வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (11/04/2017)

கடைசி தொடர்பு:16:14 (12/04/2017)

"கிரிமினல்... கிரிமினல்... கிரிமினல்...!" : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்-35

சசிகலா , ஜெயலலிதா

ஆட்சியைக் கலைக்க ‘பட்ஜெட்’டை பயன்படுத்து! 

தி.மு.க ஆளும்கட்சியாக இருக்கும்போதே, மதுரை, மருங்காபுரி தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க வென்றது.  இத்தனைக்கும் அந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யக்கூட ஜெயலலிதா போகவில்லை. ஆனாலும் அ.தி.மு.க வென்றது. அந்த அரசியல் ஆச்சரியம் தமிழக அரசியல் களத்தில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இனி தமிழக அரசியலில் ஜெயலலிதா தவிர்க்க முடியாத சக்தி என்பதை எதிர்கட்சிகள் அனைத்தும்  ஏகமானதாக உணரத் தொடங்கின. காலம் கனிந்து வரும் நேரத்தில், ‘அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்; எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று ஜெயலலிதா கடிதம் எழுதியது, அந்தக் கடிதம் முரசொலியில் வெளியானது, அதையொட்டி நடராசன் கைது செய்யப்பட்டது என்று தமிழக அரசியல் அப்போது ட்வீஸ்டுகளால் நிரம்பிக்கிடந்தது. யாராலும் அடுத்து என்ன என்பதைக் கணிக்க முடியாத அசாதரண சூழல்களோடு 1989-ம் ஆண்டு நகர்ந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட குழப்பமான நேரத்தில் பட்ஜெட்டுக்காக  சட்டமன்றத்தில் தேதி குறிக்கப்பட்டது. மார்ச் 25-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்த கருணாநிதியை, அங்கிருந்து அகற்றுவதற்கான செயல் திட்டமும் அந்தக் கூட்டத்தொடரில் இருந்தே தொடங்கியது. 

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு புது அசைன்ட்மென்ட்!

நடராஜன் ‘அரசியலைவிட்டுப் போகிறேன்’ என்று சொன்ன ஜெயலலிதாவை நடராசன் விடவில்லை. “ஜெயலலிதாவை முதலமைச்சராக்கி, அவருக்குப் பக்கத்தில் தன் மனைவி சசிகலாவை ஆணியடித்து உட்கார வைக்க வேண்டும்” என்ற கனவில் நடராசனுக்கு 5 வருடங்கள் காத்திருக்கப் பொறுமை இல்லை. கருணாநிதியின் அரசாங்கத்தைக் கலைத்தே தீர வேண்டும் என்று களமிறங்கினார். அதற்கு மார்ச் 25-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரை எப்படிப் பயன்படுத்தலாம் என்று திட்டம் தீட்டினார். அந்தத் திட்டத்துக்கு ஒத்திகை பார்க்க, மார்ச் 24-ம் தேதியே அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை போயஸ் கார்டனுக்கு வரச்சொல்லி வகுப்பெடுத்தனர். மறுநாள் கூடப்போகும் சட்டசபையை கலவரக்களமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். 

1989 மார்ச் 25-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடியது. பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் ஆஜராகி இருந்தனர். சபை நிரம்பி இருந்தது. சபாநாயகர் தமிழ்குடிமகன் திருக்குறள் வாசித்து அவையைத் தொடங்கிவைத்தார். முதல் அமைச்சர் கருணாநிதி, அமைச்சர் க.அன்பழகன் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குப் பின்னால் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் இருந்தனர். அதற்கும் பின்னால்தான் துரைமுருகன் உட்கார்ந்திருந்தார். எதிர்கட்சிகள் பக்கம் முதல்வரிசையில் ஜெயலலிதா அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அவர் உதடுகள் எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தன. ஜெயலலிதாவுக்குப் பின்னால், மற்ற எதிர்கட்சிகளின் பெண் எம்.எல்.ஏ-க்களும் இருந்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பொன்னம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பாப்பா உமாநாத்தும் அந்த அவையில் நடந்தவற்றுக்கு சாட்சியாக இருந்தனர். 

கிரிமினல்.. கிரிமினல்... கிரிமினல்...

