வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (11/04/2017)

கடைசி தொடர்பு:10:43 (11/04/2017)

“மண்டை ஓடு, மீசை மழித்தல், நிர்வாணம்...” பொதுச் சமூகத்துக்கு விவசாயிகள் சொல்லும் செய்தி என்ன? #MustRead #3MinsRead

லகிற்கே படியளந்த விவசாயி இன்று தன் எதிர்கால சந்ததிக்கு படியளக்கச் சொல்லி  டெல்லித் தெருக்களில் நிர்வாணமாக உருண்டுகொண்டிருக்கிறான். 

விவசாயிகள்

கடந்த 14-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தரில்  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் நடத்திவரும்  காலவரையற்ற போராட்டத்தில் காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வது , நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. விதவிதமாக போராட்ட வடிவங்களில் போராடி வந்த விவசாயிகள், தமிழர்தம் மானமான ஆடையைத் துறந்து போாராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விஷால் தலைமையில் தமிழக மக்களின் பிரதிநிதிகளாகச் சென்ற பகட்டான சினிமா நட்சத்திரங்களையே ஓரிரு நிமிடங்களில் நிற்கவைத்தே பேசி அனுப்பிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அங்கம் வகிக்கும் பாஜக அரசு, விவசாயிகளின் இத்தனை நாள் போராட்டத்தை கொஞ்சமும் செவிமடுக்காமல், எந்தவித உத்தரவாதமும் அரசு ரீதியாக அளிக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்துவருகிறது. இந்த  நிலையில்தான் நிர்வாணமாக ஒட்டுத்துணியின்றி வீதிகளில் உருண்டு தங்களின் அடுத்தகட்டப் போராட்டத்தை துவக்கியுள்ளனர் விவசாயிகள்.

நாட்டின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் விவசாயத்தை உயர்த்திப்பிடிக்கும் விவசாயியின் முதுகெலும்பு இன்று அரசு இயந்திரத்தால் அடித்து நொறுக்கப்படும் அவலத்தை நாடே கொந்தளிப்பாக பார்க்கிறது.

வெள்ளை நிற வேட்டி சட்டையில் பச்சை நிற துண்டை அணிந்து நீளமான பேனர்களை கைகளில் தாங்கியபடி சோகமாக ஒரு டென்ட்டின் கீழ் விவசாயிகள் எழுப்பிய கோஷங்கள் சொற்ப எண்ணிக்கையில் விற்கும் பத்திரிகைகளில் கூட இடம்பெறவில்லை ஒருகாலத்தில்.. விவசாயிகளுக்கு இந்த தேசம் அளித்த மதிப்பு இதுதான். இதனால்தான் விவசாயத்தில் நூதன முறைகளை எதிர்க்கிற விவசாயிகள் தங்கள் போராட்டம் பிசுபிசுத்துப்போய்விடாமல் இருக்க தங்களின் போராட்ட முறையில் நூதனங்களை கடைபிடிக்கவேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். 

ஆனால் இன்று மத்திய அரசின் செவிட்டுக்காதுக்கு தங்கள் போராட்டத்தை கொண்டு சேர்க்கும் மீடியாக்களை தங்கள் மீது கவனமெடுக்க வைத்த வகையில் முதல்வெற்றியடைந்திருக்கின்றனர் விவசாயிகள். விவசாயிகளின் இந்த வெற்றிக்கு முழுமுதற்க் காரணம் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் ஆம் ஆத்மி நடத்திய ஆர்பாட்டத்தில் விவசாயி கஜேந்தரா சிங், அருகில் இருந்த மரத்தில் ஏறி தூக்குப் போடத் தயாராகி நின்றார். போராட்டத்தின் ஒரு வழிமுறை என்றுதான் சக விவசாயிகள் அதைப்பார்த்தபடி நின்றார்கள். ஆனால் விபரீதம் நடந்துவிட்டது. விவசாயம்  பொய்த்துப்போனதால் தற்கொலை செய்துகொள்ளப்போனதால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதிவைத்துவிட்டுத்தான் அவர் மரத்தில் ஏறியது பின்னர்தான் தெரியவந்தது. 

