வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (12/04/2017)

கடைசி தொடர்பு:19:50 (12/04/2017)

இதற்காகத்தான் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர் அரசு ஊழியர்கள்!

அரசு ஊழியர்கள்

ரசு இயந்திரம் இயங்குவதற்கான அச்சாணியாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் 14 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் அரசின் சேவைகள் முழுமையாக பாதிக்கப்படும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2016-ம் ஆண்டு 10 நாட்கள் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அரசு தரப்பில் அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஊதிய உயர்வு குறித்து பரிசீலிக்கப்படும், வருங்கால வைப்பு நிதி திட்டம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றெல்லாம் கூறினர். எனினும் வாக்குறுதி அளித்தபடி கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து  அரசு ஊழியர்கள் வரும் 25-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப் போவதாக சொல்லி இருக்கின்றனர்.

இடைக்கால நிவாரணம்

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியனிடம் பேசினோம். "ஊதியத்தை மாற்றி அமைப்பதற்கான குழுவை அரசு அமைத்துள்ளது. குழு தமது அறிக்கையை அரசுக்கு அளிக்கும் முன்பு, அனைத்து அரசு ஊழியர்கள் சங்கங்களையும் அழைத்துப் பேசவேண்டும். புதிய ஊதிய மாற்றத்தை அமல்படுத்தும் வரை 2016-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் ஊதியம் கூடுதலாக வழங்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம். கடந்த காலங்களில் ஊதிய மாற்றத்துக்கு முன்பு  3 முறைகள் கூட இடைக்கால நிவாரணம் கொடுத்திருக்கின்றனர்.

நிரந்தர ஊதியம்

கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய பிறகு வருங்கால வைப்பு நிதி தொடர்பாக வல்லுனர் குழு அமைத்திருக்கின்றனர்.  வல்லுனர் குழு இன்று வரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால், ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு பெற்றபின் இறந்து போனவர்களின் குடும்பத்தினர் என சுமார் 5 ஆயிரம் பேர் வரை ஓய்வு ஊதியம் பெற முடியாமல் இருக்கின்றனர். எனவே இந்த வல்லுனர் குழு உடனடியாக அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்துறை, சத்துணவு, அங்கன்வாடி, சமூக நலத்துறை ஆகியவற்றில் சிறப்பு காலமுறை ஊதியம் முறையில் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விதி 110-ன் கீழ் அறிக்கை தாக்கல் செய்தார். அதனைப் பின்பற்றி அரசாணைகள் வெளியிடப்பட வேண்டும். ஆனால், இதுவரை அப்படி எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை. அரசு துறைகளின் தலைவர்கள் இதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். அவர்கள் இதுவரை செய்யவில்லை. சாலை பணியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட காலத்தை முறைப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். நெடுஞ்சாலைதுறை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அவர்தான் இப்போது முதல்வராக இருக்கிறார். எனவே நீங்கள் இதை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.  

அரசு ஊழியர்கள்

நிதி சுமையா?

இந்த கோரிக்கைகளை எல்லாம் முன் வைத்து வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். திருவண்ணாமலையில் நடந்த எங்களது மாநில மாநாட்டில் 3 கட்டப் போராட்டம் குறித்து அறிவித்தோம். அதன் பிறகுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். அப்போது ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கவில்லை.  
அரசுக்கு நிதிச்சுமை இருக்கிறது என்று அரசு தரப்பில் சொல்லப்படவில்லை. நிதி சுமை இருக்கிறது என்று முதல்வரோ அல்லது நிதித்துறை செயலாளரோ சொல்லட்டும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதால் 1,32,000 கோடி நிதி சுமை ஏற்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறினார். ஆனாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு நிதி சுமை இல்லாமல் இருந்தபோதும் அரசு ஊழியர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. திருச்சியில் வரும் 15-ம் தேதி மாநில அளவில் வேலை நிறுத்த ஆயத்த மாடு நடைபெறும். 17ல் இருந்து 21-ம் தேதி வரை வேலை நிறுத்தம் குறித்து பிரசாரம் செய்வோம். திட்டமிட்டபடி ஏப்ரல் 25-ம் தேதி முதல் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கால வரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும்"என்றார்.

-கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்