வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (09/04/2017)

கடைசி தொடர்பு:13:04 (09/04/2017)

''வள்ளுவனுக்கும் காவி உடுத்த முயற்சிக்கிறது பி.ஜே.பி'' - தருண் விஜய்க்கு தமிழருவி மணியன் பதிலடி

து தருண் விஜய்யின் நேரம், 'தென்னிந்திய கருப்பர்களோடு ஒன்றுசேர்ந்துதானே நாங்கள் இந்தியாவில் வாழ்ந்துவருகிறோம்' என்று திருவாய் மலர... அவரது பேச்சுக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத் தலைவர்கள். தமிழ் ஆர்வலராகவும் திருக்குறள் பற்றாளராகவும் இதுவரையிலும் தன்னை வெளிப்படுத்திவந்த தருண் விஜய்யின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து 'காந்திய மக்கள் கட்சி'த் தலைவர் தமிழருவி மணியன் நம்மிடம் பேசினார்...

தமிழருவி மணியன்

'' 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்' என்று வடிவேலு நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும் 'வெள்ளை என்பது உயர்வானது' என்ற அடிமை மனோபாவம்தான் இங்கிருப்பவர்களிடம் இருக்கிறது. அதற்கான உதாரணம்தான் தருண் விஜயின் இந்தப் பேச்சு'' என்று முன்னுரை கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார் தமிழருவி மணியன்.

'' 'தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று தென்னிந்திய மக்கள் கறுப்பர்களாக இருந்தாலும்கூட அவர்களோடு ஒன்று சேர்ந்துதானே நாங்கள் இந்தியா-வாக வாழ்கிறோம்.' என்று அவர் காட்டியுள்ள உதாரணம் மிகவும் தப்பான விஷயம். 'கருப்பு நிறக் கடவுளான கிருஷ்ணரையும்தான் நாங்கள் கடவுளாக வழிபடுகின்றோம்' என்றும் கூறியிருக்கிறார். கறுப்பை அழகானதாகவோ அல்லது கேவலமானதாகவோ நினைத்து உடனடியாக அவர் இப்படி ஆதரித்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. தென்னிந்தியர்களைக் கேவலப்படுத்த வேண்டும்; அல்லது தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் பேசவில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார் தருண் விஜய். ஆனாலும், 'இவர்களோடும் சேர்ந்துதானே நாங்கள் வாழ்கிறோம்' என்று அவர் சொல்லியிருக்கும் வார்த்தைகளிலேயே அவரது எண்ணம் என்னவென்பது தெளிவாகிறது.''

''நான் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை என தருண் விஜய் மறுத்திருக்கிறாரே...?''

'' 'எண்ணங்களின் வெளிப்பாடுதான் வார்த்தை'. அந்த வகையில், 'இவர்களோடு சேர்ந்துதானே நாங்கள் வாழ்கிறோம்' என்று சொல்லும்போதே, ஏதோ நீங்கள் ஒரு சலுகையை எங்களுக்குக் கொடுப்பதுபோன்ற தொனிதானே ஒலிக்கிறது. 'அவர்களும் நாங்களும் வெவ்வேறு இல்லை; நாங்கள் அனைவருமே இந்தியர்களாகத்தான் இருக்கிறோம்' என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். மாறாக, 'அவர்களது விருப்பத்தினால்தான்' ஏதோ நம்மோடு சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதுபோல சொல்லியிருப்பதே மேலாதிக்க மனோபாவம்தானே...?''

தருண் விஜய்


வட இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனைபேருக்கும் இதுபோன்ற எண்ணம் இருக்கிறது. குறிப்பாக டெல்லிக்குப் போனீர்கள் என்றால், அங்கே மலையாளி, தமிழன்... என்றெல்லாம் பிரித்தேப் பார்க்கமாட்டான். ஒட்டுமொத்தமாக தென்னிந்தியர்கள் அனைவரையும் 'மதராஸி' என்றுதான் சொல்வார்கள். அதாவது மதராஸி என்றாலே ஏளனமான ஒரு பார்வை அவர்களிடத்திலே இருக்கிறது. அதுதான் அவர்களது வார்த்தைகளாகவும் வெளிப்படுகிறது. இது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.''