முதல் அமைச்சர் கருணாநிதி பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்பே ஜெயலலிதா கோபத்தோடு எழுந்தார். “நடராஜன் கைது செய்யப்பட்ட விவகாரம், தனது ராஜினாமா கடிதம் முரசொலியில் வெளியான விவகாரம்” குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றார். சபாநாயகர் தமிழ்குடிமகன், “பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மற்ற விவகாரங்களை விவாதிக்க முடியாது. சபை விதிகளில் அதற்கு இடமில்லை. திங்கள்கிழமை நீங்கள் சொல்லும் விவகாரங்கள் குறித்த விவாதத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு, முதல் அமைச்சர் கருணாநிதியை பட்ஜெட்டை வாசிக்க அழைத்தார். கருணாநிதி பட்ஜெட்டை வாசித்தபோது, அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த ஜெயலலிதா, “கிரிமினல்... கிரிமினல்... கிரிமினல்...” என்று முனுமுனுத்துக் கொண்டே இருந்தார். அந்த வார்த்தைகள் கருணாநிதியின் காதுகளிலும் விழுந்தன. ஆனாலும் அவர், தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எழுந்த ஜெயலலிதா, முதல் அமைச்சர் கருணாநிதிக்கு எதிரில் நின்று, அவருக்கு நேராக சுட்டுவிரலை நீட்டி “நீ ஒரு கிரிமினல்” என்று கத்தினார். ஒருமுறை அல்ல... இருமுறை அல்ல... பலமுறை அந்த வார்த்தையைச் சத்தம்போட்டுச் சொன்னார். சரியாக அந்த நேரத்தில், ஜெயலலிதாவுக்குப் பின்னால் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டனர். கருணாநிதிக்கு ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது புரிந்துவிட்டது. ஆனாலும் அவர் பட்ஜெட்டை வாசிப்பதிலேயே குறியாக இருந்தார். அதில் எரிச்சல் அடைந்த ஜெயலலிதா, “நீ ஒரு கிரிமினல் குற்றவாளி.... நீ பட்ஜெட்டை படிக்க நான் அனுமதிக்கமாட்டேன்” என்று கருணாநிதியைப் பார்த்து ஒருமையில் ஆவேசமாகக் கத்தினார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை ஜெயலலிதா ஒருமையில் ‘டா’ போட்டே சட்டமன்றத்தில் பேசினார் (கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பாப்பா உமாநாத் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் அதை உறுதி செய்துள்ளார்).

ஜெயலலிதா, திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்

துரைமுருகன் துச்சாதனன் ஆக்கப்பட்ட கதை!

கருணாநிதியின் கையில் இருந்த பட்ஜெட் பேப்பர்களில் சில பக்கங்களைப் பிடுங்கி கிழித்து எறிந்தார். அதோடு ‘குத்துடா அவனை’ என்ற கட்டளையும் ஜெயலலிதாவிடம் இருந்து பிறந்தது. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் கருணாநிதியும் ஆவேசம் அடைந்தார். ஜெயலலிதாவைப் பார்த்து “வார்த்தைகளை அளந்து பேசவேண்டும்” என்று எச்சரித்தார். அதைக் கருணாநிதி சொல்லி முடிப்பதற்குள், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் கருணாநிதியைப் பிடித்து பலமாகக் கீழே தள்ளினார். சுதாரித்துக் கொண்ட கருணாநிதி, கீழே விழுந்துவிடாமல் இலேசான  தள்ளாட்டத்துடன் சமாளித்துக் கொண்டார். ஆனால், அவருடைய மூக்குக் கண்ணாடி கழன்று விழுந்தது. உடனே, பின்வரிசையில் இருந்த வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட சிலர் கருணாநிதியைச் சூழ்ந்து நின்று அ.தி.மு.க-வினரை எச்சரித்தனர். மற்ற தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆத்திரமடைந்து புத்தகக் கட்டுக்களை தூக்கி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பக்கம் வீசி எரிந்தனர். பதிலுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பக்கம் புத்தகக்கட்டுகளை வீசி எரிந்தனர். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஓடிப்போய் காங்கிரஸ் எம்.எல்.ஏ பொன்னாம்மாளின் மேஜையில் இருந்த மைக்கைக் கழற்றி வீரபாண்டி ஆறுமுகம் மண்டையைப் பிளந்தார்.

