வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (14/04/2017)

கடைசி தொடர்பு:19:40 (14/04/2017)

ஓ.பி.சி கமிஷனை கொண்டு வர மோடி துடிப்பதன் காரணம் இதுதான்..!

மோடி

ரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு சர்ச்சைக்குரிய பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. திட்டக்கமிஷனுக்குப் பதில் நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களின் கிடப்பில் போட்டிருக்கின்றனர். இப்போது பிற்படுத்தப்பட்டோர் நலனிலும் பி.ஜே.பி கைவைத்திருக்கிறது.

ஓ.பி.சி புதிய கமிஷன்

இதரப் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக 'பிற்படுத்தப்பட்டோர் நலன் தேசிய கமிஷன்' செயல்பட்டு வருகிறது. இதனை இப்போது மோடி அரசு 'சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பிற்படுத்தபட்டோருக்கான கமிஷன்' என்ற பெயரில் மாற்றி இருக்கின்றனர். இதற்கான மசோதா லோக்சபாவில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டது. லோக்சபாவில் பி.ஜே.பி-க்கு பெரும்பான்மை இருந்ததால் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் மசோதா எளிதாக நிறைவேறியது.

ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி-க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பை அடுத்து இந்த மசோதா தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசீலனைக்குப் பின்னர், அடுத்த கூட்டத்தொடரில் மீண்டும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

பி.ஜே.பி-யின் திட்டம்

மசோதா நிறைவேறும் பட்சத்தில் மாநில அரசு தன்னிச்சையாக புதிய ஜாதிகளை இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியாது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே புதிய ஜாதிகளை சேர்க்கமுடியும். இது மாநிலங்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக இருக்கிறது என்று எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், பி.ஜே.பி-யின் கணக்கு வேறு மாதிரியாக இருக்கிறது. இப்போது பிற்படுத்தப்பட்டோரின் காவலனாக பி.ஜே.பி தம்மை காட்டிக் கொள்கிறது. குறிப்பாக உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றிக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்குகள் முக்கிய காரணமாக இருந்தன. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைக் குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளில் பி.ஜே.பி இறங்கி உள்ளது. எனவே, இந்த மசோதாவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் பி.ஜே.பி ஆர்வமாக இருக்கிறது.

ஜனநாயகம் பற்றி தெரியாத மோடி

இந்நிலையில் இதரபிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த பி.ஜே.பி எம்.பி-க்கள் மத்தியில் பேசிய மோடி, "லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும். அவர்கள் சமூக ரீதியாக அதிகாரம் பெறுவதற்கும் வழி வகுக்கும். ஆனால், இந்த மசோதாவுக்கு ராஜ்சபாவில் எதிர்கட்சிகள் ஏன் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த மசோதாவில் உள்ள நல்ல அம்சங்கள் குறித்து எம்.பி-க்கள் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இந்த மசோதா அவர்களின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்"  என்று கூறி உள்ளார்.
மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத், "மோடிக்கு ஜனநாயகம் என்பதன் பொருள் விளங்கவில்லை. ராஜ்யசபாவுக்கு என சில கருத்துக்கள் இருக்கின்றன. இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்யவேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதிக அளவு மக்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கவேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் விருப்பம். ஏற்கெனவே பட்டியலில் இருக்கும் சமூகத்தினருக்கும் எந்தப் பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதும் எங்கள் கவலையாக இருக்கிறது. அதனால்தான் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தோம்" என்றார்.

-கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்