விஜயபாஸ்கரால் துணைவேந்தர் கீதாலட்சுமி பதவியை இழப்பாரா?!

கீதாலட்சுமி

ணப்பட்டுவாடா நடந்ததாக 6 -ம் தேதி இரவு ஆர்.கே.நகர்த் தொகுதி கலவர பூமியானது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த நாள் அதிகாலை வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தி அரசியல் களத்தையே அதிரச்செய்தது. அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி  சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறைசோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் விஜய பாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.

இதனைத்தொடர்ந்து வருமான வரித்துறையின் சம்மனை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய முடியாது என்று கூறியது. இதனைத் தொடர்ந்து மீண்டும் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து நினைவூட்டல் கடிதம் ஒன்றை வருமான வரித்துறை அனுப்பியது. அதில், 'வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை என்றால், வழக்கு  பதிவு செய்யப்படும்' என்று எச்சரிக்கை செய்தது. இதனைத்தொடர்ந்து 12.4.2017 -ம் தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் கீதாலட்சுமி. 7 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய கேள்விகள் இடம் பெற்றதாக சொல்லப்படுகிறது. 

பதவி பறிக்கப்படலாம் ?

திருவண்ணாமலை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டீனாக பணியாற்றியவர் கீதாலட்சுமி. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக கீதாலட்சுமி நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு 'பிசி ராய் 'விருதை மத்திய அரசு கடந்த வாரம் வழங்கி கௌரவித்தது. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த நிலையில்தான் கீதாலட்சுமியின் வீடுகளில் சோதனை நடத்தி முடித்துள்ளது வருமானவரித்துறை. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் அவருடைய பதவி பறி போவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கீதாலட்சுமி

இது குறித்து அரசு துறையில் முக்கியப் பொறுப்பில்  உள்ள அதிகாரி ஒருவரிடம் பேசிய போது ,"வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணத்தில் சில தகவல்கள் சிக்கியுள்ளன. அவை கீதாலட்சுமிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். விஜயபாஸ்கரின் சட்டமன்ற அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தில்  கீதாலட்சுமியின் நடவடிக்கை குறித்து ஒருசில வரிகளில் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில், 'எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் உள்ள 17  ஓ.ஏ பதவிகளுக்காக பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொடுத்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தகவல்கள்தான் அவருக்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்று  கூறுகிறார்கள். இந்த விவகாரத்தை ஆளுநரிடமும் கொண்டு செல்வார்கள் என்று தெரிகிறது. அதனால் அவருடைய துணைவேந்தர் பதவி பறிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதியாகும் வரை பதவியில் இருந்து  விலகி  இருக்குமாறு  சொல்வார்கள்" என்றார் அந்த அதிகாரி.

சஸ்பெண்ட் செய்ய ஆளுநரிடம் மனு !

ஆரம்பத்தில் இருந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துபேசிவரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடசனிடம் பேசியபோது, "எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓ.ஏ பதவிக்காக 32 லட்சம் ரூபாய்  பணம் விஜய பாஸ்கரின் அலுவலகத்துக்கு  நவம்பர் மாதம் வந்துள்ளது. இதன் மூலம் கீதாலட்சுமிக்கு தொடர்பு உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. வருமான வரித்துறை கைப்பற்றிய  ஆவணங்களில் இது மிக தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.  பணியிடமாற்றத்துக்கு கீதாலட்சுமி லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் வேலைகளை முடித்துக்கொடுத்துள்ளார். குறுகிய நாட்களில் அடுத்து அடுத்து பல பதவிகளுக்கு வந்துள்ளார். இவையெல்லாம் அவர் செய்த லாபியின் காரணமாக நடந்துள்ளது. 

குடியரசு தலைவருக்கு மனு ! 

ஜெயராம்  வெங்கடசேன் மேலும் மற்ற துணைவேந்தர்களையும் அழைத்துக்கொண்டு போய் குற்றவாளியான சசிகலாவையும் சந்தித்தவர்தான்  கீதாலட்சுமி. இப்படி பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள கீதாலட்சுமியை துணைவேந்தர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிடவேண்டும் என்று ஆளுநரை அணுகி கோரிக்கை வைக்க உள்ளோம். அது குறித்த ஆவணங்களையும் தயாரித்து வருகிறோம். ஆவணங்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை சந்தித்து மனுவை வழங்க உள்ளோம்" என்றார். 

மருத்துவத்துறை வட்டாரத்தில் கீதாலட்சுமி குறித்து விசாரித்தபோது, பணியிட மாற்றத்துக்கு பணம்பெற்றுக் கொண்டு இடமாற்றம் வழங்கியதாக புகார், விழுப்புரம் சித்தா மருத்துவக் கல்லூரி மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார், மருத்துவ விதிமுறைகள் தெரியாமல் மாணவர்களை பெயிலாக்கியதாக புகார்... எனப் பல்வேறு  புகார்களை  கீதாலட்சுமி மீது சுமத்துகிறார்கள்.கீதாலட்சுமிக்கு பிசி ராய் விருதை மத்திய அரசு அறிவித்தபோது குடியரசு தலைவருக்கு புகார்கள் அடங்கிய அறிக்கை ஒன்றையும் மருத்துவர்கள் குழு அனுப்பியதாகவும் சொல்கிறார்கள்.

'சாமுராய்' திரைப்படத்தில் நாசர் பேசும் டயலாக்தான் நினைவுக்கு வந்தது..."பசிக்காக பன்னை திருடியவனை நடுரோட்டில் நாய் அடிக்கிற மாதிரி போட்டு அடித்தேன். பலகோடி திருடியவனுக்கு பாதுகாப்பு கொடுத்து சல்யூட் அடிக்க வேண்டியுள்ளது!'' 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!