''இனவெறி குறித்த ஒரு கேள்விக்கு தருண் விஜய் எப்படி பதில் அளித்திருக்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள்?''

''என்ன கேள்வி கேட்டிருந்தாலும் அவர் சொல்லியிருக்க வேண்டியது. 'காஷ்மீர் தொட்டு கன்னியாகுமரி வரையிலும் நாங்கள் அனைவரும் ஒரே இனம்'தான் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். 'நாங்கள் இந்தியர்கள். ஒரே மண்ணைச் சார்ந்தவர்கள். ஒரே பண்பாட்டைச் சார்ந்தவர்கள். ஒரே மனநிலையைக் கொண்டவர்கள். எங்களுக்குள் எதன் பொருட்டும் எவர் பொருட்டும் எந்த பேதத்தையும் எவராலும் உருவாக்கிவிட முடியாது. இதில் நிறமோ, இனமோ, குலமோ, மதமோ, மொழியோ எதுவுமே எங்களைப் பேதப்படுத்தமுடியாது' என்று தருண் விஜய் சொல்லியிருந்தால் பாராட்டலாம். 

'வள்ளுவருக்கு சிலை வைக்கவேண்டும்' என்று இங்கிருந்து காசி வரை போனவர், வள்ளுவர் எழுதிய,

'மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்' 

- என்ற திருக்குறளையும் படித்தறிந்திருக்க வேண்டும். உயர்வு தாழ்வு என்பது பிறப்பு சார்ந்தது அல்ல; அவரவர் பண்பு சார்ந்தது என்பதை இனியாவது தருண் விஜய் போன்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். 
இதையே வள்ளுவர் இன்னொரு குறளிலும் சொல்கிறார். அதாவது, 

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்'

என்பதுதான் அது. 

வள்ளுவத்தைப் படித்ததாகச் சொல்கின்ற, வள்ளுவத்தை வட இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் பாடமாக வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிற, வள்ளுவர் சிலையைக் கொண்டுபோய் வட இந்தியாவில் வைக்கவேண்டும் என்றெல்லாம் முயன்ற இந்த மனிதர் வள்ளுவத்தை ஒழுங்காகப் படிக்கவில்லையே என்பதுதான் குறை. இனிமேலாவது, வள்ளுவம் சொல்கின்ற சமத்துவத்தையும் சமதர்மத்தையும் தருண் விஜய் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.''

வள்ளுவர் சிலை

''தமிழகத்தில் பி.ஜே.பி-யை கால் ஊன்ற வைக்கும் தந்திரமாகத்தான் தருண் விஜய் தமிழ் மொழியைத் தூக்கிப் பிடிக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து...?''

''நிச்சயமாக.... நான் அன்றைக்கே சொல்லியிருக்கிறேனே... வள்ளுவர் சிலையை இங்கிருந்து ஊர்வலம் விட்டு காசிக்கு எடுத்துச்செல்லும்போதே நான் சொல்லியிருந்தேன்; 'எல்லாவற்றையும் காவி மயமாக்க முனைவதுபோல, வள்ளுவனுக்கும் காவி உடை உடுத்துகின்ற முயற்சிதான் இது' என்று. தமிழனுக்கு எப்போதுமே மொழிசார்ந்த பலவீனம் உண்டு. அதனால் இந்த மண்ணில் பி.ஜே.பி-யை வேகமாக வளர்த்தெடுக்க வேண்டுமானால், தமிழ் மொழி சார்ந்தும் செயல்படவேண்டும் என்று யோசித்தே, வள்ளுவரைக் கையில் எடுத்தார்களே தவிர... வள்ளுவர் மீது அவர்களுக்கு என்ன தனிப்பட்ட அன்பு இருந்துவிடப் போகிறது? இந்தியாவைப் பொருத்தவரையில், அரசியல்வாதிகள் எந்தக் கட்சியில், எந்தப் பதவியில், எந்த மூலையில் இருந்தாலும் அவர்களது பார்வை எல்லாம் ஒரேவிதமான அரசியல் பார்வை மட்டும்தான்.''

-த.கதிரவன்


டிரெண்டிங் @ விகடன்