சத்தீஷ்கர் மாநிலத்தில் விவசாயம் பொய்த்துப்போனதைக் குறிப்பிட்டு 'சாவதை தவிர வேறு வழியில்லை என மனு தந்த விவசாயியிடம், 'அதற்கு என்னிடம் எதற்கு வந்தீர்கள்...தாராளமாக சாகலாம் அதற்கு என் உத்தரவு அவசியமில்லை“ என்று கிண்டலாக சொன்னார்  மாவட்ட ஆட்சியர்.  

தெலங்கானாவில் நொடித்துப்போன விவசாயி ஒருவர், "தப்பித்தவறி கூட ஒரு விவசாயி ஆகிவிடாதே!" என பள்ளியில் படிக்கும் தனது மகனிடம் கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்டார் கடந்த வருடம். 

விவசாயி தற்கொலை

விவசாயிகள் தற்கொலை அதிகரித்த நிலையிலும் அதன் வீரியத்தை உணராமல் சில ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிரா மாநில எம்.பி கோபால் ஷெட்டி என்பவர், 'விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது ஃபேஷனாகிவிட்டதாக' சொன்னார். அப்படிச் சொன்னவர் இன்று விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காத இதே பாஜக அரசின் பிரதிநிதிதான். இந்தியாவில் விவசாயியின் நிலை இதுதான்.

ஆட்சி இயந்திரமும் அதிகாரிகளும் தங்களை புறக்கணித்ததன் எதிரொலியாகத்தான் இன்று டெல்லி வீதிகளில் நிர்வாணப்போராட்டம் நடத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விரக்தி மேலிட்டதால் விளைந்த இந்த விபரீதம், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லத்தானே தவிர பத்திரிகைகளில் இடம்பெற அல்ல.

பாடை கட்டிப்போராட்டம், தூக்கு மாட்டும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம், மண்டை ஓடுகளை அணிந்து போராட்டம் என டெல்லியில் நூதன போராட்டங்களை நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு இதெல்லாம் புதிதல்ல; கடந்த காலத்தில் இப்படி தமிழகத்தில் அவர்கள் போராடியிருக்கின்றனர். 

கத்தி படத்தில் விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்த சென்னைக்கு குடிநீர் வரும் வீராணம் ஏரியின் ராட்சஷ குழாய்களில் ஏறி அமர்ந்து செயற்கையாக நீர்த்தட்டுப்பாட்டை உருவாக்கி அரசையும் அதிகாரிகளையும் திணறடிப்பார்கள் விவசாயிகள்.
அரசின் கவனத்தைக் கவர திரைப்படத்தில் விவசாயிகள் செய்தவற்றைத்தான் இன்று நிஜத்தில் டெல்லியில் செய்துகொண்டிருக்கிறார்கள். 

விவசாயி

தமிழகத்தில் ஏற்கெனவே இப்படி பல நூதன போராட்டங்கள் நடந்திருக்கின்றன...

பன்னாட்டு கம்பெனிகளுக்கும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்த அவசர சட்டம் கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சுற்றியுள்ள கிராம விவசாயிகள்,  தங்கள் வயல்களில் கருப்புக் கொடி ஏற்றி வைத்தனர். 

தஞ்சை

கூட்டுறவு வங்கிகளில் தங்கள் வீட்டுப் பெண்களின் நகைகளை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் தாலிகளை கொடுத்து 'அதிர்ச்சி' தந்தனர். நடவடிக்கை இல்லையென்றால், அடுத்த கூட்டத்தில் தங்கள் வீட்டுப்பெண்களை அழைத்து வந்து தாலியை கழற்றி ஆட்சியரிடம் கொடுக்கும் போராட்டம் நடத்துவோம்" என திகில் கொடுத்து விவசாயிகள் குழு. 

அதிகாரிக்கு நேர்ந்துவிட்ட ஆடுமாடுகள்

லால்குடியில் தண்ணீர் பிரச்னை அதிகமான ஓர்நாளில், அப்பகுதி விவசாயிகள் திடீரென தங்கள் ஆடு, மாடுகளை அழைத்துச் சென்று நீங்களே வைத்து பராமரியுங்கள் என லால்குடி சப் கலெக்டரின் வீட்டில் அத்தனையையும் கட்டிவிட்டு நடையைக் கட்டினர் அங்கிருந்து. 

