இயக்கம் #MustRead #WhereIsOurPDSshop

நிர்மலா சீத்தாராமன்


த்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தில் மேற்கத்திய நாடுகள் பல்வேறு நெருக்கடி தருகின்றன'' எனப் பதிவிட்டுள்ளார். மேலும், ''விவசாயத்துக்கு இந்திய அரசு வழங்கும் மானியம் குறித்தும் மேற்கத்திய நாடுகள் கேள்வி எழுப்புகின்றன'' என்றும் பகிர்ந்திருந்தார். அமைச்சரின் பகிர்வைப் பார்த்த மே பதினேழு இயக்கம், நிர்மலா சீத்தாராமனுக்கு ட்விட்டரில் சரமாரியாகக் கேள்விகள் எழுப்பியிருந்தது. அதற்கு அமைச்சர், சில கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்துவிட்டு மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவியுள்ளார்.

அதன் விபரம் அறிய, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் பேசியபோது, " 'ரேஷன் கடைகள் மூடப்படுவது, விவசாய மானியம் நிறுத்தப்படுவது, விவசாயக் கொள்முதலையும் நிறுத்துவது போன்ற நடவடிக்கைள் இருக்கும்' எனக் கடந்த வருடமே எங்களுடைய இயக்கம் சொல்லியிருந்தது. அதற்கு மத்திய அரசு, 'அவ்வாறு நடக்காது' என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். அதில், 'விவசாயிகளுக்கு எவ்வளவு மானியம் இந்தியா தருகிறது என்ற கேள்விகளை மேற்கத்திய நாடுகள் கேட்கின்றன' என்று குறிப்பிட்டிருந்தார். அதனைப் பார்த்ததும், 'நமது நாட்டில் விவசாயிகளுக்குக் கொடுக்கிற மானியத்தைப் பற்றிக் கேள்வி கேட்க மேற்கத்திய நாடுகளுக்கு உரிமைகளைக் கொடுத்தது யார்' என்று கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. ஒரு விஷயத்தை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

டவிட்டர்

உணவுப் பாதுகாப்பில் ஒரு முழுமையான ஒப்பந்தம் வரும்வரை விவசாய மானியத்தைப்பற்றிக் கேள்வி கேட்க கூடாது என அமைதி ஒப்பந்தம் சொல்கிறது. அவ்வாறு இருக்கும்போது, மேற்கத்திய நாடுகள் மானிய விவரத்தைப்பற்றிக் கேள்வி கேட்கின்றன. அந்த நாடுகள் கேள்வி கேட்கும் அளவுக்கு விட்டுக்கொடுத்தது யார்... அதற்கு யார் காரணம்? மேலும், நமது விவசாயிகளுக்கு மானியம் தருவதற்கு அவர்கள் கட்டளை பிறப்பிக்கிறார்கள். உணவு உற்பத்தியில் 10 சதவிகிதத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்று மேற்குலக நாடுகள் தெரிவிக்கின்றன. இந்த 10 சதவிகிதத்தையும் நாம் உற்பத்தி செய்யும் பொருளில் இன்றைய விலையை நிர்ணயிக்காமல், 1986-ல் இருக்கும் அளவிலான விலையையே நிர்ணயிக்கச் சொல்கிறார்கள். அதனால், 1986-ல் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தியை எடுத்தால், 5 ரூபாய்க்கு மானியம் 50 காசுதான் கிடைக்கும். இந்த நிலைக்குக் கொண்டு வந்தது மோடி தலைமையிலான மத்திய அரசு. மேற்குலகு நாடுகளின் இந்தக் கட்டளைகள் குறித்து இங்குள்ளவர்கள் கேள்வி எழுப்பியபோது அதனை மத்திய அரசு மறுத்து வந்தது. ஆனால், தற்போது உண்மைதான் என்கிறது. இந்தக் கருத்துகளையும் இந்த விவரத்தையும் பதிவிட்டிருந்தேன். ஆனால், அவரால் பதில் சொல்ல முடியவில்லை'.என்றார் திருமுருகன் காந்தி.

திருமுருகன் காந்தி

மேலும், 'மோடியும், மன்மோகனும் இந்தியா மற்றும் வளரும் ஏழை நாடுகளின் பிடிமானத்தைச் சரணடைய வைத்துவிட்டார்கள். தற்போது உங்களிடம் கேரட் மட்டுமே இருக்கிறது. அதைக் கொண்டு ஓடவைக்கும் குச்சி உங்கள் கையில் இல்லை' என்று பதிவிட்டிருந்தோம். அதற்கு நிர்மலா சீத்தாராமன், 'அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டு வந்ததே மோடி தலைமையிலான அரசுதான்' என்று பதிவிட்டிருந்தார். அமைதி ஒப்பந்தம் என்பது மேற்குலக நாடுகளின் செயல்பாடுகளை உடனடியாக நடைமுறைபடுத்தி விடக்கூடாது என்பதாகும். படிப்படியாக அதற்கானச் சூழலை உருவாக்கிறோம் என்பதாகும். ஆரம்பத்தில் மேற்குலகு நாடுகளிடம் இந்தியா சரணடைந்ததை மறுத்து வந்தவர்கள், தற்போது ஆமாம், அமைதி ஒப்பந்தம் போட்டுள்ளோம் என்கிறார்கள். எனவே, 'நீங்கள்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்' என்று பதிவிட்டிருந்தேன். அதற்கு மத்திய அமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை" என்றார்.

பதில் சொல்வதில் என்ன பிரச்னையோ?
 

- கே.புவனேஸ்வரி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்