Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“காக்கி என்பது வெறும் நிறம் அல்ல!” விவசாயிகள் மீதான தாக்குதல் முதல் சாமளாபுரம் வரை

காவலர்கள்

“ 'இந்திய போலீஸ் படை' என்ற ஒரேயொரு அமைப்புரீதியான பிரிவு புரிந்துள்ள குற்றங்களுக்கு இணையாக, நாட்டில் எந்த ஒரு சட்டவிரோத அமைப்பும் குற்றங்கள் புரிந்துள்ளதாகக் கூறமுடியாது” - இது, அலகாபாத்  உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆனந்த் நாராயணன் முல்லா சொன்னது.  இந்த வார்த்தைகள், எவ்வளவு சத்தியமானவை என்பதை மணிக்கொரு முறை நிரூபித்துக்கொண்டிருக்கிறது. காவல் படைகளை,  குடிகளைக்  காக்கச் சொன்னால்,  ‘குடி’க்குத் துணை நின்றுகொண்டிருக்கிறது. கொடிகாத்த குமரன் வாழ்ந்த ஊரில், குடி காக்க, குடிகள் மீது வன்முறையை ஏவிக்கொண்டிருக்கிறது

'Police' என்ற பதத்துக்கு, என்ன அர்த்தம் வேண்டுமானாலும் சொல்லி, ‘காக்கி’கள் பெருமை பிதற்றிக்கொள்ளட்டும். ஆனால், அவர்கள் தங்கள் செயல்கள் மூலமாகக் கொடுக்கும் அர்த்தம் என்ன தெரியுமா..? ‘Protecting  Land Lords, Immoral Corporate Entity'. ஆம், காவல்துறை என்ற அமைப்பு கட்டமைக்கப்பட்ட நாளிலிருந்தே, அது என்றும் மக்களுக்கான அமைப்பாக இருந்ததில்லை. பிரிட்டன் காலத்தில் நிலவுடைமையாளர்களையும், ஏகாதிபத்திய நிறுவனங்களையும் காக்கும் அமைப்பாக இருந்தது. இன்று, அதன் நீட்சியாக இருக்கும் பெரும் நிறுவனங்களையும் அதனை அண்டிப் பிழைப்பு நடத்தும் அரசியல் அமைப்புகளையும் காப்பதாகத்தான் இருக்கிறது. 

 

“காக்கி என்பது வெறும் நிறம் அல்ல!”

காவலர்கள்காக்கி என்பது வெறும் நிறமல்ல. அதுவொரு குறியீடு. ஆம், இங்கு ஒவ்வொரு நிறத்துக்குப் பின்னும் ஒரு நீண்ட வரலாறும் பண்பாட்டுக் கதைகளும் உண்டு. நீலம்... சிவப்பு... கறுப்பு... பச்சை என நிறங்கள் வெறும் நிறங்கள் மட்டுமல்ல. அவை, ஓர் இயக்கத்துக்கு, செயலுக்கு,  புரட்சிக்கு, ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டதைக் குறிக்கும் குறியீடு.  எப்போதும், இந்த நிறங்களுக்கு எதிராகவும், இந்த நிறங்களைத் தாங்கிப் பிடிக்கும்  இயக்கத்துக்கு எதிராகவுமே ‘காக்கி’ நின்றிருக்கிறது; நிற்கவும் செய்கிறது. அப்படியெனில், காக்கி எதன் குறியீடு? நிச்சயம், ஆதிக்கத்தின், வன்முறையின்  குறியீடுதான்.

அப்போது, எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு நடைபெற்றுக்கொண்டிருந்தது. விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில்  விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளுடன் போராடிக்கொண்டிருந்தார்கள். போராட்டம் நீண்டுகொண்டேபோனது. என்னதான் பொன்மனச் செம்மலாக இருந்தாலும், மக்கள் போராடுவதை அரசும் அதன் தலைமையும் விரும்ப மாட்டார்கள்தானே...  எம்.ஜி.ஆர் அரசு, விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடிவுசெய்தது.  காக்கிகளுக்கு உத்தரவிட்டது. இதற்காகவே காத்திருந்த காக்கிகள்,   பச்சைத் துண்டு, பச்சைச் சட்டை, பச்சைப் பனியன், பச்சை உள்ளாடை என, பச்சை நிறத்தில் உடை அணிந்தவர்களையெல்லாம் கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். ஆம், பச்சையின் மீது வன்முறையை ஏவியது காக்கி!


காலங்கள் மாறின... அரசு மாறியது.  அது, 2010- ம் ஆண்டு. அப்போது, கருணாநிதி தலைமையிலான அரசு. தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி மாஞ்சோலை கிராமத்தில், நம்மாழ்வார் தலைமையில் உழவர்கள் டி.ஆர்.பாலு குடும்பத்துக்குச் சொந்தமான மதுபான ஆலைக்கு எதிராகப் போராடினார்கள்.  மீண்டும் பச்சையின் மீது வன்முறையை ஏவியது ‘காக்கி’.