ஆதிவாசியான விவசாயி!

தங்கள் நிலத்துக்கு பட்டா கொடுக்காமல் இழுத்தடித்த அதிகாரியைக் கண்டிக்கும்விதமாக கடந்த ஆண்டு, தென்மாவட்ட விவசாயிகள் குழு, உடலில் இலை தழைகளை மட்டும் அணிந்து ஒருநாள் தாலுக்கா அலுவலகம் வந்து நின்றனர். தாங்கள் இனி ஆதிவாசியாகப்போவதாக கூறி தங்கள் ரேஷன் கார்டுகளை தாசில்தார் முன் தூக்கிப்போட கிறுகிறுத்துப்போனார் தாசில்தார்.  

விவசாயி


பாடையில் விவசாயி

கடந்த 2014 ம் வருடம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது  உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் பாரத கிஷான் விவசாய சங்கத்தினர் நடத்திய 14 நாட்கள் தொடர் போராட்டத்தின் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதவிதமான போராட்டத்தை நிகழ்த்தி பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பினர் விவசாயிகள்.

முதல் நாள் அரை நிர்வாண போராட்டம், இரண்டாவது நாளில் நெற்றியில் நாமம், மூன்றாவது நாள் சந்நியாசிக் கோலம், நான்காவது நாள் குல்லா அணிந்தும், 5ஆம் நாள் வாயில் கருப்பு துணியுடன் அரை நிர்வாண போராட்டம் இறுதிநாளில் பாடைகட்டி ஒப்பாரி போராட்டமும் நடத்தினர். போராட்டத்தின் இறுதி நாளில்  தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டபோது மறுதினம் வந்த எல்லா தினசரிகளிலும் விவசாயிகள் போராட்டதான் முதல்பக்க செய்தி. 

சென்னை

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிப்பது, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், பயிர் கடன்களை ரத்து செய்வது, விளை நிலங்களை ஜப்தி செய்யத் தடை, கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், கடந்த 2015 ம்வருடம் நடத்திய போராட்டத்தின்போது தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டதோடு சாலையில் படுத்துறங்கும் போராட்டம் நடத்தி இரும்புப்பெண்மணி எனப்பட்ட ஜெயலலிதாவுக்கே ஷாக் தந்தனர். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் இதே கோரிக்கைகளுக்காக கடலில் இறங்கி கலகலக்கவைத்தனர் காவல்துறையை. போலீஸார் அவர்களை  மீட்டுவருவது குதிரைக்கொம்பான விஷயமாகிவிட்டது.

அய்யாக்கண்ணுவிவசாயிகளுக்கு வீட்டுக்காவல்

தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்த எந்தவித அறிவிப்பும் இடம் பெறாததை கண்டித்து கடந்த 2015ம் வருடம் மார்ச் மாதம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன் எதிரொலியாக அய்யாக்கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை காவல்துறை வீட்டுக்காவலில் வைத்தது. விவசாயிகளை வீட்டுக்காவலில் வைத்தது இதுவே இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை.

நான்தான் அடுத்த ஜனாதிபதி!- விவசாயி தந்த கிலி

விவசாயிகள் இந்த நூதன போராட்டங்களுக்கு 'விதை' போட்ட விவசாயி, கோவணம் தங்கவேல். கடந்த 2012 ம் ஆண்டு இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது அத்தனை வேட்பாளர்களையும் நெளியவைக்கும்படி ஒரு காரியம் செய்தார் கோவணம் தங்கவேல்.  ஆம்...ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்தார். வேட்பாளர்கள் நெளிந்ததற்கு காரணம், கடந்த முறை நடந்த ஜனாதிபதி தேர்தல்களின்போது மனுதாக்கல் செய்ய வந்த அவர் அணிந்துவந்தது வெறும் கோவணம் மட்டுமே.

