வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (11/04/2017)

கடைசி தொடர்பு:16:16 (12/04/2017)

ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் எப்போது?

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஆர்.கே.நகர் தொகுதி சாதனை படைத்திருக்கிறது. பணப்பட்டுவாடா புகார்கள், விதிமுறை மீறல்கள் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்திருக்கிறது.

இரண்டு விதிகள்

இனி ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடைபெறும்? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே நேரத்தில், தேர்தல் குறித்து 2 முக்கிய விதிமுறைகள் கவனிக்கத்தக்கவை.
1) இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் ஒரு ஆண்டுக்குள் பொதுத்தேர்தல் நடக்கும் சூழல் இருந்தால், காலியாக இருக்கும் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
2) இடைத்தேர்தல் நடத்த முடியாத  சூழல் இப்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் கருதினால், 5 மாதங்கள் வரை தேர்தலை தள்ளி வைக்கலாம்.
இதில் 2-வது விதிமுறைப்படிதான் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

சூழல் எப்படி மாறும்?

தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் மூலம் விதிமுறை மீறலில் ஈடுபடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளும் என்று தேர்தல் கமிஷன் நினைக்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சொல்கின்றனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிக அளவு பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்த அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் சில மாதங்கள் கழித்துத் தேர்தல் நடைபெற்றது. ஏற்கெனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பணப்பட்டுவாடா குற்றசாட்டுக்கு உள்ளான, அதிரடி சோதனைகளுக்கு உள்ளான அ.தி.மு.க வேட்பாளர்தான் மீண்டும் போட்டியிட்டனர். தி.மு.க வேட்பாளரும் மாற்றப்படவில்லை. மீண்டும் பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்தன. ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. வழக்கமான ஒரு தேர்தலாகத்தான் கடந்து சென்றது.

வாக்குகள் விற்பனை

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார். எனவே, 'தேர்தல் நடத்துவதற்கான சூழல்' என்று தேர்தல் ஆணையம் எதைக் குறிப்பிடுகிறது என்று தெரியவில்லை. இன்னும் 5 மாதங்கள் கழித்து ஆர்.கே.நகரில் தேர்தல் நடைபெற்றாலும் கூட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குகளை விலைக்கு வாங்கும் நடைமுறையைக் கைவிட்டு விட மாட்டார்கள். புதுப்புது வழிமுறைகளில் வாக்குகளை விலை பேசத்தான் செய்வார்கள். அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் இப்போது உள்ள மிகப்பெரிய கேள்வி.


இது குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம். "ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ இறந்து விட்டால், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடப்பட வேண்டும் என்பது பொதுவான விதி. அதன்படிதான் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. விதிமுறை மீறல் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு சூழல் எழும்போது தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்ததால் அப்போது நடத்த வேண்டிய பொதுத்தேர்தல் சில மாதங்கள் கழித்துத்தான் நடத்தப்பட்டது. எனவே, அசாதாரண சூழல்களில் தேர்தல் தள்ளி வைக்கப்படலாம். 5 மாதங்கள் கழித்து ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது" என்றார்.

-கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்