வெளியிடப்பட்ட நேரம்: 10:19 (12/04/2017)

கடைசி தொடர்பு:16:21 (12/04/2017)

“எம்.ஜி.ஆருடன் பேசத் தயங்கிய சிவாஜி!” - நூற்றாண்டு நாயகன் எம்ஜி..ஆர் - 29

எம்.ஜி.ஆர்

சிறையிலிருந்து விடுதலை ஆகிவந்த கலைவாணர் பைத்தியக்காரன் படத்தில் தானும் ஒரு வேடத்தில் நடித்தார்.  தன் சிறை அனுபவங்களை 'ஜெயிலிக்குப் போய் வந்த...' என பாட்டாகப் பாடிய அப்படம் வெற்றிபெற்றது.  மீண்டும் திரைப்படத்துறையில் பரபரப்பானார் கலைவாணர். ஆனால்  சிறை செல்லும் பெரும் புகழுடன் விளங்கிய தியாகராஜ பாகவதரின் வாழ்வு அதற்கு நேர்மாறாகிப்போனது. 

மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்துவங்கிய பாகவதருக்கு முந்தைய ராசி கைகொடுக்கவில்லை. பாடல்களையும் பழமையான நடிப்பையும் மக்கள் மறக்கத்துவங்கிய காலம் அவரது அடுத்தடுத்த சினிமா முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பொருளாதார சிக்கலைத் தவிர்க்கவும் தான் இழந்த பெருமையை தக்கவைக்கவும் தன் இறுதிக்காலத்தில் சில படங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவரது காலம் முடிந்துபோயிருந்ததை அவர் உணரவில்லை. திரையுலகில் கருணாநிதி, எம்.ஜி.ஆர் சிவாஜி என புதிய தலைமுறை கலைஞர்கள் தலையெடுத்து தங்களுக்கென ரசிகர் வட்டத்தை பெருக்கிவைத்திருந்ததால்  தியாகராஜ பாகவதரின் படங்கள் எடுபடவில்லை. சிறைபோய்வந்தபின் 1948 ல் வெளியான 'ராஜமுக்தி' தவிர அமர கவி, சியாமளா, புதுவாழ்வு, சிவகாமி போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை. கெயிட்டி தியேட்டரில் 3 தீபாவளிகளை கடந்து ஓடிய அவரது ஹரிதாஸ் படத்தின் வெற்றியில் நுாறில் ஒரு மடங்கு கூட அவரது இந்தப் படங்களுக்கு  கிடைக்கவில்லை.

தன்னைப் போற்றிப் பாராட்டிய சினிமா உலகம் இப்போது தன்னை புறக்கணிப்பதை அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. தான் சிறையிலிருந்தபோது திரையுலகினர் சிலர் நடந்துகொண்ட முறை அவருக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியிருந்தது. அவர் தனிமையை நாடி மக்களிடம் இருந்து ஒதுங்கி வாழத் தலைப்பட்டார். அதனால் பிரபலங்களை தவிர்த்து ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்தத்துவங்கினார்.  தங்கத்தட்டில் உண்டு, பட்டுத்துணி படுக்கையில் உறங்கி தமிழகமே கொண்டாடிய தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் யதார்த்தத்தை உணர்ந்து திருச்சிக்கே ரயில் ஏறினார். தன் இறுதிக்காலத்தில் சர்க்கரை நோயினால் கண்பார்வை இழந்து மன அழுத்தத்தால் உடல்நலமும் குன்றி தான் யார் என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் திருச்சி மாரியம்மன் கோவிலில் வாழ்ந்து தன் வாழ்வை முடித்துக்கொண்டார். 

தியாகராஜ பாகவதர்

வாழ்வின் யதார்த்தத்தை செவிட்டில் அறைந்து சொன்ன தியாகராஜபாகவதரின் வாழ்க்கையை எம்.ஜி.ஆர் தன் மனதில் பதியவைத்துக்கொண்டார். தன் வாழ்வின் வெற்றிகரமான சந்தர்ப்பங்களில் எல்லாம் எம்.ஜி.ஆருக்கு நினைவில் வருவது இரண்டு நபர்கள். ஒன்று கே.பி.கேசவன் மற்றொருவர் தியாகராஜபாகவதர். வாழ்வின் நிலையாமையை தங்கள் வாழ்க்கையின் மூலமே எடுத்துச்சொன்ன சக கலைஞர்களான இந்த இருவர்தான் எம்.ஜி.ஆரை எந்த காலத்திலும் புகழ்போதையில் மிதந்து விடாதபடி தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தவர்கள். 

