அ.தி.மு.க. ஆட்சியை அசைக்குமா பி.ஜே.பி.யின் அடுத்த அஸ்திரம்!?

மோடி- ஓ.பி.எஸ்

"உடன்பட்டு வாங்க.. அல்லது ஒதுங்கிப் போங்க” இதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு இறுதி எச்சரிக்கையாக பி.ஜே.பி கொடுத்திருக்கும் வாய்ப்பு. "இன்னும் சில நாட்களில் தமிழகத்தின் அரசியல் நிகழ்வில் நடக்கப்போகும் மாற்றங்களின் முன்னோட்டம்தான் எடப்பாடிக்கு  பி.ஜே.பி கொடுத்திருக்கும் இந்த சமிக்ஞை" என்கிறார்கள் பி.ஜே.பி வட்டாரங்களை நன்கு அறிந்தவர்கள்.

அ.தி.மு.க-வை அழிக்க கூடாது!

தமிழக அரசியலையும், அ.தி.மு.க-வையும் இப்போது மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஆட்சியையும், கட்சியையும் தங்கள் கன்ட்ரோலில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் பி.ஜே.பி தலைமை கொஞ்சம்கொஞ்சமாக காய்நகர்த்தி வருகிறது. தமிழக அரசை, மத்தியில் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை வைத்து வளைத்து விடலாம்; ஆனால், கட்சியை வளைப்பதற்கு என்ன செய்வது? என்பதுபற்றி தீவிரமாக யோசித்து வருகிறது டெல்லியில் உள்ள பி.ஜே.பி தலைமை. அ.தி.மு.க என்ற கட்சி இருந்தால் மட்டுமே தி.மு.க-வை தட்டிவைக்க முடியும். "தமிழகத்தில் பி.ஜே.பி-யை நிலை நிறுத்த வேண்டுமானால், அ.தி.மு.க தங்களுக்குத் தேவை" என்ற முடிவில் பி.ஜே.பி உள்ளது. இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் பிளானில்தான் இப்போது பி.ஜே.பி இறங்கியுள்ளது. 

ஓ.கே. சொன்ன ஓ.பி.எஸ்!

அ.தி.மு.க-வில் கலகத்தை எதிர்பார்த்து காத்திருந்த பி.ஜே.பிக்கு, சசிகலா குடும்பத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி , அதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தவர் ஓ.பன்னீர் செல்வம். பலனை எதிர்பார்க்காமல் பன்னீரும் காரியத்தில் இறங்கவில்லை என எதிர் அணியினர் அவர் மீது சொல்லும் குற்றசாட்டிற்கு காரணமில்லாமல் இல்லை. பன்னீரின் ஒவ்வொரு அசைவிற்குப் பின்னாலும், பலமான சக்தி இருந்ததை அ.தி.மு.க-வினர் அனைவரும் அறிந்திருந்தனர். அதே பன்னீருக்கு மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கை பி.ஜே.பி-யினரும் அறியாமல் இல்லை.“நமது எதிர்காலத் திட்டத்திற்கு உடன்படும் ஆளாக பன்னீர் இருப்பார்” என்று பி.ஜே.பி நம்பியது. "இந்த முக்கோண திட்டத்தின் அடுத்தடுத்த அரங்கேற்றம்தான், சசிகலா தரப்புக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி தொடங்கி ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துவரை" என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். பி.ஜே.பி. தரப்பில் இருந்து பன்னீர்தரப்பை தொடர்பு கொண்டு சில விஷயங்களை பேசியுள்ளார்கள். அதற்கு பன்னீர் தரப்பும் ஓ.கே சொல்லியுள்ளதாம். “இரண்டு அணிகளும் ஒன்று சேருங்கள், கட்சியையும், சின்னத்தையும் திரும்பப் பெற்று விடலாம். அதன்பிறகு ஆட்சியை நடத்துங்கள். ஜனாதிபதி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை எங்கள் எண்ணப்படி அனைத்தும் நடக்க வேண்டும்” என்ற ரீதியில்தான் பன்னீரிடம் டெல்லிதரப்பு பேசியுள்ளார்கள். 

சசிகலா இல்லாத அ.தி.மு.க!

