வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (10/04/2017)

கடைசி தொடர்பு:12:37 (10/04/2017)

உண்மையில் எதனை யாரை ரத்து செய்ய வேண்டும்...? : தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகள்!

 

ஆர் கே நகர் இடைத்தேர்தல் ரத்து

சென்னை ஆர்.கே. நகர்த் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து நண்பர் அன்பழகன் தன் முகநூலில் இவ்வாறாக ஒரு பதிவைப் பகிர்ந்திருக்கிறார். “ஒரு தேர்தலை நேர்மையாக நடத்த முடியவில்லை என்றால் கலைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தைத்தான்” என்று. அவரது கருத்து கொஞ்சம் அதட்டலாக, கடுமையானதாக இருந்தாலும்...இன்னும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் பலரின் எண்ண ஓட்டம் இதுதான். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு... கிர் காட்டில் வசிக்கும் ஒரே ஒரு வாக்காளரையும் வாக்களிக்க வைக்க மெனக்கெடும் தேர்தல் ஆணையம் என பெருமை பிதற்றிக்கொள்ளும் அதேவேளையில், அந்த அமைப்பால் ஒரு சிறிய தொகுதியில், பணப்பட்டுவாடாவைத் தடுத்து, இடைத்தேர்தலை நடத்த முடியவில்லை என்பது நிச்சயம் தேசிய அவமானம் என்றே கூற வேண்டும். 

இதற்கு ஏன் தேர்தல் ஆணையம் அவமானப்பட வேண்டும்...? அவர்கள் காத்திரமான நடவடிக்கையைத்தானே எடுத்திருக்கிறார்கள். அவமானப்பட வேண்டியது வாக்குவங்கியை நம்பும் அரசியல் கட்சிகளும், ஓட்டளிக்கப் பணம்பெற்ற வாக்காளர்களும்தான் என்பது உங்களது பார்வையாக இருந்தால்... அதில், நிச்சயம் எனக்கு சிறு மாற்றுக்கருத்து இருக்கிறது. வாக்குக்குப் பணம் கொடுப்பதும்... வாங்குவதும் ஜனநாயகத்தைக் கொல்லும் செயல்தான். ஆனால், இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அமைப்புகள் என்ன செய்து கொண்டிருந்தன...? செய்கின்றன...? என்பதுதான் இங்கு கேள்வி.

“அமைப்புகள் மீது மரியாதை இழப்பு”

ஆர் கே நகர் வேட்பாளர்கள்ஒரே ஆண்டில் மூன்று முதல்வர்களைக் கண்ட மாநிலம் மட்டுமல்ல தமிழகம். அதே ஓர் ஆண்டில், வாக்காளர்களுக்கு அதிகளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி, மூன்று தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட மாநிலமும் தமிழகம் என்றாகி விட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை என்ன காரணத்தைச் சொல்லி தேர்தல் ஆணையம் ரத்து செய்ததோ... அதே காரணத்தைத்தான் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளிலும் கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின் போது வாக்குப்பதிவை ரத்து செய்தது.  ரத்து செய்ததெல்லாம் சரி. அதன் பின்னர் நடந்தது என்ன? தேர்தல் ஆணையம் செய்தது என்ன...? எந்தெந்த வேட்பாளர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்று சொல்லி தேர்தலை ரத்து செய்ததோ அதே வேட்பாளர்கள்தானே, சில மாதங்களுக்குப் பின்னர் அந்தத் தொகுதிகளில் நடந்த தேர்தலில் நின்றார்கள். வெற்றியும் பெற்றார்கள்... சட்டசபைக்குச் சென்று தீர்மானங்கள் நிறைவேற்றும் நிகழ்வுகளிலும் பங்கேற்றார்கள்.

ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டார் என்று ஒருவரைச் சொல்கிறீர்கள். அதன் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட நபருக்கு எந்த தண்டனையும் வழங்காமல் அவர் வழியிலேயே செல்ல விடுகிறீர்கள். இது நிச்சயம் தேர்தல் அமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயல்தானே...? அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணம் பட்டுவாடா செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கி..., அதற்குக் காரணமான வேட்பாளர்களை தேர்தலில் நிற்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்திருந்தால்..  அரசியல் கட்சிகள் மனதிலும், வேட்பாளர்கள் மனதிலும் நிச்சயம் ஒரு பயம் ஏற்பட்டிருக்கும். வாக்காளர்களுக்கும் தேர்தல் நடத்தும் அமைப்பின் மீது ஒரு மரியாதை வந்திருக்கும். ஆனால், அதை செய்யத் தவறியது யார்...? தேர்தல் ஆணையம்தானே...!  

இதுகுறித்து கேள்வி எழுப்பினால், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறீர்கள். தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு மட்டுமல்ல... நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்துவதற்கு வேண்டிய அதிகாரங்களையும் மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற வேண்டிய கடமையும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதுதானே...? 

வாக்காளர்கள் பணம் வாங்குகிறார்கள்... பணம் வாங்குகிறார்கள் என்று மக்கள் மீது பழிசுமத்துகிறது தேர்தல் ஆணையம். மக்கள் இந்த அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்... அதன் வெளிப்பாடுதான் இது. ஒரு அமைப்பு முழுமையான ஒழுங்குடன் செயல்பட்டால், மக்களும் அதற்கு உரிய மரியாதையை அளிப்பார்கள். அந்த அமைப்பின் கண்ணியத்தைக் காப்பதற்காக பங்களிப்பார்கள். அமைப்பு சிதைந்திருக்கிறது. அதை மீட்டுருவாக்க தேர்தல் ஆணையம் காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும். 

“நியாயமான அரசியல் கட்சிகளின் செலவுக்கு யார் பொறுப்பு?” 

ஆர் கே நகர் மக்கள்

இந்தத் தேர்தல் ரத்தானதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்களிடம் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று நிதி வசூலித்த இடதுசாரிக் கட்சிகளும், சில நியாயமான சுயேச்சைகளும் செலவு செய்த நிதிக்கு யார் பொறுப்பு...? வலுவான ஜனநாயக அமைப்புக்கு அனைவரும் தேர்தல் அரசியலில் தங்களுக்கு உரிய பங்கைச் செலுத்த வேண்டும் என்கிறது தேர்தல் ஆணையம். அதை நம்பி, தேர்தல் அரசியலில் பங்குபெற்றது சில நியாயமான கட்சிகள். அவர்களுக்கு எந்தத் தீர்வையும் சொல்லாமல் இருப்பது என்ன நியாயம்? குறைந்தபட்சம் அவர்களிடமிருந்து கணக்குகளைப் பெற்று, அவர்கள் செலவு செய்த நிதியை தேர்தல் ஆணையம் திரும்ப அளிப்பதுதானே நியாயமான செயல்.  அப்போதுதானே, தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு மரியாதையும், நம்பிக்கையும் ஏற்படும். அதைச் செய்யாமல் தற்காலிகத் தீர்வை மட்டும் தேடிக் கொண்டிருந்தால்... இந்த அமைப்பு முழுவதுமாக சிதைந்து விடும். 

இந்த இடைத்தேர்தல் ரத்து சரியானதுதான்.... ஆனால், இத்துடன் முடிக்காமல், இதன்மீது ஒரு விவாதத்தை கட்டியெழுப்புங்கள்... தேர்தலில் பணம் கொடுத்தால் வேட்பாளர்களும், கட்சிகளும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பன போன்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயற்சி எடுங்கள்... தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த அமைப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களின் குரலுக்கு மதிப்பளியுங்கள். 
இவற்றையெல்லாம் செய்தால், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மீது நம்பிக்கை வரும். இதற்குச் செவிமடுக்க மறுத்து கடந்து செல்வீர்களானால்... இது மற்றுமொரு நடவடிக்கையாகத்தான் இருக்கும். முதல் பத்தியில் நண்பர் அன்பழகன் சொல்லியது உண்மையென்றாகும்.

- மு. நியாஸ் அகமது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்