வீரபாண்டி ஆறுமுகம் அடிபட்டதும் அவரைத் தாங்கிப்பிடிக்க துரைமுருகன் ஓடிவந்தார். சட்டமன்றம் கூச்சல்களால் அதிர்ந்தது. கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், அமைச்சர் சாதிக் பாட்சா உள்ளிட்டவர்கள் உடனே அவையை விட்டு வெளியேறினார்கள். அந்த நேரத்தில் ஜெயலலிதாவிடம் இருந்து திடீரென்று “என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கூச்சல் கிளம்பியது. அதையடுத்து அவரும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் அவையில் இருந்து வெளியேறினார்கள். வெளியில் வந்த ஜெயலலிதா தலைவிரிகோலமாக இருந்தார். அவர் சேலை கிழிந்து இருந்தது. “ஜெயலலிதாவுக்கு ஒன்றும் இல்லையே... பிறகு ஏன் அவர் என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கத்தினார் என எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த மற்ற கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு குழப்பமாக இருந்தது. சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா நேராக ராஜ் பவன் சென்றார். அன்றைய ஆளுநர் பி.சி.அலெக்சாண்டரிடம் புகார் கொடுத்தார். அதில், “ஆளும்கட்சி எம்.எல்.ஏ துரைமுருகன் சட்டமன்றத்தில் என் சேலையைப் பிடித்து இழுத்து என்னை மானபங்கப்படுத்த முயன்றார்” என்று குறிப்பிட்டு இருந்தார். அங்கிருந்து கிளம்பி போயஸ்கார்டன் வந்த ஜெயலலிதா அங்கு வைத்துப் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியிலும், துரைமுருகன் தன் சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றதாக தெரிவித்தார். ஆனால், உண்மையில் அன்று ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் கூட துரைமுருகன் வரவில்லை. அவர் மண்டை உடைந்த வீரபாண்டி ஆறுமுகத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் நின்றிருந்தார். ஆனால், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டால் தமிழக அரசியல் வரலாற்றில் துரைமுருகனுக்கு துச்சாதனன் பட்டம் கிடைத்தது. ‘ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்த துரைமுருகன்’ என்று எதிர்கட்சிகளின் மேடைகளில் இன்னமும்கூட துரைமுருகன் துகிலுரிக்கப்படுகிறார். 

டெல்லி நாடகம் தொடக்கம்!

போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்த ஜெயலலிதா, நேராக தேவகி மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டர். உடனே அவரை நலம் விசாரிக்க மத்திய அமைச்சர் தினேஷ் சிங்கை அனுப்பி வைத்தார் ராஜீவ் காந்தி. அவரிடம் கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா. ‘இதை வைத்து எல்லாம் ஆட்சியைக் கலைக்க முடியாது’ கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லிவிட்டு தினேஷ் சிங் மீண்டும் டெல்லி பறந்தார். மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஜெயலலிதாவும் டெல்லி விரைந்தார். அங்கு பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பிலும் மத்திய அமைச்சர் தினேஷ் சிங் உடன் இருந்தார். அங்கும் ஜெயலலிதா வைத்த கோரிக்கை, “கருணாநிதி ஆட்சியைக் கலைத்துவிடுங்கள். நான் காங்கிரஸூடன் கூட்டணிக்குத் தயார். இருவரும் சேர்ந்து தேர்தலைச் சந்திப்போம்” என்பதுதான். ராஜீவ் காந்தி என்ன சொன்னாரோ, அதன்பிறகு ஜெயலலிதா பூட்டாசிங்கை சந்தித்தார். ஜனாதிபதி வெங்கட்ராமனைச் சந்தித்து புகார் கொடுத்தார். அதன்பிறகு விறுவிறுவென டெல்லியில் காட்சிகள் மாறின. கருணாநிதியின் ஆட்சியைக் கலைப்பதற்கான காரணங்கள் ஒவ்வொன்றாகத் தேடித்தேடி எடுக்கப்பட்டன. கடைசியில் விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்று சொல்லி 1991-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது. ஜெயலலிதா முதல் அமைச்சர் நாற்காலியை நோக்கி முன்னேற்றிப் போய்க் கொண்டிருந்தார். நடராசன் அவருக்குப் பின்னால் இருந்து வேகமாக காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். 

கதை தொடரும்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஜோ.ஸ்டாலின்.
படங்கள்: சு.குமரேசன்.

 


டிரெண்டிங் @ விகடன்