பன்னீர்தரப்பு இதற்கு ஒப்புக்கொண்டாலும் தினகரன் மற்றும் சசிகலா கையில் கட்சியின் பவர் இருக்கும் வரை, எடப்பாடி தரப்பு தங்களுக்கு உடன்படாது என்பதை பி.ஜே.பி-யிடம் தமிழகத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவர் சொல்லியுள்ளார். “சசிகலா தரப்பை வைத்துக் கொண்டு இரண்டு அணிகளுக்கும் சமரசம் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் செல்வாக்கு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதை அறிந்த  அமைச்சர்கள் சிலரே முணுமுணுத்து விட்டார்கள். அ.தி.மு.க என்ற கட்சியின் பிம்பமாக, ஜெயலலிதாவைத்தான் இப்போதும் அடித்தட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். சசிகலா தரப்பு தொடர்ந்து கட்சியில் நீடித்தால், அ.தி.மு.க என்ற கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிடும் என்று அமைச்சர்கள் கருதுகிறார்கள். இந்த நேரத்தில் சசிகலா மற்றும் தினகரன் மீது அதிரடி அஸ்திரங்களை ஏவி, அவர்களை வீழ்த்தி விட்டால் இரண்டு அணிகளும் ஒன்று சேருவதில் பிரச்னை இருக்காது” என்று அந்த முக்கியப்புள்ளி பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் தினகரன் மீதான வழக்கு விசாரணையை முதலில் வேகப்படுத்த முடிவு செய்துவிட்டது மத்திய அரசு. அதேபோல் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானது குறித்த முடிவும் அவர்களுக்கு எதிராக வரப்போவதாக கூறப்படுகிறது. 

 

பழனிச்சாமி -மோடி

பன்னீர் வித் எடப்பாடி!

பி.ஜே.பி-யின் கணக்கு சரியாக நடந்தால் விரைவில் எடப்பாடி தரப்பிடம் பேச்சுநடத்த பி.ஜே.பி தரப்பில் ஆட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. பன்னீர் தலைமையில் நீங்கள் இணைந்து செயல்படுங்கள் என்று எடப்பாடியிடம் அவர்கள் வலியுறுத்துவார்களாம். இரண்டாம் இடத்தில் எடப்பாடி அமர வைக்கப்படுவார். ஆட்சியும், கட்சியும் பன்னீர் வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. இப்போது அமைச்சரவையிலே தினகரன் ஆதரவு அமைச்சர்கள், எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள், நடுநிலையாளர்கள் என கோஷ்டிகள் உள்ளது. தினகரனின் ஆதரவாளராகத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் இருந்து வந்தார். அவருக்கு கொடுத்த நெருக்கடி மற்ற அமைச்சர்களுக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர்களிடம் "தினகரனை விட்டு தள்ளி நில்லுங்கள். உங்களுக்கு எந்த பிர்சனையும் வராது" என்ற தகவலை பி.ஜே.பி தரப்பு கசிய விட்டுள்ளது. காரணம், தினகரனை தனிமைப்படுத்தினால் மட்டுமே, அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளையும் இணைக்க முடியும் என்ற முடிவில் டெல்லி உள்ளது.

தினகரன் ஆட்சி கலைப்பா?

இத்தனை திட்டங்களையும் போட்டுள்ள பி.ஜே.பி தலைமை ஒருவேளை எடப்பாடி தரப்பு தங்களின் திட்டங்களுக்கு உடன்படாமல் சசிகலா தரப்பிற்கு தொடர்ந்து விசுவாசம் காட்டுவாரேயானால், ஆட்சியை அசைத்துப் பார்க்க தயங்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். விரைவில், தமிழகத்திற்கு ஆளுநரை நியமிக்க முடிவுசெய்துவிட்டது மத்திய அரசு. இதற்குக் காரணமே ஆட்சியில் தலையிடத்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருப்பதால், எந்த முடிவையும் அதன் பிறகு வைத்துக்கொள்ளலாம், இரண்டு ஆண்டுகள் கவர்னர் ஆட்சியை  தமிழகத்திற்கு கொண்டுவந்து, மத்திய அரசின் திட்டங்களை வைத்தே மாநிலத்தில் பி.ஜே.பி-யை வளர்த்து விடலாம் என்று அக்கட்சித் தலைமை கருதுகிறது. வரும் 2019-ம் ஆண்டில், நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டசபைத் தேர்தலையும் நடத்தலாமா? என்ற கணக்கிலும் உள்ளது பி.ஜே.பி. மேலிடம் காய்களை நகர்த்தி வருகிறது.


"இப்போது நாங்கள் அ.தி.மு.க-வை ஆட்சியில் அமர வைத்தாலும் எங்கள் நோக்கம் எதிர்காலத்தில் தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சிக்கு வழிவகை செய்வதுதான்" என்கின்றனர் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள். மேலும் தற்போது பி.ஜே.பி-க்கு தலையாட்டும் பன்னீர், கட்சியை ஒன்று சேர்த்த பின் நேரெதிராக மாறினால், பி.ஜே.பி-யால் என்ன செய்யமுடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர் அடிமட்ட அ.தி.மு,க தொண்டர்கள். இப்படிப்பட்ட சூழலில் “எடுப்பார் கைபிள்ளை” போல  தமிழகத்தின் தற்போதைய நிலை உள்ளது.

-அ. சையது அபுதாஹிர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!