வெளியிடப்பட்ட நேரம்: 04:29 (10/04/2017)

கடைசி தொடர்பு:04:29 (10/04/2017)

அண்ணா சாலை ஆபரேசன் - இன்றும் போக்குவரத்து நெரிசல் இருக்கலாம்... எச்சரிக்கை!

சென்னை அண்ணா சாலையில் நேற்று மதியம் ஏற்பட்ட 'திடீர்' பள்ளத்தில் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் சிக்கிக் கொண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் காரை ஓட்டிவந்த ஓட்டுநர் யாருக்கும் பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு பேருந்தும், காரும் மீட்புக் குழுவால் பத்திரமாக மீட்கப்பட்டன. மேலும், நேற்று விடுமுறை நாள் என்பதால், வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தது என்பதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

மெட்ரோ பள்ளத்தில் சிக்கிய பேருந்து மற்றும் கார்

சாலையில் பள்ளம் விழுந்த பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டு கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்றது. 10-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு நாம் அங்கு சென்று பார்த்தபோது, மெட்ரோ பணியாளர்கள் சிலர் நவீன கருவிகளைக் கொண்டு சாலையை சீரமைத்து வந்தனர். ராட்சத கிரேன், மெட்ரோ லாரிகள் உள்பட பல்வேறு வாகனங்கள் சீரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. பள்ளம் விழுந்த பகுதி தற்போது கான்கிரீட் கலவையால் நிரப்பப்பட்டுள்ளது.

அண்ணா சாலையில் ஏற்பட்ட இந்த 'திடீர்' பள்ளத்தால் ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குப் பிறகு, அந்தப்பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால், ராயப்பேட்டை, சத்யம் தியேட்டர், கோபாலபுரம், ஆழ்வார்ப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறை நாளிலேயே இந்த நிலை என்றால், இன்று திங்கட்கிழமை அலுவலக நாள் என்பதால் நிச்சயமாக போக்குவரத்து நெரிசல் நேற்றைவிட அதிகமாக இருக்கும். இன்றும், அண்ணா சாலையில் பள்ளம் விழுந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீரமைப்புப் பணிகள்

எனவே, வழக்கமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான அண்ணா சாலையில், திங்கட்கிழமை காலையில் வழக்கத்தைவிட அதிகமாகவே போக்குவரத்து நெரிசல் இருக்கும். இரவோடு இரவாக பணிகள் முடிக்கப்பட்டாலும், கான்கிரீட் இறுக வேண்டுமென்பதால், அண்ணா மேம்பாலத்தை அடுத்து சர்ச் பார்க் பள்ளியருகே இன்று காலை போக்குவரத்து அனுமதிக்கப்பட வாய்ப்பு குறைவு. எனவே அந்த வழியாக அலுவலகம் செல்பவர்களும், பயணிப்பவர்களும் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

அண்ணா சாலையில் பள்ளம் விழுந்து விபத்தானது தலைப்புச் செய்தியானதால், நள்ளிரவிலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் பள்ளம் விழுந்த பகுதியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு இரவுப் பணியில் உள்ள போக்குவரத்துக் காவலர்கள் அவ்வப்போது இளைஞர்களை கலைந்து போகச் சொன்னார்கள்.


டிரெண்டிங் @ விகடன்