“தமிழக முதல்வரே... நீங்களும் விவசாயிதானே... அந்த அம்மணம் உங்களை பாதிக்கவில்லையா!?” - எளியவனின் கடிதம்

எடப்பாடி பழனிசாமி

ரியாதைக்குரிய முதல்வர் கே. பழனிசாமி அவர்களுக்கு,

இப்போதுதான் நான் அருங்காட்சியகம் சென்று திரும்பினேன். அந்த அருங்காட்சியகத்தை உன்னோடு சேர்ந்து ரசிக்க விரும்பினேன் தெரியுமா...? அந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு அழகான ஓவியத்தை தனியனாக நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போது உன்னை நினைத்து நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா..? ஒருநாள் நாம் இருவரும் ஒன்றாகச் செல்லவேண்டும். சொர்க்கத்துகே சென்றாலும் பிரியமானவர்கள் துணை இல்லை என்றால் வெறுமையாகத்தான் இருக்கும் என்பதை இன்று உணர்ந்தேன். 

அன்பு முத்தங்கள்...!

அய்யோ பதறாதீர்கள், திருவாளர் முதல்வர் அவர்களே... இது உங்களுக்கான வார்த்தைகள் அல்ல. இது காதல் ததும்ப ததும்பக் கலீல் ஜிப்ரான் மேரிக்கு எழுதிய கடிதம். இது மாதிரியான காதலை... காதல் கடிதங்களைத்தான் என் தலைமுறை தங்களின் பிரியமானவர்களுக்கு எழுத விரும்புகிறது. காதலில் லயிக்க விரும்புகிறது. நானும்தான் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களே. 
மஞ்சள் சூரியன் மெல்ல மறையும் ஒரு மாலைப்பொழுதில், வெம்மை அடங்கிய கடற்கரை மணலில் அமர்ந்துகொண்டு என் பிரியமான மனைவிக்கும், மகளுக்கும்... இதுபோன்ற எழுத்துகளில் என் காதலைக் கடத்த விரும்புகிறேன். ஆனால், அப்படியாகவா தமிழகச் சூழல் இருக்கிறது....? இன்னும் கொச்சையாக கோவை சரளாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்..."எங்கள் கிரகம்...உங்களுக்காக எழுதிக்கொண்டிருக்கிறோம்”. சரி... வர்ணனைகளை விடுத்து விஷயத்துக்கு வருகிறேன். 

“திரு.பழனிசாமி என்னும் பண்ணையார்” 

எடப்பாடி பழனிசாமிசோம்பல் உடுத்தியிருக்கும் ஒரு ஞாயிற்றுக்கிழமை... ஏதோ ஒரு விஷயத்தை இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக தேர்தலின்போது, நீங்கள் தேர்தல் ஆணையத்துக்குக் கொடுத்திருந்த பிரமாணப் பத்திரத்தைப் படிக்க நேர்ந்தது. மடிக்கணினியில் கீழ்நோக்கி இருக்கும் அம்புக்குறியை அழுத்திக்கொண்டே வரும்போது, 17-வது பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த விஷயத்தைப் பார்த்தேன். அது உங்கள் தொழில் மற்றும் வேலை குறித்த விவரங்களைப் பதிந்திருந்தீர்கள்.. பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து ஓராண்டு ஆகிவிட்டது. இப்போது நீங்கள் முதல்வராக வேறு ஆகிவிட்டீர்கள். நீங்கள் அதில் என்ன தாக்கல் செய்திருந்தீர்கள் என கொஞ்சம் நினைவூட்டவா...? 

உங்களது தொழிலாக நீங்கள் விவசாயத்தைக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். பின், அந்த பிரமாணப் பத்திரத்தில் தேடியபோது உங்களுக்குப் பூர்வீகச் சொத்தாக 15.65 ஏக்கர் இருக்கிறது என்பதை அறிந்தேன். இதைஅறிந்த பின் கொஞ்சம் பதறித்தான் போனேன் திரு. பழனிசாமி. ஏன் பதற்றம் என்று சொல்கிறேன்.

அந்த நிலத்தை நீங்கள் வாங்கவில்லை...அது உங்கள் பூர்வீகச் சொத்து. 15 ஏக்கர் என்பதை வேலி அளவில் கணக்கிட்டால் 2 வேலி நிலம்... எங்கள் டெல்டா சொலவடையில் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பாட்டனும், பூட்டனும் சிறு பண்ணையார்களாக இருந்துள்ளனர். என்னதான் பண்ணையார்களாக இருந்தாலும், அவர்களுக்கு விவசாய முறைகளும். அதன் வலிகளும் கொஞ்சமேனும் தெரிந்திருக்கும், அது ஜீன்களாக உங்களுக்கும் கடத்தப்பட்டிருக்கும். கடத்தப்பட்டிருக்க வேண்டும். அதுதான் அறிவியல். ஆனால், பழனிசாமி என்னும் பண்ணையார் எப்படி இந்த அறிவியலுக்கு முரணாக நிற்கிறார் என்பதால் ஏற்பட்ட பதற்றம் அது. 


