வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (10/04/2017)

கடைசி தொடர்பு:11:00 (10/04/2017)

ஆளும் கட்சியை ஆட்டம் காணவைத்த இடைத்தேர்தல்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை-34  

சசிகலா, ஜெயலலிதா

வனவாசத்தில் இருந்து மனவாசம்

1989 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தை மீண்டும் தி.மு.க.விடம் ஒப்படைத்தது. 232 தொகுதிகளுக்கு (மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளுக்கு மட்டும் அப்போது தேர்தல் நடக்கவில்லை) நடைபெற்ற அந்தத் தேர்தலில் 150 தொகுதிகளை வென்று தி.மு.க தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தது. அ.தி.மு.க-வின் ஜெ.அணியால் வெறும் 27 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஜெயலலிதாவின் அதிர்ஷ்டம்... மற்றக் கட்சிகளின் துரதிருஷ்டம்... அந்தளவு இடங்களைக்கூட வேறு எந்தக் கட்சியும் பெறவில்லை. மூப்பனார் தலைமையில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் 26 இடங்களை மட்டும் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்தது. சி.பி.ஐ.எம் 15 இடங்களையும், அ.தி.மு.க-வின் ஜா.அணி இரண்டு இடங்களையும், தா.பாண்டியன் தலைமை வகித்த சி.பி.ஐ 3 இடங்களையும், சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையும் பெற்றது. 1989 சட்டமன்றத் தேர்தல் அடுத்து வரப்போகும் 30 ஆண்டுகளும் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருவரைச் சுற்றித்தான் தமிழக அரசியல் சுழலும் என்பதற்கு அச்சாரம் போட்டு வைத்தது. 13 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்த கருணாநிதி மனவாசம் திரும்பினார். ஜானகி தனது அணியை ஜெ.அணியோடு இணைத்துவிட்டு, மொத்தமாக கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டு ஒய்வெடுக்கும் முடிவுக்குப்போனார். டெல்லியில் இருந்த காங்கிரஸ் தலைமை ஜெயலலிதாவின் ஈர்ப்பைப் புரிந்துகொண்டது. தமிழகத்தில் தி.மு.க-வை எதிர்க்க வேண்டுமானால், காங்கிரஸூக்கு  ஜெயலலிதாவின் தயவு தேவை என்பதை கணக்குப்போட்டு குறித்துக் கொண்டது. 
 

சசிகலா-நடராஜன் மீது வெறுப்பு விதைகள்!

கருணாநிதி - ஜெயலலிதா

1989 ஜனவரி 27-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கருணாநிதி முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1989 பிப்ரவரி 9-ம் தேதி ஜெயலலிதா எதிர்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராஜர், அண்ணா, பி.ராமமூர்த்தி, எம்.ஜி.ஆர் போன்றவர்களோடு அரசியல் செய்த கருணாநிதிக்கு எதிரில் எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா அமர்ந்தார். ஆனால், அது ஜெயலலிதாவை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை. அவருக்குள் விரக்தி பரவி இருந்தது. வெறும் 27 இடங்களை மட்டுமே தன் அணி வென்றதை அவர் வெற்றியாகப் பார்க்கவில்லை; தோல்வியாகவே கருதினார். ‘எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு, தனக்கு இல்லையே’ என்று நினைத்து புழுங்கிப் போயஸ் கார்டனுக்குள் முடங்கினார். பதவி ஏற்றதோடு சரி... அதன்பிறகு சட்டமன்றம் இருக்கும் திசையைக்கூட திரும்பிப் பார்க்கவில்லை ஜெயலலிதா. “இந்த நிலைக்குக் காரணம், சசிகலா-நடராஜனின் தவறான அணுகுமுறை தான்” என்று அப்போது சிலர்  ஜெயலலிதாவுக்கு அறிவுரை சொன்னார்கள்; எம்.எல்.ஏ சீட்டுக்காக நடராஜனிடம் பணம் கொடுத்தவர்கள், கொடுத்த தொகையைத் திருப்பிக்கேட்டு போயஸ் கார்டன் முன்பு குவியத்தொடங்கினர்; ஜெயலலிதா வங்கிகளுக்கு கொடுத்த செக்குகள் பணம் இல்லாமல் திரும்பி வந்தன; அதற்குக் காரணம்,  வங்கிகளில் இருந்த பணத்தை எல்லாம் நடராஜன் தன் வீட்டுக்கு எடுத்துப்போய்விட்டார் என்று சிலர் காரணம் கண்டுபிடித்துச் சொன்னார்கள்;  ஜெ-ஜா.அணி இணைப்பை நடத்த பேச்சுவார்த்தை நடந்தபோதும், சசிகலா-நடராஜன் பற்றிய பேச்சும் வந்தது. அப்போது சிலர், சசிகலா-நடராஜனை கட்சியைவிட்டு ஜெயலலிதா ஒதுக்கிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து அ.தி.மு.க-வுடன் இணக்கமாகப்போக விரும்பியவர்களும் நடராஜன்-சசிகலா விவகாரத்தை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஜெயலிதாவின் விரக்தி அதிகமானது. சசிகலா-நடராஜன் மீது இலேசான வெறுப்பு ஏற்பட்டது. ஆனால், அவர்களை முற்றிலுமாக ஜெயலலிதா ஒதுக்கவில்லை; என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல், தீராத குழப்பத்தில் இருந்தார். வழக்கம்போல், நடராஜனும் சசிகலாவும் தினமும் போயஸ் கார்டனுக்குப் போவதும் வருவதுமாக இருந்தனர். ஜெயலலிதா அவர்களிடம் அதிகம் முகம்கொடுத்துப் பேசவில்லை; அந்த நேரத்தில், மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வெற்றி ஜெயலலிதாவின் குழப்பம் கலையவும், ஜெயலலிதாவுக்கு சசிகலா-நடராஜன் மேல் வெறுப்பு அகலவும் தீர்வாக அமைந்தது.
 