இதே காக்கிதான்  1999-ம் ஆண்டு, மாஞ்சோலையில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய சிவப்பின் மீதும், நீலத்தின் மீதும் வன்முறையைப் பிரயோகித்து, 17 பேரை படுகொலைசெய்தது.  இதே காக்கிதான், மெரினாவில் மாணவர்களையும்  மீனவர்களையும் லத்தியாலும், பிறகு கற்களாலும் தாக்கியது. இதே காக்கிதான், இப்போது சாமளாபுரத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக அமைதியாக போரடிக்கொண்டிருந்த பெண்கள் மீது வன்முறையை ஏவியிருக்கிறது. 

அரசுகள் மாறுகின்றன. ஆனால், ‘காக்கி’களும் அதன் குணங்களும் மாறுவதேயில்லை. 

 ‘காக்கிகளைக் கழுவேற்றுவது நியாயமா?’

காவலர்கள்

 

“ஏதோ, ஒருசில காவலர்கள் செய்யும் குற்றங்களுக்காக, அத்துமீறல்களுக்காக மொத்த காவல் துறையையும் குற்றம் சுமத்துவது நியாயமா..? திருச்சியில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அமைதியாகக் கலைத்த  துணை காவல் ஆணையாளர் மயில்வாகனன் போன்றவர்களும் காவல் துறையில் இருக்கிறார்கள்தானே..?”  ஆம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால், துரதிர்ஷ்டமாக இவர்கள் எல்லாம் அங்கொன்றும்  இங்கொன்றும் உதிரிகளாக இருக்கிறார்கள்.  ஒரேயொரு நல்லது இருக்கிறது என்பதற்காக, மொத்த அநீதியையும் பொறுத்துக்கொள்ள முடியாது; அமைதியாகக் கடந்துசெல்ல முடியாது.  

மயில்வாகனன், மாணவர்களுடன் பேசி அமைதியாகக் கூட்டத்தைக் களைத்த அதே நாளில்தான், சென்னையில் ஒரு போலீஸ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, ‘இன்னைக்கு செம்ம வேட்டை... சும்மா பிரி...பிரினு பிரிச்சுட்டோம்” என்று, தாம் நிகழ்த்திய வன்முறையைக் குதூகலமாகப் பகிர்ந்தார். 

 “நீங்கள் என்ன சொன்னாலும்... உங்கள் கட்டுரை ஒரு சார்பாக இருக்கிறது. மக்களைக் காக்கும் பணியில் எத்தனையோ காவலர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், மொத்த காவல் துறையையும் கழுவேற்றுகிறீர்கள்”  என்கிறீர்களா... இல்லை, நிச்சயமாக இல்லை. காவலர்களின் பணிச்சூழல் புரிகிறது. அவர்களுக்கு, மேலிருந்து வரும் அழுத்தம் புரிகிறது. அவர்களுக்கான நெருக்கடி தெரிகிறது. 

மெரினா தாக்குதலுக்கு முந்தைய இரவு, ஒரு பெண் போலீஸ், “சார்... நாளைக்கு காலையில லத்தி சார்ஜ் பண்ணப்போறாங்க சார்... நிறைய கர்ப்பிணிப் பெண்கள் எல்லாம் இருக்காங்க சார்..” என்று அழுதுகொண்டே சொன்னார். அந்த நெகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அடுத்த நாள் என்ன நடந்தது? அவரும்தானே தலைமையின் கட்டளைக்கு அடிபணிந்திருப்பார்.  

”அதிகம் நெகிழுங்கள்”

நான் குறிப்பிட விரும்புவது, காவல்துறை என்ற அமைப்பில் உள்ள சிக்கலை... அந்தச் சிக்கல் ஆட்சியாளர்களுக்கு அடிபணியும் அமைப்பாக மட்டும் இருக்கக்கூடாது என்கிறேன். இன்னும் நெகிழ்ந்து, மக்களுக்கு நெருக்கமாக வேண்டும் என்கிறேன். தவறான கட்டளைகளை இடும் தலைமையைக் கேள்வி கேட்க வேண்டும் என்கிறேன். 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு அடுத்த நாள், முகநூலில் இப்படியாக ஒருபதிவு உலாவியது, “ஜல்லிகட்டுப் போராட்டத்தில் நம் பிள்ளைகளைத் தாக்கிய காவலர்களை, சமூகப் புறக்கணிப்பு செய்ய வேண்டும்” என்றது அந்தப் பதிவு.  இதில், கிஞ்சித்தும் நியாயம் இல்லையென்றாலும், காவல்துறை என்ற அமைப்பு, தன் குறைகளைக் களையவில்லை என்றால், ஒரு நாள் இப்படி நடந்தாலும் நடக்கும்.

இதையெல்லாம் கடந்து, இப்போது ஒரு கவலை தொக்கி நிற்கிறது. அது, அந்தச் சாமளாபுரத்தில் பெண்களைத் தாக்கிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனின் குழந்தைகள் குறித்தான கவலை அது.  இன்று, பள்ளி சென்றிருக்கும் அவர் மகனையோ, மகளையோ, சக மாணவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்..?

இதற்காகவேணும் காவலர்கள் அறத்துடன் நடந்துகொள்ள வேண்டும்!

- மு. நியாஸ் அகமது 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement