வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (14/04/2017)

கடைசி தொடர்பு:08:27 (14/04/2017)

''தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் நான்தான்!'' - யாருக்கு இந்த அதீத தன்னம்பிக்கை?

முதல்வர்

ருமான வரி சோதனை, இடைத் தேர்தல் ரத்து, 'தமிழக அரசு கலைக்கப்படும் வாய்ப்பு உள்ளது' என்ற 'முன் அறிவிப்பு' என அடுத்தடுத்த அதிரடி செய்திகளால பரபரத்துக் கிடக்கிறது தமிழக அரசியல் நிலவரம். இந்தநிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து, 'முறைகேடுகளில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக் கோரி புகார் மனு கொடுத்துள்ளார்  அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. அவருடன் பேசினோம்....

''இப்போது திடீரென டி.டி.வி தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்க என்ன காரணம்?''

''அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக நான் இப்போதும் தொடர்கிறேன். ஆனால், என்னை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து எடுத்துவிட்டதாக சசிகலா நடராஜன் தரப்பினர் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். அப்படி முறையான எந்தவொரு அறிவிப்பு கடிதமும் இதுவரை எனக்கு வரவில்லை. தேர்தல் ஆணையத்துக்கும் இதுகுறித்து எந்தவித தகவலையும் அவர்கள் கொடுக்கவில்லை. அதனால்தான் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்வுக்கு நானும்  நாமினேஷன் மனுவை எனது தரப்பில் கொடுக்க முயற்சித்தேன். ஆனால், அவர்கள் திட்டமிட்டே எனது மனுவை வாங்காமல், எனது தரப்பினரையும் அடித்துக் காயப்படுத்திவிட்டார்கள். 'இந்த அராஜகங்களையெல்லாம் நீங்களே பார்த்திருப்பீர்களே...?' என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் கேட்டேன். அவரும் 'ஆமாம்' என்று ஒப்புக் கொண்டார். மேலும், பொதுச்செயலாளராக சசிகலா நடராஜனை நியமனம் செய்தவர்களிலேயே பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், எதிரணியாகத் திரும்பிவிட்டனர். எனவே, சசிகலா நடராஜன் தேர்வே செல்லாததாக இருக்கும்போது, அவரால் தேர்வு செய்யப்பட்ட டி.டி.வி தினகரன் உள்ளிட்டவர்களின் பொறுப்புகளும் செல்லாது என்பதை எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு மனு செய்திருக்கிறேன்.

சசிகலா புஷ்பா

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரிச்சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள 29 பக்க ரிப்போர்ட்டில், 'டி.டி.வி தினகரன் என்ற வேட்பாளருக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா செய்தவர்கள் குறித்தப் பட்டியலில் அமைச்சர்கள் பலரது பெயரும் இடம் பெற்றிருப்பதாக'க் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனவே சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பீர்களா? என்றும் தேர்தல் ஆணையரிடம் கேட்டேன். 'கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவரும் உறுதி கொடுத்திருக்கிறார்.''

''டெல்லி பி.ஜே.பி-யின் தூண்டுதலின்பேரில்தான் நீங்கள் சசிகலா நடராஜனுக்கு எதிராக செயல்படுவதாக சொல்லப்படுகிறதே?''

''நான் ஒரு எம்.பி. ஆரம்பத்தில் இருந்தே சசிகலா நடராஜன் தரப்புக்கு எதிராகத்தான் நான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். சசிகலா நடராஜன் தரப்புக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கும் எனது ஆதரவை தெரிவித்து வருகிறேன். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா நடராஜன் தரப்பை எதிர்த்து வெளியே வந்ததும் அவருக்கும் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தேனே...! ஆனாலும் அவர்களோடு இணைந்துகொள்ளவில்லை. நான் எப்போதும் நடுத்தரமாகவே இருக்க விரும்புகிறேன். 

'நீங்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவானவரா? அல்லது சசிகலா நடராஜன் தரப்புக்கு ஆதரவா...?' என்று  தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியும் என்னிடம் கேட்டார். 'நான் யாருடைய சார்பும் கிடையாது. தமிழ்நாட்டில், நடக்கிற தவறுகளை அரசியலமைப்பு உறுப்பினர் என்ற முறையில் உங்களிடம் தெரிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது' என்று பதில் கூறினேன். மற்றபடி இதற்குப் பின்னே பி.ஜே.பி, காங்கிரஸ், தி.மு.க என்று கட்சிகள் ஏன் இருக்கவேண்டும்?''

''இதுபோல், எதிராகப் பேசிவந்தவர்களேகூட அடுத்தடுத்த சூழ்நிலை மாற்றங்களின்போது, சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து சமாதானம் ஆன உதாரணங்கள் உள்ளன. உங்களிடமும் பேரம் பேசப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்தச் சூழ்நிலையில், உங்களது தற்போதைய நிலைப்பாட்டினை எப்படி எடுத்துக்கொள்வது?''

சசிகலா புஷ்பா

''ஆரம்பத்தில் இருந்தே என்மீது பொய் வழக்குகளைப் போட்டதோடு, ஒருசிலரை வைத்து என்னை மிரட்டியும் பார்த்துவிட்டனர். என்னை எப்படியாவது கைது பண்ணிவிட வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது. நீங்கள் கூறுவதுபோல், என்னிடம் யாரும் பேரமும் பேசவில்லை. அதற்கு அடிபணிந்து போகிற ஆளும் நான் இல்லை. எப்போதும் நான் நியாயத்தின் பக்கம்தான். ''

''எதிர் அணியினர் இதுபோல் மிரட்டல் விடுக்கும் சூழலில், நீங்கள் ஏன் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கோ அல்லது தீபா அணியினருக்கோ ஆதரவு கொடுக்கவில்லை?''

''பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான் கட்சி மாறி வேறு ஒரு கட்சியில் இணையமுடியாது. அடுத்ததாக, தமிழ்நாட்டில் இன்றைய சூழலில், மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. விரைவில் தமிழ்நாட்டு சூழல் ஒரு முடிவுக்கு வரப் போகிறது. ராஜ்ய சபா உறுப்பினராக பணியாற்ற வேண்டிய காலமும் கடமையும் எனக்கு இருக்கும்போது நான் ஏன் அவசரப்பட்டுப் போய் இன்னொரு கட்சியில் சேர வேண்டும்? அல்லது அவருக்கு சப்போர்ட், இவருக்கு ஆதரவு என்று ஏன் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்?

தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலில், தலைமை இல்லாமல் வெற்றிடம் இருக்கிறது. நல்லதொரு தலைமைக்காக மக்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள். இன்றைக்கு ஓ.பன்னீர்செல்வத்தையே எடுத்துக்கொண்டால்கூட அவருக்கு தனிப்பட்ட விதத்தில் பிரச்னை என்று வந்தபிறகுதான் சசிகலா நடராஜனை விட்டு வெளியே வந்தார். ஆனால், 'சசிகலா புஷ்பா நல்ல துணிச்சலான பெண்ணாக யாருக்கும் அடிபணியாமல், தனது கொள்கையில் உறுதியோடு நின்று போராடுகிறார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே அவருக்கு எதிராக உறுதியாக தனது நிலைப்பாட்டில் நின்றார்.' என்றெல்லாம் மக்கள் மத்தியில் என்னைப் பற்றி ஒரு நல்ல பெயர் இருக்கிறது. அதனால், மக்களின் எண்ணத்துக்கு மாறாக யாரிடமும் போய் நான் சரண்டர் ஆகமாட்டேன்.''

''உங்கள் தலைமையை தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறீர்களா?''

''நான் மதிக்கிற தலைமை என்பது, மக்கள் மதிக்கிற தலைமையாக இருக்கவேண்டும் என்று சொல்ல வருகிறேன். தனிப்பட்ட எனது நலனுக்காக யாரிடமும் சமரசம் ஆகமாட்டேன் என்று சொல்கிறேன். எவ்வளவு எதிர்ப்புகள் பிரச்னைகள் வந்தாலும் யாருக்கும் பயப்படாமல் உறுதியாக நின்று தான் நினைத்ததை  முடித்துக்காட்டியவர் என்ற நல்ல பெயர் ஜெயலலிதாவுக்கு உண்டு. அதுதான் அவரது தலைமைப் பண்பின் தகுதியாகவே இருந்தது. அந்த வரிசையில் இன்றைய தேதியில், தமிழ்நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். 'இந்தப் பொண்ணு வந்தாகூட தமிழ்நாடு நல்லாருக்கும்பா' என்ற அளவுக்கு அவர்களது ஆதரவு எனக்கு இருக்கிறது. அதனால், நான் 'உம்' என்று சொன்னால் போதும்....''

''தமிழகத்தின் முதல்வராக சசிகலா புஷ்பாவை மக்கள் தேர்ந்தெடுத்துவிடுவார்களா?''

சசிகலா புஷ்பா

''ஆமாம்.... 'நீங்கள் கட்சி தொடங்குகிறீர்களா? நாங்கள் உங்கள் ஃபேன். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம். நீங்கள்தான் எங்கள் சி.எம்-மாக வரவேண்டும்' என்றெல்லாம் நிறைய இடங்களில் மக்கள் என்னிடம் சொல்கிறார்கள். இதையெல்லாம் பெருமைக்காக நான் சொல்லவில்லை.  10 சதவிகித மக்கள் சொல்வதை வைத்துக்கொண்டு நான் ஒரு முடிவுக்கும் வரமுடியாது. தமிழக மக்கள் அனைவரது எதிர்பார்ப்பும் என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன். தக்க சூழ்நிலை வரும்போது பெரிய அளவில் களத்தில் இறங்குவேன்.''

''அ.தி.மு.க-வைக் கைப்பற்றி தமிழகத்தின் அடுத்த முதல்வராக சசிகலா புஷ்பா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கலாமா?'' 

''சின்னம் எல்லாம் முடக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில், அ.தி.மு.க என்ற கட்சியே நிலைத்திருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால், எந்தக் கட்சியிலிருந்து முதல்வராக வருவேன் என்பதையெல்லாம் சொல்லமுடியாது. ஆனால், தமிழகத்தின் முதல்வர் ஆவதே என் லட்சியம்!''
 

- த.கதிரவன்


டிரெண்டிங் @ விகடன்