தமிழக அரசியலைத் திசைதிருப்பிய இடைத்தேர்தல் 

இடைத்தேர்தல்

 

1989 மார்ச் 11-ம் தேதி மதுரை கிழக்கு, மருங்காபுரித் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அன்றைக்கு ஆளும் கட்சியாக தி.மு.க அசுரபலத்தில் இருந்தது. ஆனால், அ.தி.மு.கதான் அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. அது தமிழக அரசியலில் ஜெயலலிதாவை அசைக்க முடியாத சக்தியாக திகழப்போகிறார் என்பதற்கு மீண்டும் ஒரு சாட்சியாக அமைந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க-அ.தி.மு.கவுக்கு நேரடிப் போட்டியாக அமைந்தது(ஜா., ஜெ. அணிகள் இணைப்பு அப்போது நடந்துவிட்டது. இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் மீண்டும் வழங்கிவிட்டது). அந்தத் தேர்தலில் ஆளும்கட்சியான தி.மு.கதான் வெற்றிபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதனால், ஜெயலலிதா அந்தத் தொகுதிகளுக்குப் பிரசாரத்துக்குக்கூட போகவில்லை. ஆனால், நடராஜன் விடவில்லை. கே.கே.எஸ்.எஸ்.ஆர் மதுரை கிழக்குத் தொகுதிக்கு பொறுப்பாளராக்கப்பட்டார். திருநாவுக்கரசு மருங்காபுரித் தொகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகள் வெளியானபோது, எதிர்கட்சியான அ.தி.மு.க இரண்டு தொகுதிகளையும் வென்றது. தி.மு.க அவமானத்தில் குறுகிப்போனது; அதுவும் பல தேர்தல் களங்களைக் கண்ட கருணாநிதி அதிர்ந்தே போனார். எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை; ஆட்சியதிகாரம் நம் கையில் இருக்கிறது; எதிர்த்துப்போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா அரசியல் கத்துக்குட்டி; அவரிடம் இடைத்தேர்தலில் தோற்பதா? என்று நினைத்து நினைத்து வருந்தினார். ஆனால், அதைக் கொண்டாட வேண்டிய ஜெயலலிதாவும் கொண்டாடவில்லை. “நாம் பிரசாரத்துக்குப் போகாமலேயே நம் அணி வெற்றி பெறுகிறது என்றால், மக்கள் நம்மைவிட எம்.ஜி.ஆரையும் இரட்டை இலைச் சின்னத்தையும்தான் நேசிக்கின்றனர்” என்று நினைத்து அவரும் புழுங்கினார். அப்போது, மதுரையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் தொலைபேசியில் அழைத்தார். இந்தப் பக்கம் தொலைபேசியில் பேசியவர் சாட்சாத் நடராஜனேதான். தொலைபேசியில் அழைத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் நடராஜனிடம், “அண்ணாச்சி, நீங்க சொன்ன ‘வைட்டமின் ப’ பார்முலா நல்லா வேலை செஞ்சுடுச்சு. நாம ஜெயிச்சுட்டோம்” என்றார். நடராஜன் மகிழ்ந்தார். இந்த இரண்டு முனைகளைத்தாண்டி, மூன்றாவது ஒரு முனையில் இந்தத் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது.  
 