 

அதுவரை விவசாயத்தை காக்க தங்கவேல் வைத்த கோரிக்கைகள் பத்திரிகைகளில் பல நாட்கள் கழித்துதான் வெளியானது. அவரது ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு மறுதினம் செய்தித்தாள்களில் முதற்பக்கம் கோவணம் தங்கவேல்தான் முக்கிய செய்தி. காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டு தரக் கோரி, திருச்சியில்  மண்ணில் புதைந்து நூதன போராட்டம் என தமிழத்தில் முடித்த தங்களின் போராட்டத்தைத்தான் இப்போது டெல்லியில் தொடர்கிறார்கள் விவசாயிகள். தங்கள் போராட்டத்தை அரசு இயந்திரம் புறக்கணிக்கும் அவலத்தை இன்று டெல்லி வீதிகளில் அம்மணமாய் நின்று கூவிக்கூவிச் சொல்கின்றனர் தமிழக விவசாயிகள். 

இதுநாள் வரை டெல்லியில் விவசாயிகள் மேற்கொண்ட போராட்டமுறைகள் பரபரப்பு செய்திகளாக மட்டும் இருந்த நிலையில் நிர்வாணப் போராட்டம் குறித்து பொதுவெளியில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. விவசாயிகளின் இந்த அதிகபட்ச உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு காரணத்தை தேடுகிறபோது முன்பு ஒருமுறை தென்னிந்திய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு நம்மிடம் சொன்ன வார்த்தைகள் பொருந்திப்போயின.

“ ஒரு தாய் கூட எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அழுகிற பிள்ளைக்குத்தான் முதலில் பாலுட்ட விரும்புவாள். குழந்தை யின் அழுகையைதான் அதன் பசியாக அவள் உணர்வாள். அப்படிதான் எங்கள் குரலை எழுப்புகிறோம். இந்த நாட்டில் விவசாயிகள் இரண்டாம்தரக் குடிமகனாகவே கருதப்படுகிறார்கள். நாங்கள் மேற்கொண்ட இந்த போராட்ட வடிவங்கள் விநோதங்கள் அல்ல; ஆண்டாண்டுகாலமாக போராடி கிடைக்காத உரிமைகளால் நாங்கள் அடைந்த விரக்தியும் வேதனைகளின் வெளிப்பாடு. “நாங்கள் சேற்றில் கால்வைத்தால்தான் நீங்கள் சோற்றில் கை வைப்பீர்கள்' என காலம் காலமாக பேசிப்பார்த்துவிட்டோம். எந்த செவிட்டுக்காதுகளுக்கும் அது ஏறவில்லை. இனி அப்படிப் பேசித்திரிவதில் அர்த்தமில்லை என உணரத்துவங்கிவிட்டோம். 

அய்யாக்கண்ணு1970 களில் 120 ரூபாயாக இருந்த பவுனின் விலை, இன்று 24 ஆயிரம் ரூபாய். அதாவது 200 மடங்கு அதிகம் இது. அன்று ஆசிரியர் சம்பளம் 90 ரூபாய். இன்று அது 400 மடங்கு அதிகரித்து 36,000 என ஆகியுள்ளது. அன்று எம்.எல். ஏ சம்பளம் 250. இன்று 220 மடங்கு அதிகரித்து 55000 ஆகியுள்ளது. அன்று வங்கிப்பணியாளரின் சம்பளம் 150 ரூபாய். இன்று 66 ஆயிரம். கிட்டதட்ட 440 மடங்கு. ஆனால் 40 ரூபாயாக இருந்த 60 கிலோ நெல்லின் விலை இன்று வெறும் 850 மட்டுமே. அதாவது 22 மடங்கு மட்டுமே அதிகரித்திருக்கிறது. இதுவே விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களில் 600 ரூபாய் மட்டுமே. இதுதான் இந்தியாவில் விவசாயத்தின் நிலை. 

70களில் 1 டன் கரும்பு 80 ரூபாய். அதை வெட்ட ஆள் கூலி 5 ரூபாய். 1970 களில் இருந்த மற்ற பொருட்களில் விலை பல நுாறு மடங்குகள் உயர்ந்துவிட்ட இன்றைய நிலையில் விவசாயி உற்பத்தி செய்யும் பயிர்களின் விலை அதற்கு நேரெதிராக உள்ளது வேதனைக்குரியது.

