வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (12/04/2017)

கடைசி தொடர்பு:21:58 (12/04/2017)

"ஓ... தடுக்குறியா'னு சொல்லி அடிச்சாங்க..!" போலீஸ் தாக்குதலுக்குள்ளான ஈஸ்வரி

 

 

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் நேற்று (11-04-17) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதில், திருப்பூர் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன், பெண்களைக் கைகளால் தாக்கியதோடு, ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்திலும் அறைந்தார். இதில், அவர் நிலைகுலைந்துபோனார். காவல் துறையினர் நடத்திய இந்தத் தாக்குதல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காவலர்கள்

 

 

 

 

 

 

 

 

 

ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனால் தாக்குதலுக்கு உள்ளான விசைத்தறி தொழிலாளி ஈஸ்வரியைச் சந்தித்தோம். இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவர், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ''அந்த டாஸ்மாக் கடை அமைக்கப்பட்ட இடம் அதிகமாக விபத்து நடக்கும் பகுதி. மாணவர்கள் பெரும்பாலும் அந்தப் பகுதியைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்வார்கள். எனவே, அந்த இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என ஊர்மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினோம். அப்போது அந்த வழியாக எம்.எல்.ஏ கனகராஜின் கார் வந்தது. உண்மையைச் சொல்லப்போனால், தொகுதிக்குள் அன்றுதான் முதல்முறையாக நான் அவரை நேரில் பார்த்தேன். அவர் காரை வழிமறித்து, 'இதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்' என்று கெஞ்சினோம். 'அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். மேலிடத்தில் இது சம்பந்தமாகப் பேசி நல்ல முடிவை எடுக்கிறேன்' என எங்களுக்கு ஆதரவாக அவர் பேசிவிட்டு, ஓர் ஒரமாகச் சென்று அமர்ந்தார்.

சிறிதுநேரம் கழித்து அவர் காரில் ஏறப் போனார். அதைப் பார்த்த நாங்கள், 'எங்கள்கூடவே இருந்து போராடுவேன் என்று சொன்னீர்கள். ஆனால், தற்போது புறப்படுகிறீர்களே' எனக் கேட்டு அவரை காரில் ஏறவிடாமல் தடுத்தோம். அதற்கு அவர், 'அட போம்மா.. அந்தப் பக்கம்' என்று சொன்னப்படியே என்னைப் பிடித்துத் தள்ளினார். பிறகு, காவல் துறையினர் அவரை மிகவும் பாதுகாப்பாகவும் அவசரஅவசரமாகவும் வழியனுப்பிவைத்தனர். பின்னர் அடுத்த சில நிமிடங்களில், எங்கள் கூட்டத்துக்குள் புகுந்த காவல் துறையினர் எங்கள் எல்லோரையும் அடிக்க ஆரம்பித்தனர். எங்கள் பக்கத்தில் இருந்த ஒரு மூதாட்டியைக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு ஓரமாக நடக்க ஆரம்பித்தோம். அந்த நேரத்தில்தான், என்னைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டவராக நேராக, வேகமாக ஓடிவந்த ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் லத்தியால் என் இடதுகால் தொடையிலேயே அடித்தார்.

காவலர்கள்

மறுபடியும், அவர் என்னை அடிக்க லத்தியை ஓங்கியபோது... 'ஏன் சார் அடிக்கிறீங்க' என்று கேட்டு அவர் லத்தியைப் பிடித்தேன். அதற்கு அவர், 'ஓ தடுக்குறியா..' எனச் சொல்லி என் இடது கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார். அவ்வளவுதான். அதில், நிலைதடுமாறிய நான் அங்கிருந்த கடைக்குப் பக்கத்தில் போய் அமர்ந்துவிட்டேன். இதைப் பார்த்து பரிதாபப்பட்டவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்குப் பிறகு என்னால் வீட்டைவிட்டுச் சுதந்திரமாக வெளியே போகவே முடியவில்லை. அதிக பயமாக இருக்கிறது'' என்று அதிர்ச்சி குறையாமால் பேசும் அவர், கடைசியாக... ''என்னை அறைந்த அந்தப் போலீஸ்காரரை வேலையைவிட்டே நீக்கவேண்டும். அத்துடன், இனி, எங்கள் ஊரில் மதுக்கடையே திறக்கக்கூடாது'' என்ற கோரிக்கைகளை மீண்டும்மீண்டும் முன்வைத்தார் ஈஸ்வரி.

ஈஸ்வரிக்கு இடது காதில் ஏற்கெனவே ஜவ்வு பிரச்னை இருப்பதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் அதற்கான அறுவைச்சிகிச்சையும் எடுத்திருக்கிறார். இந்த நிலையில்தான் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனும் அவருடைய இடது காதின் மீதே அறைந்திருக்கிறார். இதனால் தனது இடது காது சரியாகக் கேட்கவில்லை என்று வேதனைப்படுகிறார் ஈஸ்வரி. 

இப்படிப் பெண்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்த யார் சொல்லிக்கொடுத்தார்களோ?

- தி. ஜெயபிரகாஷ்


டிரெண்டிங் @ விகடன்