ஜெயலலிதா ராஜினாமா கடிதம்

நடராஜன்

மதுரை கிழக்கு, மருங்காபுரித் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிகள் ஜெயலலிதாவுக்கு ஆச்சரியத்தை அளித்தது. மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. நாம் ஊர் ஊராகப்போய் பிரசாரம் செய்தே வெறும் 27 தொகுதிகளைத்தான் ஜெயிக்க முடிந்தது. ஆனால், நாம் பிரசாரத்துக்கே போகாமல், இந்த இரண்டு தொகுதிகளிலும் நம் கட்சி வெற்றி பெற்றுள்ளதே என்று அவர் ‘அப்செட்’ ஆனார். ஏற்கெனவே, சோர்வில் இருந்த ஜெயலலிதா இடைத்தேர்தல் வெற்றியால் மிகவும் எரிச்சலடைந்தார். அந்த நேரத்தில் என்ன நினைத்தாரோ, “நான் என்னுடைய எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறேன்” என்று கடிதம் எழுதினார். ஆனால், அந்தக் கடிதத்தையும் ஒளித்துவைத்து நடராஜன் நடத்திய நாடகம் தமிழக சட்டமன்றத்தையே ஆட்டம் காண வைப்பதற்கான ஒத்திகையாக அமைந்தது. ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தை நடராஜன் ஒளித்துவைத்து ஆடிய நாடகத்தில் கருணாநிதி நடராஜன் மீது உச்சக்கட்ட வெறுப்படைந்தார். “நாம் முதலமைச்சராக இருக்கும்போது நடக்கும் இடைத்தேர்தலில் நம் வெற்றியைத் நடராசன் தடுக்கிறார்... அரசியலைவிட்டு போகிறேன் என்று சொல்லும் ஜெயலலிதாவை பிடித்துவைக்கிறார்... ஜெயலலிதாவைவிட நடராசன் குடைச்சல் அதிகமாக இருக்கிறதே! இதற்குமேல் நடராசனுக்கு பாடம்புகட்டாமல் விடுவது ஆபத்து” என்று நினைத்த கருணாநிதி நடராசனைக் கைது செய்ய உத்தரவிட்டார். நடராசன் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் சோர்வு போனது. சிறிதுநாள்கள் ஒதுக்கிவைத்திருந்த நடராஜன் மீது பரிவு ஏற்பட்டது. நமக்காக இவ்வளவு சிரமங்களைச் சந்திக்கிறாரே இந்த நபர் என்று ஜெயலலிதா யோசித்த நேரத்தில் கருணாநிதி மீது அவருக்கு அளவில்லாத ஆத்திரம் ஏற்பட்டது. பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கொந்தளித்தார். கவர்னரைச் சந்தித்து நடராஜனை விடுவிக்க முறையிட்டார். அப்போது நடராசனைச் ஜெயலலிதா சந்தித்தபோது “கருணாநிதி ஆட்சியைக் கவிழ்த்து உங்களை முதலமைச்சர் ஆக்குவது என் பொறுப்பு” என்று வாக்களித்தார். அதற்கென்று பிரத்யேகமாக ஒரு திரைக்கதை எழுதப்பட்டது. 1989 மார்ச் 25-ம் தேதி கூடிய தமிழக சட்டமன்றத்தில் அந்தக் கதையை அரங்கேற்ற மார்ச் 24-ம் தேதி போயஸ் கார்டனில் ஒத்திகை நடந்தது. 

கதை தொடரும்...

(இந்தத் தொடரின் முந்தைய பகுதியப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்)

ஜோ.ஸ்டாலின். 


டிரெண்டிங் @ விகடன்