பொதுவாக தனிநபர் காப்பீட்டில் காப்பீடுதாரருக்கு விபத்து ஏற்பட்டால் உரிய பாலிஸித்தொகை  கிடைக்கும். ஆனால் விவசாயி தனது பயிருக்கு காப்பீடு செய்து சேதம் அடையும்போது அவர் வசிக்கும் தாலுக்கா முழுவதுமான பயிர்களும் நாசமாகியிருந்தால் மட்டுமே காப்பீட்டுத்தொகை கிடைக்கும். இல்லையென்றால் கிடைக்காது. இப்படி இன்சூரன்ஸிலும் பாகுபாடு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்ற அமைப்புகள் தங்கள் உரிமைகளை போராட்டங்கள் மூலமே வென்றெடுக்கின்றனர். சிறைசென்றாலும் அவர்களுக்கான சம்பளம் நிச்சயம் என்பதால் தயங்காமல் போராடுகிறார்கள். ஆனால் விவசாயி போராடுகிறேன் என தெருவுக்கு வந்தால் அவன் ஒருநாள் வாழ்வாதாரத்தை இழக்கவேண்டிவரும். ஒருநாள் பயிர்களை கவனிக்காமல் விட்டாலும் பெரும் சேதத்தை சந்திக்கநேரிடும். முதலுக்கே மோசம் ஆகி நட்டமடைவான். இதுதான் எங்களின் பலஹினம்.

அதுமட்டுமின்றி இயல்பாகவே சுய கவுரவம் அதிகம் கொண்ட விவசாயி சிறை செல்வதை அவமானமான விஷயமாக கருதுவான். இதுதான் நேற்று வரை விவசாயிகள் போராட்டங்களை நடத்தாததற்கு காரணம். ஆனால் இன்று நாட்டில் நடக்கிற சம்பவங்களால் நாமும் போராடினால்தான் எதையும் பெற முடியும் என்பதை உணர்ந்துகொண்டோம். உரிமைகளுக்காக ரோட்டில் இறங்கி போராட தயாராகிவிட்டோம். எங்கே பேனர் வைத்துக்கொண்டு போராடுவதை பத்திரிகைகளும் பத்தோடு பதினொன்றாகத்தான் கருதி செய்தகளை தவிர்க்கின்றன. அந்த வகையில் எங்கள் துயரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் முன் பொதுசமூகத்திற்கு சொல்வது முக்கியமாகிறது.

அய்யாக்கண்ணு

மக்களின் எழுச்சியைப்பெறாத எந்த போராட்டமும் அரசின் கவனத்திற்கு வராது. அப்படி மக்களின் எழுச்சியைப் பெற கொளுத்தும் வெயிலில் உருள்கிறோம். கடலில் குதிக்கிறோம், மரணக்குழியில் படுக்கிறோம், பிணமாக கிடக்கிறோம். சாலையில் போலீஸாரிடம் அடிபடுகிறோம். மலைக்கோட்டையிலிருந்து குதிக்கவும் தயாரானோம். எங்கள் உரிமைகளை பெற வேறு வழியில்லை. எங்கள் குரல் அரசை சென்றடைய நாங்கள் இதைத்தான் செய்யவேண்டியிருக்கிறது.  நாராயணசாமி காலத்தில்கூட ஒருமுறைதான் சிறைசென்றனர். இதுவரை நாங்கள் 6 முறை ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறோம். எங்கள் மரணம்தான் அடுத்த தலைமுறையிலாவது விவசாயியை வாழவைக்கும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்”  

துயரம் வழியும் விவசாயிகளின் போராட்ட வடிவம் உணர்ச்சிகரமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. அரைநாண் கயிறுகூட உடலில் இன்றி டெல்லி வீதிகளில் விவசாயிகள் நிர்வாணமாக உருள்வதற்காக வெட்கப்படவேண்டியது விவசாயிகள் அல்ல; அவர்களை கண்டுகொள்ளாத அரசு!

- எஸ். கிருபாகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்