உங்களின் மரபணுக்களில் கொஞ்சமேனும் அந்த விவசாயத்தின் வலிகள் உங்கள் மூதாதையர்களிடமிருந்து கடத்தப்பட்டிருக்குமானால், டெல்லியில், தஞ்சாவூரில் நம் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கும்போது... டெல்லியில் நம் விவசாயிகள் ஆடை துறந்தபோது... நீங்கள் வெகுவாகப் பதறியிருப்பீர்கள்...துடித்துப் போயிருப்பீர்கள்...? அடுத்த விமானம் பிடித்து டெல்லி போயிருப்பீர்கள். ஆனால், நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. அதனால்தான், நீங்கள் அறிவியலுக்கு சவாலாக இருக்கிறீர்கள் என்கிறேன்.

“சவாலாக எல்லாம் இல்லை... பணம் வந்தபின் என் நினைவுகளிலிருந்து விவசாயத்தை உதிர்த்துவிட்டேன்”  என்கிறீர்களா? அப்படியானால், அது உங்களுக்கே பேராபத்துதான் திரு. பழனிசாமி. ஆம், பணத்துக்காக எல்லாவற்றையும் உதிர்த்துக்கொண்டே சென்றால்...நாளை உங்கள் நினைவுகளில் அசைபோட அன்பான, அழகான விஷயங்கள் எதுவும் இல்லாமல் அம்மணமாகத்தான் நிற்கும். உடல் அம்மணத்தைவிட, நினைவுகளின் அம்மணம் உங்களை கூனிக் குறுகிப்போகச் செய்யும்!

“நீங்கள் எல்லாருக்குமான முதல்வர்”

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பல தற்செயலான விஷயங்கள் நடக்கின்றன. நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை? ஆனால், இந்திய அரசியலமைப்பின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கும் நான், நீங்கள் முதல்வர் ஆனதை தற்செயல் விஷயமாக நினைக்கவில்லை. அது பெரும்பான்மை மக்களுக்குப் பிடிக்கிறதோ... இல்லையோ... ஆனால், அது சட்டப்படி நடந்த ஒன்றுதான். ஆக, நீங்கள் எங்கள் எல்லோருக்குமான முதல்வர். இதைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும் நானும் சரி... டெல்லியில் அம்மணமாகப் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளும் சரி... உங்கள் ஆளுகையின் கீழ்தான் வாழ்கிறோம். எங்கள் பிரச்னைகளை உங்களிடம்தான் முறையிட்டாக வேண்டும். 

அதனால்தான் கேட்கிறேன், தயவு செய்து ஆர்கே நகர் நினைவுகளில் இருந்து வெளியேவந்து கொஞ்சம் சமூகத்தை எட்டிப் பாருங்கள். பதற்றம் வேண்டாம்... தேர்தல் தள்ளிப்போய்விட்டது, தினகரன் ஏதும் தொந்தரவு செய்ய மாட்டார்... நீங்கள்தான் முதல்வராகத் தொடரப் போகிறீர்கள். எப்படி நீங்கள்தான் முதல்வர் என்பதை நாங்கள் நம்புகிறோமோ... அதைக் கொஞ்சம் நீங்களும் நம்புங்கள் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களே.

எடப்பாடி பழனிசாமி

நீங்கள் வேண்டுமானால், உங்கள் நிலத்தில் இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம்... இப்போதும் உங்களது பூர்வீக நிலம் இருக்கும் நெடுங்குளம் கிராமத்திலிருந்து உங்களுக்கு அரிசி வரலாம். ஆனால், எங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அப்படியல்ல... நாங்கள் இன்னும் சொந்தமாக ஒரு சதுரடி நிலம்கூட இல்லாமல்தான் வாழ்கிறோம். பகட்டான மொழியில் அழைக்கப்படும் Square Feet Farming செய்வதற்கும் எங்களுக்கு நேரமில்லை... எங்கள் பகுதியான தஞ்சையில் எளிய உழவர்கள் உற்பத்தி செய்யும் உணவைத்தான் நான் இன்னமும் சாப்பிடுகிறேன். அந்த விவசாயிகள் தஞ்சையிலும், டெல்லியிலும் போராடிக்கொண்டிருக்கும்போது, நான் எப்படி சந்தோஷமாக உணவு உண்ண முடியும்?

அந்த சுயநலத்தாலும்தான் கேட்கிறேன்... தயவு செய்து தஞ்சைக்கும், டெல்லிக்கும் பயணித்து, விவசாயிகளுடன் உரையாடி, இந்த அரசு உங்களுக்காக இருக்கிறது என்ற நம்பிக்கையை விதையுங்கள். அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்யுங்கள். 

ஏதேனும் கடுமையான மொழியை நான் பயன்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள் முதல்வர் அவர்களே.  நீங்கள் எங்களுக்கான முதல்வர் என்ற உரிமையில் பேசிவிட்டேன். 

இப்படிக்கு,
என்றாவது நீங்கள் நல்லாட்சி செய்வீர்கள்
என்று நம்பும் எளிய மனிதன்

மு. நியாஸ அகமது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!