மீண்டும் பின்னோக்கிப் பயணிப்போம்...

1940 -களின் மத்தியில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜி.ஆரின் குடும்பம் வசித்துவந்தது. சினிமாவில் சிறுசிறுவேடங்களில் நடித்து புகழ்பெறத்துவங்கிய எம்.ஜி.ஆர் அச்சமயத்தில் நேரம் கிடைக்கிறபோதெல்லாம் நாடகங்களுக்கு தவறாமல் செல்வது வழக்கம். நாடகங்கள் மத்தியில் பெரும்வரவேற்பைப் பெற்றிருந்த காலம் என்பதால் சென்னையின் பிரபல நாடகக் கொட்டகையான ஒற்றைவாடைத்தியேட்டரில் அப்போதெல்லாம் தொடர்ந்து நாடகங்கள் நடக்கும். பல பெரிய நாடகக்குழுக்கள் பல மாதங்கள் ஒப்பந்தம் போட்டு அங்கு நாடகம் நடத்துவார்கள். 

அப்போது மங்கள கான சபை என்ற நாடகக்குழு அங்கு நாடகம் நடத்திக்கொண்டிருந்தது. அந்நாளில் மீண்ட சொர்க்கம், கள்வர் தலைவன், பம்பாய் மெயில், லட்சுமிகாந்தன்  போன்ற அவர்களின் நாடகங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பெற்று வரவேற்பைப் பெற்றிருந்தன. ஆச்சர்யமும் அதிர்ச்சியும் என்னவென்றால் லட்சுமிகாந்தன் நாடகம் எங்கு நடந்தாலும் தவறாமல் ஒருவர் முன்வரிசையில் அமர்ந்து பார்த்து ரசிப்பார். அவர் வேறு யாருமல்ல; தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனும் சிறைசெல்லக் காரணமான பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன்!... சென்னையில் மங்கல கான சபை நாடகக்குழு முகாமிட்டிருந்தபோது கொட்டகைக்கு அருகிலேயே ஒரு வீட்டில் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அதே தெருவில்தான் எம்.ஜி.ஆரின் வீடு இருந்தது. ஒருமுறை மங்கல கான சபையினரின் நாடகத்திற்கு சென்ற எம்.ஜி.ஆருக்கு நாடகம் பிடித்துப்போனது. திறமைசாலிகளை கண்டால் உடனே பாராட்டும் குணம் கொண்ட எம்.ஜி.ஆர், நடிகர்களின் வீட்டிற்கு சென்று நாடகத்தில் தன்னை கவர்ந்த ஒவ்வொரு காட்சியையும் பட்டியலிட்டு அந்த வேடங்களில் நடித்தவர்களை பாராட்டித்தள்ளினார். அப்படி பாராட்டப்பட்ட நடிகர்களில் கணேசன் என்ற இளம் நடிகரும் ஒருவர். 

என்.எஸ்.கிருஷ்ணன்இயல்பாக பொன்னிறம் கொண்டவரான எம்.ஜி.ஆர், சினிமாவில் நடிப்பதற்காக உடற்பயிற்சி செய்து உடலை உறுதியாக்கி வைத்திருந்ததால் அந்த முதல் சந்திப்பிலேயே ஒரு ராஜகுமாரனைப்போல் கணேசனுக்கு தோன்றியது எம்.ஜி.ஆரின் தோற்றம். பிரமித்தார் கணேசன். இதனால் அவருடன் பேசத்தயங்கினார். ஆனால் அடுத்தடுத்த சந்திப்புகளிலும் கணேசனின் நடிப்பை எம்.ஜி.ஆர், “ கணேசு, இன்று உன் நடிப்பு அருமை” என சிலாகிக்க, மெல்ல மெல்லத் தயக்கம் விலகி எம்.ஜி.ஆருடன் சகஜமானார் கணேசன். 'வஞ்சகமில்லாமல் இன்னொரு நடிகரைப் புகழ்ந்து தள்ளும் இந்த மனிதர் வித்தியாசமானவர்தான். இந்த நல்ல மனிதர் நிச்சயம் ஒருநாள் பெரிய நடிகராக வருவார்' என தன் மனதில் கணித்துக்கொண்டார் கணேசன். நட்பு இறுகி கணேசனை தம்பி என வாஞ்சையுடன் அழைத்தார் எம்.ஜி.ஆர். அதே வாஞ்சையுடன் அண்ணா என்றழைத்தார் கணேசன். 

எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட நெருக்கம் அவரது வீட்டாரிடமும் தொடர்ந்தது. நாடகம் நடக்காத நாளில் எம்.ஜி.ஆர் வீட்டில்தான் இருப்பார் கணேசன். கணேசனின் சுபாவம் பிடித்துப்போய் சொந்த மகனைப்போல் அன்பு செலுத்தினார் சத்தியபாமா. தினமும் மதிய சாப்பாடு ஒருநாள் மதியம், எம்.ஜி.ஆர் வீட்டில் ஓய்வாக இருந்தார். சாப்பாட்டு வேளை வந்ததும் 'அம்மா சாப்பாடு போடும்மா ' என சத்யபாமா முன் போய் நின்றார். “ பொறுடா...இன்னும் உன் தம்பி கணேசு வரலை...அவனும் பசியோட வருவான்...செத்த பொறுத்துக்கோ ஒண்ணா சாப்பிடலாம்” என்றபோது எம்.ஜி.ஆர் தன் தாயைக் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தார். எத்தனை உயர்வான அம்மாவை தான் பெற்றிருக்கிறோம். பெறாத பிள்ளைக்காக  பெற்றவனை காத்திருக்கச்சொல்லும் பண்பு இந்த உலகில் யாருக்கு வரும்...கணேசன் வந்தபின்னரே சாப்பாடு பரிமாறினார் சத்தியபாமா. 

அந்த நாட்களில் அண்ணனும் தம்பியும் இரண்டறக் கலந்தனர் என்றால் அது மிகையில்லை. இருவருக்கும் வேலையில்லாத நாட்களில் கணேசனின் நண்பரான இன்னொரு நடிகர் ராதாகிருஷ்ணனுடன் ( பிற்காலத்தில் காகா ராதாகிருஷ்ணன் என சினிமாவில் பிரபலமானவர்) நடந்தே சென்னை தெருக்களைச் சுற்றிவருவார்கள். அந்நாட்களில் ஓரளவு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்ததால் மக்களின் அன்புத்தொல்லையிலிருந்து தப்பிக்க எம்.ஜி.ஆர் ஒரு துண்டை தலையில் முண்டாசு போலக் கட்டிக்கொள்வார். வழியில் நாடகத்தின் எதிர்காலம், தங்களது லட்சியம் ஆசை இவைகளை பகிர்ந்துகொள்வார்கள் அவர்கள். அப்படி சென்னையில் பல நாடகங்களுக்கு கணேசனுடன் எம்.ஜி.ஆர் சென்றிருக்கிறார். 

ஒப்பந்தக் காலம் முடிந்து மங்கல கான சபா ஊரைவிட்டுப் புறப்பட்டபோது கணேசனைப் பிரியமுடியாமல் எம்.ஜி.ஆர் குடும்பம் வேதனைப்பட்டது. தம்பியை பிரிய முடியாமல் அண்ணனும் அண்ணனின் அன்பில் நெகிழ்ந்து தம்பியும் கண்ணீர் விட்டபடியே நின்றனர் ரயில்நிலையத்தில். 

சிவாஜி

ஒரே தட்டில் உண்டு ஒருவர் தாயை மற்றவர் தாயாக மதித்துப் போற்றி வாழ்ந்த அந்த 2 சகோதரர்கள் பின்னாளில் திரையுலகில் இரு துருவங்களாக பிரிந்துநிற்பார்கள் என்பதை யார்தான் அப்போது நினைத்திருப்பார்கள்...

ஆம் ஒற்றைவாடைத் தியேட்டரில் நடிக்க வந்ததன்மூலம் எம்.ஜி.ஆருக்கு அறிமுகமாகி எம்.ஜி.ஆரால் தம்பி என பாசமாக அழைக்கப்பட்ட அந்த கணேசன் யாருமல்ல; பின்னாளில் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு சமமான போட்டியாளராக திகழ்ந்து தம் நடிப்பினால் தமிழ்த்திரையுலகுக்குப் புழ்சேர்த்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான் அவர்! 

- எஸ்.கிருபாகரன் 

                           இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்...
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்